Friday, March 29, 2024
Home » மாணவர்களை அன்பினால் நல்வழிப்படுத்திய ஆசிரியர் விடத்தல்தீவு மர்ஹூம் எம்.சி.எம்.இமாம்

மாணவர்களை அன்பினால் நல்வழிப்படுத்திய ஆசிரியர் விடத்தல்தீவு மர்ஹூம் எம்.சி.எம்.இமாம்

by sachintha
November 24, 2023 6:00 am 0 comment

மன்னார், விடத்தல்தீவு கிராமத்தில் தமிழ் முழக்கம் புலவர் முஹம்மது காஸிம் ஆலிம்_ -சுஹரா உம்மா தம்பதிகளின் புதல்வராக முஹம்மது இமாம் அவர்கள் 1940 ஆம் ஆண்டு பிறந்தார். இளமைக் காலத்திலேயே சமூக ஆர்வலராக, நல்ஆசிரியராக இலக்கிய ஆர்வலராக இருந்து மாணவரின் கல்வி மேம்பாட்டிலும் சமூகக் கலாசார விடயங்களிலும் நற்பணிகளிலும் தன்னை அர்ப்பணித்தார்.

1960 களில் தமிழ் விஷேட நெறி ஆசிரியராக நியமனம் பெற்று பணியை செவ்வனே செய்ததுடன் சில பாடசாலைகளில் கடமை நிறைவேற்று அதிபராக பொறுப்பேற்றுக் கல்விப் பணி புரிந்தார். மாந்தை கிராம அபிவிருத்தி மற்றும் சமூக நல விடயங்களிலும் முன்னின்று செயற்பட்டதோடு பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவராக பணியாற்றினார். இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி அமைப்பை புத்தளத்தில் உருவாக்கி அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று மக்களின் வாழ்வாதாரம் அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்தார்.

தமிழ்மொழியைப் போலவே ஆங்கிலம் மற்றும் சிங்க மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றதோடு இம்மொழிகளை தனது மாணவர்களுக்கு போதித்தார். சத்தியப் பிரமாணம் பெற்ற அரசகரும மொழி பெயர்ப்பாளராகவும் நியமனம் பெற்றார்.

1992 ஆம் ஆண்டு அகில இலங்கை சமாதான நீதிவானாக நியமனம் பெற்று சமூக உயர்ச்சிக்காய் தன்னை அர்ப்பணித்தார். வீட்டிலும் ஓர் வாசிகசாலையை (ஹன்பல் நூலகம்) உருவாக்கித் தேவையானோர்க்கு உதவி புரிந்தார்.

35 வருடகால ஆசிரியப் பணியில் மாணவர்களைக் கண்டிக்க பிரம்பு தூக்காத நல்ஆசானாக இருந்து அன்பால் வழிப்படுத்தினார். மேலும் ஆசிரியர் தொழில் புரியும் தமது பிள்ளைகளுக்கு ஆசிரியப் பணி ஓர் அறப்பணி எனக் கூறிவந்தார்.

தமது இறுதி மூச்சுவரை பிள்ளைகளின் உயர்ச்சியிலும் செயற்பாடுகளிலும் வழிகாட்டியாக ஆலோசகராக இருந்து ஒளியூட்டியது மட்டுமன்றி தாம் அறிந்த நல்ல விடயங்களை தமது பிள்ளைகளுக்கும் அறிந்து செயலாற்ற வேண்டும் என பெரிதும் விரும்பினார். 2016 ஆம் ஆண்டு தனது 76 ஆம் வயதில் அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். அவரது நற்பெயர் என்றும் நிலைத்திருக்குமென்பது நிட்சயம்.

இமாம் றிஜா…

விடத்தல்தீவு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT