8 வார தொடர் நொமினேஷனின் பின் விடைபெற்றார் பொன்னம்பலம் | தினகரன்


8 வார தொடர் நொமினேஷனின் பின் விடைபெற்றார் பொன்னம்பலம்

 

பிக்பாஸ் வீட்டிலிருந்து சித்தப்ஸ் என்று அன்புடன் அழைக்கப்பட்டவரும், ‘பொரியல்’ என்கிற சங்கேத அடையாளத்தைக்கொண்டவருமான பொன்னம்பலம் இன்று வெளியேற்றப்பட்டார். 

நிகழ்ச்சியின் இறுதியில் அவரே தொகுத்துக் குறிப்பிட்டிருந்தபடி, இன்று கமல் பேசியிருந்த இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. 

ஒன்று, அண்டை மாநிலத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சோகம். கடவுளின் தேசம் க(த)ண்ணீர் தேசமாக மாறிக்கொண்டிருக்கிறது. சில பல கலாசார வேற்றுமைகளைக்கொண்டிருந்தாலும் அரசியலால் பிரிந்திருந்தாலும் ஒரு தேசத்தவராக ஒன்றுகூட வேண்டிய தருணமிது. கேரளத்திற்கு நன்கொடை தர வேண்டிய வேண்டுகோளை கமல் முன்வைத்தார். அவரும் விஜய்டிவியும் இணைந்து ரூ.50 லட்சத்தை நன்கொடையாக அளித்திருப்பது நல்ல முன்னுதாரணம். 

இரண்டாவது, கிராமப் பஞ்சாயத்துகளின் முக்கியத்துவம். உள்ளாட்சி நிர்வாகத்தில் தமிழகம் முன்னோடியாக இருந்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குடவோலை முறையில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மைய அரசின் உதவியையும் நிதியையும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்காமல் கிராம சபைகளே தன்னாட்சி அதிகாரத்துடன் பல அதிசயங்களைச் செய்ய முடியும். 

இதைப் பற்றிய பரப்புரையை கமல் முன்னெடுத்திருப்பது சிறப்பானது. ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15, மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாள்களில் கிராம சபை நடத்தப்படும். இதைப் பற்றிய விழிப்புஉணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பிக்பாஸ் விளையாட்டு ஒன்று நடக்க வேண்டும் என்று போட்டியாளர்களைக் கமல் கேட்டுக் கொண்டது நன்று.

**

யாஷிகா மற்றும் மஹத்திடம் உபதேசம் செய்து விட்டு கமல் கிளம்பியதும் நடந்த சம்பவங்கள் காட்டப்பட்டன. 

தூண்டப்பட்டால், மிக மிக அவசியமான நேரங்களில், பெண்கள் தங்கள் மனதில் உள்ள உண்மைகளை பொதுவில் பேசி விடும் துணிச்சலையும் நேர்மையையும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் அந்த நேரத்திலும் பாதுகாப்பு உணர்ச்சியோடு தடுமாறுகிறார்கள். மஹத் மீதிருக்கும் காதலை யாஷிகா, பட்டவர்த்தனமாக சபையில் ஒப்புக்கொள்ளும் போது மஹத் அதை மென்று முழுங்கி ‘நட்பிற்கும் மேலே’ என்கிற டெட்டால் போட்ட வார்த்தையில் கழுவி ‘வெளியே ஒரு உயிர் இருக்கு’ என்று பாதுகாப்பாகப் பேசினார். 

மஹத் - மும்தாஜ்

இனி சம்பவங்களின் தொடர்ச்சியைப் பார்க்கலாம். யாஷிகாவுக்கும் நெருக்கமான ஓர் ஆண் நண்பன் இருப்பது கடந்த நாள்களில் எங்கோ ஓரிடத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த நினைவிருக்கிறது. இதைக் குறிப்பிட்ட மஹத், ‘யாஷிகாவுக்கும் ஒரு boy friend இருக்கிறார். ஆனால் ஏன் அவர் அதை சபையில் சொல்லவில்லை?’ என்கிற குழப்பத்தில் இருக்கிறார். இதைப் பற்றிய புலம்பலை ஐஸ்வர்யாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“அவளோட உணர்வுக்கு தலை வணங்கறேன். துணிச்சலா சொல்லியிருக்கா. அவங்களுக்குள்ள என்ன புரிதல் இருக்குன்னு தெரியலை. ஆனா சொல்லாம இருந்ததையும் நான் சப்போர்ட் பண்ணலை’ என்று ஜாக்கிரதையாக ஆறுதல் சொன்னார் ஐஸ்வர்யா. “அவ திட்டமிட்டு அப்படிச் சொல்லாம இருந்திருக்க மாட்டா. சரி. விடு. கடவுள் பார்த்துப்பான்’ என்று சுயஆறுதல் கூறிக்கொண்ட மஹத்தால் பிறகு அவ்வாறு அமைதியாக இருக்க முடியவில்லை. 

படுக்கையறையின் உள்ளே வந்த யாஷிகாவை வைஷ்ணவி மனம் திறந்து பாராட்டினார். “எனக்கு கூட அந்த தைரியம் வந்திருக்காது. நீ ரொம்ப முதிர்ச்சியா நடந்துக்கிட்ட. உன் நேர்மையைப் பாராட்டுகிறேன்” என்பதாக அவரது பாராட்டு அமைந்தது. ஜனனியும் பாராட்டினார். “எனக்கும் அந்த தைரியம் இல்லைதான். ஆனா என்னால ஒருத்தர் பேரு கெட்டு விடக்கூடாதில்லையா?” என்பது போல் யாஷிகா சொல்ல, இந்த விஷயம் ஐஸ்வர்யாவின் வழியாக மஹத்திற்கு சென்றது. 

“என்னைக் காப்பாத்தறதுக்கு சொன்னாளா, குழப்பமா இருக்கே’ என்று தவித்த மஹத், இதைப் பற்றி யாஷிகாவிடமே பேசினார். “உனக்கு ஒரு காதலன் இருக்கான். எனக்கொரு காதலி இருக்கா –ன்னு ரெண்டு பேருக்குத் தெரியும். அப்படியொரு பரஸ்பர புரிதல் இருந்ததில்லையா?” என்று விசாரிக்க “ஆமாம். உனக்கு என்னால எந்த அசிங்கமும் வரக் கூடாது. இதுக்கு மேல நிலைமை மோசமாகி விடக்கூடாது’ன்னு அப்படிச் சொன்னேன். இதுக்கு மேல உன் பேரை நீதான் காப்பாத்திக்கணும்’ என்று யாஷிகா விளக்கமளித்தார். 

இன்னமும் குழப்பம் தீராத மஹத் தனியாகச் சென்று உலவ, அவரை விசாரிக்க வந்த மும்தாஜிடம் மறுபடியும் புலம்பினார் மஹத். ‘என்னைக் காப்பாத்தத்தான் அப்படிச் சொன்னேன்னு சொல்லியிருக்கா. அவளுக்கு பாய் ஃபிரண்ட் இருக்கான்னு சொன்னா அவ பேரு இன்னமும் கெட்டுப் போயிடும். அதனாலதான் நான் வாயைத் திறக்கலை. ‘நட்பிற்கும் மேலே’ என்று மட்டும் சொன்னேன்” என்று மஹத் சொல்ல, “யாஷிகா நெறைய விஷயங்கள்ல புத்திசாலியான பொண்ணு. நல்ல முதிர்ச்சியிருக்கு. ஆனா சில விஷயங்கள்ல அவளுடைய புரியும் தன்மை குறைவா இருக்கு. எமோஷனல் ஆயிடறா” என்று ஆறுதல் அளித்தார் மும்தாஜ்.

கமல் ஹாசன்

இதைப் பற்றி ஐஸ்வர்யாவிடம் மறுபடியும் விசாரித்த மஹத் “இந்த விஷயத்தை உன் கிட்ட மட்டும் பேசியிருக்கலாமே. எதுக்குப் பொதுவுல சொல்லணும்” என்றார். மஹத்தின் அபிப்பிராயம் நியாயமாக இருந்தது. 

இருந்தாலும் என்னளவில் யாஷிகாவின் தரப்பை நான் இவ்வாறு புரிந்துகொள்கிறேன். “மஹத் –யாஷிகாவின் இடையில் ஏற்பட்டிருக்கும் உறவில் இருவரின் பங்கும் இருக்கிறது. மற்றவர்கள், குறிப்பாக மஹத்தின் காதலி, மஹத்தின் பக்கம் மட்டும் தவறு இருக்கலாம்’ என்று தவறாகக் கருதிவிடக் கூடாது என்பதற்காக ‘என் பங்கும் இருக்கிறது’ என்று சபையில் ஒப்புக் கொள்வதன் மூலம் ஒருவகையில் மஹத்தைக் காப்பாற்றியிருக்கிறார். இதை மஹத்தால் புரிந்துகொள்ள முடியவில்லை’ என்பது என் யூகம். 

**

அகம் டிவி வழியே உள்ளே வந்தார் கமல். ‘வஞ்சப்புகழ்ச்சி அணி’ன்னா தெரியுமா?” என்று கேட்டு மக்கள் மெளனமாக இருக்கவே அதற்கு விளக்கம் தந்தார். ‘இது தொடர்பான விளையாட்டைத்தான் இன்று விளையாடப் போறோம்’ என்று சொல்லி இரண்டிரண்டு பேர் கொண்ட அணியாக ஆட்களைப் பிரித்தார். 

இந்த விளையாட்டு ஓரளவுக்குச் சிறப்பாக இருந்தாலும் சிலர் இதன் அடிப்படையைப் புரிந்துகொள்ளவில்லை என்று தோன்றுகிறது. வஞ்சப்புகழ்ச்சியில் பாராட்டு மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், மறைமுகமாக அது எதிர்த்தரப்பை இடித்துரைப்பதாகவோ, கிண்டலடிப்பதாகவோ, அவரது பிழைகளை குத்திக் காண்பிப்பதாகவோ இருக்க வேண்டும். ஆனால், சிலர் இதிலிருந்து விலகி நேரடியாகவும் பேசி விட்டார்கள். 

உதாரணத்திற்கு முதலில் துவங்கிய ரித்விகாவின் பேச்சையே குறிப்பிடலாம். டேனியை நோக்கிப் பேசிய இவர்.. “நீங்க பண்ற டாஸ்க்லாம் சூப்பரா பண்றீங்க. வேற லெவல். பிக்பாஸ்ஸூக்கு மேல யோசிக்கறீங்க. ஆனா நிறைய சத்தம் போடறதால மத்தவங்க டிஸ்டர்ப் ஆவறாங்க. ஆனா குறுக்கு வழியெல்லாம் உபயோகிக்கறீங்க. ஆனா சத்தம் போடாம பண்ணுங்க” என்றெல்லாம் அவர் சொன்னதில் சில புகார்கள் நேரடித்தன்மையுடன் இருந்தன. இது வஞ்சப்புகழ்ச்சி அணி அல்ல. ‘கொஞ்ச’ புகழ்ச்சி அணி. 

பிக்பாஸ்

ரித்விகாவுக்கு பதில் சொன்ன டேனியின் கிண்டல்களில் இந்த மீட்டர் ஏறத்தாழ சரியாகப் பொருந்தியிருந்தது. ‘ரித்விகாவைப் போல் ஒரு நியாயமான மனுஷியைப் பார்த்ததில்லை. பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் அன்னப்பறவையைப் போல நீதி, நேர்மையை சரியாக எடுத்துக்கொள்வார். உள்ளே அந்தக் கனல் இருந்து கொண்டே இருக்கும். நியாயத்திற்காகப் போராடும் தலைவி” என்று சொன்னதன் மூலம் ரித்விகாவும் சமயங்களில் மாற்று வழிகளில் செல்வதை குறிப்பிட்டுக் காட்டினார். 

“சூப்பர் நீங்க.. எனக்கு ரொம்பப் பிடிச்சதே.. நீங்க டாய்லெட் கழுவறதுதான். எல்லார் கிட்டயும் ஜாஸ்தியா அன்பு காட்டறீங்க உங்க மனசு யாருக்கும் கிடையாது” என்று மும்தாஜை வாரினார் மஹத். பதிலுக்கு மும்தாஜ் மஹத்தின் மீது தூவிய பொடி மிட்நைட் மசாலா. “உங்க கிட்ட இருக்க எனர்ஜி யார் கிட்டயும் அல்ல. ஆனா அது சாயந்திரத்திக்கு மேலதான் அதிகமா வருது. வேற லெவல்” என்றார் வில்லங்கமாக. ‘எனக்கும் அதே சந்தேகம்தான்’ என்றார் மஹத், வெட்கத்துடன். (இப்படி நீண்ட நாள்களாக பார்வையாளர்களை உசுப்பேற்றிக் கொண்டே இருப்பதற்கு பதிலாக ‘குறும்படத்தை’ போட்டுத் தொலைத்து விட்டால் ஒரு ஜோலி முடியும்). 

“உங்க கிட்ட எல்லாமே அழகு மாமா. உங்க காமெடி வொண்டர்ஃபுல். டர்.. புர் –ன்னு கலக்கறீங்க. காமெடி பார்க் நீங்க” என்று சென்றாயன் பாலாஜியைக் கிண்டலடிப்பது போல் எதையோ சொல்லி வைக்க, பாலாஜி சர்காஸ்டிக்காக வாரினார். “எத்தனையோ பேருக்கு இந்த ஷோவுக்கு வர்ற வாய்ப்பு இல்லாம தவிக்கறாங்க. உங்களுக்குக் கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம். நிச்சயமா நீ ஜெயிடுச்சுவடா” என்றார்.

இப்படியே ஒருவரையொருவர் வாரிக்கொள்ள முயன்றார்கள். ஆனால் சிறப்பான ‘வாரியத்தலைவராக’ எவரையும் சொல்ல முடியவில்லை. “இப்பத்தான் உண்மை கிட்ட நெருங்கி வர்றீங்க.. முன்னாடி இறுகிப் போய் பாம்பே அல்வா மாதிரி ஆகி இருந்தீங்க” என்று கிண்டலடித்த கமல், சரி ‘எவிக்ஷன்’ மேட்டருக்குப் போயிடலாமா?’ என்று ஓர் இடைவெளி விட்டார்.

கமல் திரும்ப வரும் போது வேட்டி உடையில் வந்து ஆச்சர்யப்படுத்தினார். “இதுதான் எப்பவும் உள்ள இருக்கற உடை” என்பதன் மூலம் ‘தமிழன்டா’ என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்தினார். (ஆனா கோட்டு, பேன்ட் போட்டிருக்கும் போது உள்ள எப்படி வேட்டி கட்டியிருக்க முடியும். மெடிக்கல் மிராக்கிள்!).

பிக்பாஸ் போட்டியாளர்கள் - கமல்

“எவிக்ஷன் ஆகறவரை உள்ளேயே போயி கூட்டிட்டு வந்துடலாம். அதுக்கு முன்னாடி அவங்க கிட்ட முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசியாகணும்.. உங்க கிட்டயும்தான். என்று ‘கிராம சபைகளின்’ முக்கியத்துவத்தைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னார் கமல்.

யாஷிகா விவகாரத்தினாலோ என்னவோ வெளி கேட்டின் அருகே மங்கலாக உட்கார்ந்திருந்தார் மஹத். கூடவே டேனியும் சென்றாயனும். கேட் திறக்கப்பட்டதும் அதிர்ச்சியடைந்து பார்த்தார்கள். கமல் உள்ளே நுழைந்ததும் நம்பவே முடியாமல் துள்ளிக் குதித்தார்கள். கொல்லங்குடி கருப்பாயி வந்தாலே சென்றாயன் மிகையாக ஆடுவார். கமல்ஹாசன் என்றால் கேட்க வேண்டுமா! மனிதரை கையில் பிடிக்க முடியாமல் அங்குமாக இங்குமாக பரபரப்புடன் ஓடினார். வார இறுதி என்பதாலோ என்னவோ, “சார்.. கிச்சன்ல எதுவுமேயில்ல சார்” என்றார் உபசரிப்பு திலகம் டேனி.

“விஸ்வரூபம் 2 பிரமோஷனுக்காக வேற மொழி பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கிட்டேன். குதூகலமாக இருக்காங்க. ரொம்ப திறமைசாலிங்க. அப்பத்தான் தோணுச்சு. “ஊருக்கெல்லாம் போறியே.. சின்ராசு.. உன் வீட்டுக்குப் போனியா –ன்னு மனச்சாட்சி கேட்டுச்சு.. அதான் வந்துட்டேன்.” என்றார் வரவேற்பறை மேஜையில் அமர்ந்த கமல். 

“நீங்க ஒவ்வொரு வாரமும் டபாய்ச்சுக்கிட்டே இருக்கீங்க.. பார்த்துக்கிட்டே இருங்க.. ஏதாவது ஒரு வாரம் கமலே வந்து கூட்டிக்கிட்டு போகப் போறாரு”–ன்னு பாலாஜி சொன்னாரு சார்” என்று பொன்னம்பலம் அசரிரீ மாதிரி சொன்னார். உண்மையிலேயே அதுதான் பிறகு நடந்தது. பாலாஜின் உள்ளுணர்வை நிச்சயம் பாராட்ட வேண்டும். 

“ஜனனி, போன வாரம் ஷாரிக் பெயரைச் சொன்னீங்க. உண்மையாயிடுச்சு இல்லையா. இந்த வாரம் யாஷிகா, ஜனனியோட பெயரைச் சொல்லியிருக்கீங்க” என்று விசாரிக்க ஆரம்பித்தார் கமல். ‘அந்தச் சூழ்நிலையில் யாரையாவது தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்’ என்பது யாஷிகாவின் விளக்கம். 

யாஷிகா - ஐஸ்வர்யா

தொண்டை கமறிய கமலுக்கு “காஃபி போடட்டுமா சார்” என்று மும்தாஜ் கேட்க.. ‘நீங்க டீதானே போடுவீங்க?” என்று மும்தாஜை கமல் கிண்டலடிக்க, அவர் வெட்கப்பட்டுக்கொண்டே கிச்சன் பக்கம் குடுகுடுவென்று ஓடினார். “இங்க வர்ற விருந்தினர்கள் சொல்றதை கவனிக்கறீங்களா.. வெளில இருந்து வர்ற பார்வை இது. நீங்க செய்யறதுல்லாம் அவங்களைப் பாதிக்குது. தன்னைத்தானே ஞாபகப்படுத்துது. கோபப்படறாங்க” என்றார் கமல். (ஆனால் சமூகவலைதளங்களில் மற்றவர்களின் மீது தீர்ப்பெழுதும் நீதிபதிகள்தாம்  நிறைய இருக்கிறார்கள். சுயபரிசீலனையை அடைபவர்களின் சதவிகிதம் குறைவுதான்). 

“என்னைக் கூட கேட்டிருக்காங்க.. எவ்வளவோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருக்கு. இதை ஏன் ஒத்துக்கிட்டீங்கன்னு. எனக்கு கூட அப்படியொரு எண்ணம் இருக்கு. (இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் பிக்பாஸ் ‘what do you mean?” என்று சிவாஜி பாணியில் கண்கலங்கி ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்!) மத்த பிக்பாஸோட நிகழ்ச்சிகளோடு ஒப்பிடும் போது தமிழுக்கு ஒரு தனித்தன்மை இருக்கு. இங்க இருக்கற விஷயங்களை அவங்க ஃபாலோ பண்ணணும்னு நெனைக்கிறாங்க.. அப்படியொரு இடம் இது. பல கோடி மக்களின் மக்களின் கவனம் கிடைக்கும்” என்று போட்டியாளர்களிடம் சொல்லிய கமல், ‘எவிக்ஷன் பெயர்’ அடங்கிய கவரை மும்தாஜிடம் எடுத்து வரச் சொன்னார். 

பொன்னம்பலத்தை முன்னிட்டு ஜனகராஜின் குரலில் சில விஷயங்களைப் பேசி சபையைச் சிரிக்க வைத்தார் பாலாஜி. ‘விஸ்வரூபம் -2’வைப் பற்றிய பேச்சை கமல் எடுக்க, ‘அய்யோ சார். உங்க படம்னா FDFS பார்த்துடுவேன். இந்தச் சமயம்தான் பார்க்க முடியாம தலைவலிக்குது” என்று மிகையான உற்சாகத்தைக் காட்டினார் மும்தாஜ். “என்ன சென்றாயன், நாளைக்குப் படம் பார்க்கலாமா?” என்று சொல்வதன் மூலம் அவர் எவிக்ஷன் ஆகக்கூடும் என்கிற பொடியைத் தூவினார் கமல். ‘நிச்சயம் சார். முதல் வேலை அதுதான்” என்றார் சென்றாயன் உற்சாகமாக. 

“கேள்விகளை நான் கேட்கட்டுமா, அல்லது நீ கேட்கிறாயா?” என்கிற திருவிளையாடல் சிவாஜி மாதிரி ‘கவரை நான் பிரிக்கட்டுமா, நீங்கள் பிரிக்கிறீர்களா?” என்று கமல் வாய்ப்பு தர, ‘பொன்னம்பலம் முன்வந்து கவரைப் பிரித்தார். (என்னவொரு அதிசயம், ஒரு ஆடே தவழ்ந்து வந்து பிரியாணி அண்டாவில் விழுகிறதே!). ஜேம்ஸ்பாண்ட் பட இசையுடன் பொன்னம்பலம் உறையைப் பிரிக்க, அவர் பெயரையே பார்த்தார். “ஜெய்ஸ்ரீராம்’ என்றபடி முடிவை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார் பொன்னம்பலம். 

கமல் ஹாசன்

போட்டியாளர்கள் ஒவ்வொருடைய பூர்வீகத்தைப் பற்றி விசாரித்த கமல், “நம் எல்லோருமே கிராமத்திலிருந்து வந்தவர்கள்தான்” என்று கிராமசபையின் முக்கியத்துவத்தைச் சொல்லி ஆகஸ்ட் 15 அன்று அது தொடர்பான விளையாட்டை ஆட வேண்டிக் கொண்ட கமல் கிளம்புவதற்கான சமிக்ஞைகளைச் செய்ய, பிரிவுத் துயரத்துடன் இந்திப் பாட்டொன்றைப் பாடினார் மும்தாஜ். அதை மொழி பெயர்த்தால் இப்படித்தான் வருகிறது. ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன, ஏன் அவசரம்?” “போய்த்தானே ஆகணும்!” என்று இந்தியில் பதில் சொல்லி அசத்தினார் கமல். 

ஓர் இடைவெளிக்குப் பின் வழக்கமான மேடையில் தோன்றிய கமல், கேரளத்துக்கு அளிக்க வேண்டிய நிதியுதவியைப் பற்றி உருக்கமாகப் பேசினார். உள்ளே பொன்னம்பலத்துக்கு பிரியாவிடை வைபவம் நடந்தது. முன்னர் நடந்த வைபவங்களில் சம்பிரதாயமாகவோ அல்லது உண்மையாகவோ எவராவது கலங்குவார்கள். ஆனால், பொன்னம்பலத்துக்கு அவ்வாறு  நடைபெறவில்லை. “யாரும் அழக் கூடாது” என்று சொல்லி அதை நினைவுப்படுத்தினார் பொன்னம்பலம். 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான அறிவுரைகளை பொன்னம்பலம் சொல்ல, ‘எனக்கு ஏதாவது சொல்லுங்கண்ணே” என்று சென்றாயன் பரபரத்தார். ‘நான் முன்னாடி போனா.. நீ பின்னாடி வாரே” என்று டைமிங்கான பாடலைப் பாடினார் பொன்னம்பலம். “என்னண்ணே.. இப்படிப் பாடிட்டிங்க?” என்று கேட்கப்பட்டதற்கு ‘பின்னாடி..ன்னா உடனே.. வா.. ரொம்ப பின்னாடி.. வெளியே வந்துதானே ஆகணும்” என்ற பொன்னம்பலத்திடமிருந்து சமயங்களில் ஓர் அருமையான நகைச்சுவை நடிகர் வெளிப்படுகிறார். செடியை ஜனனிக்குப் பரிசளித்த பொன்னம்பலம், ஜனனியின் தலையில் செடியை நிற்க வைத்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். (மரமண்டை –ன்னு சொல்ல வர்றாரோ).

எல்லோரிடமும் பிரியாவிடை பெற்றுக்கொண்ட பொன்னம்பலம், “இது வீடு இல்ல. கோயில்” என்று ஹரீஷைப் போலவே மிகையாக உணர்ச்சிப்பட்டதோடு நின்று விடாமல், நீச்சல் குளத்திலிருந்து தண்ணீரை எடுத்து வரச்சொல்லி அதை தீர்த்தம் போல் தன் தலையில் தெளித்துக்கொண்டதோடு மற்றவர்களின் தலையிலும் தெளித்தார்.

பொன்னம்பலம்

வெளியே வந்த பொன்னம்பலம் கமலுடன் அமர்ந்து பேசினார். “இங்க 150 நாளுக்கு மேல தங்கின மாதிரி அனுபவம் கிடைத்தது. தலைவரே என்னைக் கூட்டிக்கிட்டு வந்தது நான் செய்த பாக்கியம். உள்ளே ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள்’ என்று பாதுகாப்பாகப் பேசினார் பொன்னம்பலம். அவர் தொடர்பான, சர்ச்சைக்குரிய வீடியோக்கள் ஒளிபரப்பாகின. ஐஸ்வர்யா கால்பட்டதால் எழுந்த சச்சரவு, சர்வாதிகாரி டாஸ்க்கில் ஐஸ்வர்யாவின் கழுத்தை நெறித்தது போன்றவை தொடர்பான பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிததார் பொன்னம்பலம். ‘எல்லோருமே என் பொண்ணுங்க மாதிரிதான் இந்த எட்டு வாரத்துல எட்டுப் பேரை திருத்தியிருக்கேன்” என்று சொன்ன பொன்னம்பலம், ஒரு ஸ்டன்ட் மேனாக சாகசக் காட்சிகளில் தான் எப்படிப் பாதுகாப்பாக நடந்து கொள்வேன் என்பதை ஒரு டெமோவின் மூலம் செய்து காட்டினார். பிறகு கமலும் பொன்னம்பலத்தை வைத்து ஒரு டிராமா செய்தார். 

“ஓகே.. உங்களுக்கு வெளியே ஒரு நல்ல எதிர்காலம் இருக்குன்னு நம்பறேன். என்ஜாய் பண்ணுங்க. நீங்க சொல்ற அறிவுரைக்கு மக்கள் கைத்தட்டறாங்க.. எனக்கு வேறு கருத்துல்லாம் இருக்கு. அதை அப்புறம் பேசுவோம்” என்று சொன்ன கமல் பொன்னம்பலத்தை அன்புடன் வழியனுப்பி வைத்தார். 

வெள்ளப் பிரச்னையில் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கேரளத்துக்குத் தரப்பட வேண்டிய ஆதரவு, கிராம சபையின் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி மீண்டும் நினைவுகூர்ந்த கமல் விடைபெற்றுக்கொண்டார். 

மும்தாஜ் - மஹத்

புதிய போட்டியாளர்கள் வந்தேயாக வேண்டிய தருணம் இது. என்ன செய்யப் போகிறார் பிக்பாஸ். பொறுத்திருந்து பார்ப்போம்.

கமல் ஹாசன்

 


Add new comment

Or log in with...