போராட்டம் இனிமேல்தான் உக்கிரமடையும் | தினகரன்

போராட்டம் இனிமேல்தான் உக்கிரமடையும்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரிய போராட்டம் இனிமேல்தான் உக்கிரமடையும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்தது.

இனிவரும் காலங்களில் இதற்கான போராட்டங்கள் அதிகரிக்கும் என மஹிந்த ஆதரவு அணியைச் சேர்ந்த பந்துல குணவர்தன எம்.பி கூறினார். பாராளுமன்ற குழு அறையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் சபாநாயகரின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த விடயத்தைக் கைவிட்டுவிட்டீர்களா என அவரிடம் கேட்கப்பட்டது.

'எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரிய போராட்டம் இன்றிலிருந்தே ஆரம்பமாகிறது' என்றார். எதிர்வரும் நாட்களில் இப்போராட்டம் உக்கிரமடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்கம் ஏகாதிபத்தியத்துடன் செயற்படுவதுடன், பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிப்பதற்கு இருக்கும் உரிமை மறுக்கப்படுவதாக எதிரணி எம்பி சந்திம வீரக்கொடி குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் குறித்து சபையில் கருத்துத் தெரிவிப்பதற்கு சபாநாயகர் தமக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லையெனக் குறிப்பிட்ட அவர், அரசாங்கம் எதிரணியினரை அடக்கியாளும் வகையில் செயற்படுவதாகவும் கூறினார்.

லங்கா சுதந்திரக் கட்சியே அரசாங்கத்தில் இருக்கின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனுமதியின்றி அது தொடர்பான ஒப்பந்தம் செய்திருந்த போதும் 2 வருடங்கள் நாங்கள் காத்திருந்தோம். தற்போது அந்த ஒப்பந்த காலமும் முடிவடைந்துள்ளது. இப்போது எமக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோர முடியும். ஆனால் சர்வாதிகார போக்கில் அது தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. தற்போதைய பிரதமரின் இருப்பு தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் இருக்கும் வரையே இருக்கும். இதனால்தான் இவ்வாறாக செயற்படுகின்றனர்.

அது மாத்திரமன்றி சுயாதீன ஆணைக்குழுக்கள் சுயாதீனமான நபர்களால் நியமிக்கப்படவில்லையென்றும், சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கும் அரசியலமைப்பு பேரவையின் அங்கத்தவர்கள் பக்கச்சார்பானவர்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.

(மகேஸ்வரன் பிரசாத்)


Add new comment

Or log in with...