Home » போர் நிறுத்தம் தாமதம்: காசாவில் போர் உக்கிரம்

போர் நிறுத்தம் தாமதம்: காசாவில் போர் உக்கிரம்

by sachintha
November 24, 2023 6:10 am 0 comment

போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளின் விடுதலை இன்றைய தினத்திற்கு (24) ஒரு நாள் பிற்போடப்பட்ட நிலையில் காசாவில் நேற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் போர் நடவடிக்கைகள் உக்கிரம் அடைந்திருந்தது.

வடக்கு காசாவின் போர் வலயத்தில் இருந்து பகல் நேரத்திலும் கரும்புகை வானை மறைத்தது. பணயக்கைதிகளின் விடுதலையுடன் இணைந்தே போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதாக இஸ்ரேல் கூறிய நிலையில், அது இன்று வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் காசா மீது 300 வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியதோடு, பலஸ்தீன போராளிகளால் ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் காசாவை ஒட்டிய இஸ்ரேலின் எல்லைப் பகுதிகளில் சைரன் ஒலி எழுப்பப்பட்டது.

இஸ்ரேல் காசாவின் வடக்கு பகுதிகள் மற்றும் தெற்கு நகரான கான் யூனிஸ் மீது தாக்குதல்களை நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வடக்கில் உள்ள மக்களை தெற்கு காசாவுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்ட நிலையில் கான் யூனிஸில் பெரும் எண்ணிக்கையான மக்கள் அடைக்கலம் பெற்றுள்ளமை குறப்பிடத்தக்கது.

“எமது பணயக்கைதிகளை விடுவிக்கும் பேச்சுவார்த்தை மேலும் முன்னேற்றம் கண்டு வருகிறது” என்று இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ட்சாச்சி ஹனக்பி வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. “தரப்புகளுக்கு இடையே எட்டப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவான விடுதலை ஆரம்பிக்கப்படும். அது வெள்ளிக்கிழமைக்கு முன்னர் இடம்பெறாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏழு வாரங்கள் நீடிக்கும் இந்தப் போரின் முதல் போர் நிறுத்த உடன்படிக்கையின்படி காசாவில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருக்கும் 50 பெண்கள் மற்றும் சிறுவர்கள் விடுவிக்கப்படவிருப்பதோடு அதற்கு பகரமாக இஸ்ரேலிய சிறையில் இருக்கும் 150 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்படவுள்ளனர்.

இந்த உடன்படிக்கை கடந்த புதன்கிழமை (22) காலையில் அறிவிக்கப்பட்டபோதும், ஒருநாள் கடந்துள்ள நிலையிலும் போர் நிறுத்தம் ஆரம்பமாகும் உத்தியோகபூர் நேரம் வெளியிடப்படவில்லை. இந்த நான்கு நாள் தற்காலிக போர் நிறுத்தத்திற்காக மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார், அதற்கான நேரம் சில மணி நேரங்களில் அறிவிக்கப்படும் என்று நேற்று தெரிவித்திருந்தது.

இந்த போர் நிறுத்தம் நான்கு நாட்களை தாண்டியும் நாளுக்கு 10 பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வகையில் நீடிக்க முடியும் என்று இஸ்ரேல் கூறியிருந்தது. இரண்டாவது கட்ட பணயக்கைதிகள் விடுதலை மாத நிறைவில் 100 பேர் வரை விடுவிக்கும் வகையில் அமைந்திருக்கும் என்றும் பலஸ்தீன தரப்பை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் போர் நிறுத்தம் முடிந்த பின் மீண்டும் போருக்கு திரும்புவதாக இரு தரப்பும் குறிப்பிட்டுள்ளன.

“நாம் போரை முடிக்கப்போவதில்லை. எமது வெற்றி வரை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்” என்று இஸ்ரேலிய இராணுவ தலைமை பணியாளர் லுதினன்ட் ஜெனரல் ஹர்சி ஹெலவி கட்டளை தளபதிகளுக்கு வெளியிட்ட வீடியோ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பலஸ்தீன போராளிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி நடத்திய தாக்குதலில் 1,200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு 240 பேர் வரை பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்தே போர் வெடித்தது. அது தொடக்கம் காசா மீது இஸ்ரேல் வான், கடல் மற்றும் தரை வழியாக இடைவிடாது நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 14,000ஐ தாண்டியுள்ளது. இதில் 40 வீதமானவர்கள் சிறுவர்களாவர்.

தொடரும் உயிரிழப்புகள்

போர் நிறுத்தம் ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மற்றொரு நாளாக போர் நீடித்தது. காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருந்தன.

காசாவின் தெற்கில் உள்ள பிரதான நகரான கான் யூனிஸ் மீது நேற்று இடம்பெற்ற வான் தாக்குதல்களில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் இராணுத்தின் முற்றுகையில் உள்ள இந்தோனேசிய மருத்துவனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர். இந்த மருத்துவமனையில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கு இஸ்ரேல் இராணுவம் நான்கு மணி நேர கெடு விதித்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையின் பணிப்பாளர் முஹமது அபூ சலிமாவை இஸ்ரேல் இராணுவம் நேற்று கைது செய்துள்ளது.

அந்த மருத்துவமனை வளாகத்தின் மீது பல வாரங்கள் குண்டு வீசிய இஸ்ரேல் இராணுவம் கடந்த வாரம் மருத்துவமனைக்குள் ஊடுருவிய நிலையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

மற்ற மருத்துவப் பணியாளர்களுடன் வடக்கு காசாவில் இருந்து தெற்கை நோக்கி பயணிக்கும் வழியிலேயே அபூ சலிமா கைது செய்யப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் இரு மருத்துவர்கள் மற்றும் தாதியர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கைதை கடுமையாகக் கண்டித்திருக்கும் ஹமாஸ் அமைப்பு, அவரின் விடுதலைக்காக செயற்படும்படி சர்வதேச செம்பிறை சங்கம் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறும்படி கடந்த சனிக்கிழமை உத்தவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அங்கு இருந்து ஆயிரக்கணக்கான நோயாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் அடைக்கலம் பெற்றோர் ஓரளவுக்கேனும் பாதுகாப்புத் தரும் தெற்கு காசாவை நோக்கி வெளியேற ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம் தாமதிப்பதற்கான முழு விளக்கத்தை இஸ்ரேலிய அதிகாரிகள் வழங்காதபோதும் பணயக்கைதிகளின் விடுதலையை ஆரம்பிப்பதற்கான முழு ஏற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு லெபனானில் இருந்து பெரும் தாக்குதலை எதிர்கொண்டாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அப்பர் கலிலீ பகுதி மீது சுமார் 50 ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் தெற்கு இஸ்ரேல் மீது இடம்பெற்ற மிகப் பெரிய தாக்குதல் இதுவென்று இஸ்ரேலிய இராணுவ வானொலி தெரிவித்துள்ளது.

லெபனான் எல்லையை ஒட்டிய இஸ்ரேலிய சிறு நகர்கள் மீது சைரன் ஒலி எழுப்பப்பட்டதோடு மனரா பகுதியில் இருந்து வீடுகள் மீது நேரடியாக குண்டுகள் விழுந்துள்ளன. எனினும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அந்த வானொலி கூறியது.

காசா போரின் எதிரொலியாக, மேற்கு ஆசிய பகுதிகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஈராக்கில் இருந்து செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் அமெரிக்க இராணுவ நிலைகளில் தாக்குதல் நடத்தினர்.

முதல்முறையாக குறுகிய தொலைவு ‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல் நடத்தினர்.

அதற்குப் பதிலடியாக, அல் அன்பார் மற்றும் ஜுர்ப் அல் சாக்கர் பகுதிகளுக்கு அருகே உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் செயல்பாட்டு மையங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின என்று அதிகாரிகள் கூறினர்.

சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது கடந்த மாதம் 17ஆம் திகதியிலிருந்து இதுவரை 66 முறை ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT