ரயில் வேலைநிறுத்தம்; சேவைகள் ஸ்தம்பிதம் | தினகரன்

ரயில் வேலைநிறுத்தம்; சேவைகள் ஸ்தம்பிதம்

கொழும்பில் பெரும் பாதிப்பு; பயணிகள் அவதி

* பரீட்சை எழுதும் மாணவர்கள் பாதிப்பு
*2000 இ.போ.ச மேலதிக சேவையில்
* அத்தியாவசிய சேவையாக்க முடிவு

ரயில்வே தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்தால் ரயில் சேவைகள் நேற்றும் முற்றாக ஸ்தம்பிதமடைந்தன. இதனால் பொதுமக்கள் பாரிய அசெளகரியங்களை எதிர்நோக்கினர். கொழும்பில் அனைத்துச் செயற்பாடுகளும் பாதிப்படைந்ததுடன் அலுவலகங்களுக்கு வருவோரின் எண்ணிக்கையிலும் நேற்று பாரிய வீழ்ச்சிக் காணப்பட்டது.

கொழும்பு வரும் பயணிகளின் வசதி கருதி அநேகமான அலுவலகங்கள் நேற்று நேரகாலத்துடன் முடிவடைந்தன. ரயில் சேவையை ஈடு செய்யும் வகையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான சுமார் இரண்டாயிரம் பஸ்கள் நேற்றைய தினம் சேவையிலீடுபடுத்தப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பாடசாலை விடுமுறை என்கின்றபோதும் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் உரிய நேரத்துக்கு பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாமல் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கினர்.

வழித்தட அனுமதியில்லாத தனியார் பஸ்களை தாம் விரும்பிய மார்க்கங்களில் சேவையை முன்னெடுப்பதற்கும் போக்குவரத்து அமைச்சு நேற்றைய தினம் விசேட அனுமதி வழங்கியிருந்தது. என்றாலும் பஸ்களிலும் சனக்கூட்டம் வழமையிலும் அதிகமாக இருந்ததனால் அலுவலக பயணிகளும் மாணவர்களும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

எவ்வாறாயினும் நேற்று மாலை 4.30 மணியளவில் எட்டு ரயில்கள் விசேட சேவையிலீடுபடுத்தப்பட்டன. அதற்கு மேலதிகமாக கொலன்னாவையிலிருந்து கட்டுநாயக்கவுக்கு எரிபொருள் ஏற்றிச் செல்லும் விசேட ரயிலொன்றும் நேற்று இரவு சேவையிலீடுபடுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் விஜே சமரசிங்க நேற்று தெரிவித்தார்.

ரயில்வே திணைக்களத்தின் மெக்கானிக்குகளை கொண்டே இந்த ரயில் சேவையை முன்னெடுத்ததாகவும் இவர்கள் மாவட்டங்களிலுள்ள கண்காணிப்பு சேவையை முன்னெடுக்கும் மெக்கானிக்குகள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று மாலை முதல் பிரதான ரயில் வீதி, புத்தளம், களனி மற்றும் கரையோரங்களுக்கூடாகவே இச்சேவை முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை தொழிற்சங்கத்தினரால் இவ்விசேட ரயில் சேவைக்கு பாதிப்பு இடம்பெறாத வகையில் அனைத்து ரயில் நிலையங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் திணைக்களத்திடம் கோரிக்கை முன்வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

இதே ​வேளை ரயில்சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்த போவதாகவும் ஜனாதிபதி கையொப்பமிட்டவுடன் இது நடைமுறைக்கு வருமென்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க நேற்று தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கு அவசியமான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருக்கும் நிலையில் ஜனாதிபதியின் கையொப்பத்துக்காகவே காத்திருப்பதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் வேலை நிறுத்தம் நியாயமற்றதென சுட்டிக்காட்டிய பிரதியமைச்சர், போராட்டம் முடிவுக்கு வருமாயின் தொழிற்சங்கத்தினரை பேச்சுவார்த்தைக்கு அழைக்க தயாரென்றும் கூறினார்.

இதேவேளை மக்கள் எதிர்கொள்ளும் அசெளகரியங்களுக்காக அரசாங்கத்தின் சார்பில் கவலையை தெரிவித்து கொண்ட அவர் தொழிற்சங்கத்தினரின் நியாயமற்ற செயற்பாடுகளுக்கு நாட்டு மக்களே தீர்ப்பளிக்க வெண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். ரயில்வே தொழிற்சங்கப் போராட்டம் தொடருமாயின் அதற்கு முகம் கொடுக்க அரசாங்கம் தயாரென்றும் மேலும் சிலருக்கு புதிதாக ரயில் சாரதிக்கான பயிற்சிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இவ்வேலை நிறுத்தத்தால் ரயில்வே திணைக்களத்துக்கு 770 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதென்றும் பிரதியமைச்சர் கூறினார்.

சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

"முன்னறிவித்தலின்றி வேலைநிறுத்தம் மேற்கொள்வது சட்டவிரோதமானது. நாள் ஒன்றுக்கு 05 இலட்சம் பயணிகள் ரயிலில் கொழும்பு வந்து செல்கின்றனர். திடீர் வேலைநிறுத்தத்தால் இப்பயணிகள் பாரிய அசௌகரியங்களை சந்திக்க நேரிட்டுள்ளது. அவர்களிடம் கவலையை தெரிவித்து கொள்கிறேன். இத்தொழிற்சங்கத்தினர் மீதான தீர்ப்பை மக்களே முன்வைக்க வேண்டும் " என்றும் அவர் தெரிவித்தார்.

ரயில்வே திணைக்கள ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சரத் அமுனுகம தலைமையிலான உப குழு, ஏனைய திணைக்களங்களுக்கு பாதிப்பு இடம்பெறாத வகையில் ரயில்வே திணைக்களத்தை ஒருங்கிணைந்த சேவையாக பிரகடனப்படுத்தி சம்பள அதிகரிப்பை முன்னெடுக்குமாறு அமைச்சரவைக்கு சிபாரிசு செய்திருந்தது.

இந்நிலையில், ரயில்வே திணைக்களத்துக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டால் தங்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை 35 திணைக்களங்கள் நிதி அமைச்சிடம் முன்வைத்தன. இதனை கவனத்திற் கொண்ட நிதி அமைச்சு நாட்டிலுள்ள 14 இலட்சம் அரசாங்க ஊழியர்களுக்குமான சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தற்காலிகமாக 02 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைத்தது எனக் குறிப்பிட்டார்.

லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

Or log in with...