இந்தோனேசிய லொம்பொக் தீவில் மீண்டும் சக்தி வாய்ந்த பூகம்பம் | தினகரன்

இந்தோனேசிய லொம்பொக் தீவில் மீண்டும் சக்தி வாய்ந்த பூகம்பம்

இந்தோனேசியாவின் லொம்பொக் தீவில் கடந்த ஞாயிறு இடம்பெற்ற சக்தி வாய்ந்த பூகம்பத்தின் மீட்பு நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில் நேற்று அங்கு மற்றுமொரு பலமான பூகம்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த புதிய அதிர்வு 5.9 அல்லது 6.2 ஆக இருந்ததென கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் சில கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன.

முன்னர் இடம்பெற்ற பூகம்பத்தில் இடிந்த கட்டடங்களை தோண்டி மீட்பாளர்கள் தொடர்ந்து தேடுதல்களில் ஈடுபட்டிருப்பதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

6.9 ரிக்டர் அளவில் பதிவான முந்தைய பூகம்பத்தில் சில கிராமங்கள் முற்றாக அழிந்திருப்பதோடு உயிரிழப்பு 347 ஆக உயர்ந்திருப்பதாக இந்தோனேசிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. எனினும் உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்தும் 131 ஆகவே உள்ளது.

எனினும் மேலும் உயிரிழந்தவர்கள் இடிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்படும்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தேசிய அனர்த்த முகாமை குறிப்பிட்டுள்ளது.

இதில் 1,400க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து 156,000க்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் லொம்பொக் தீவின் வடக்கு பகுதியில் 12 கிலோமீற்றர் ஆழத்திலேயே நேற்று மீண்டும் பூகம்பம் ஏற்பட்டதாக இந்தோனேசிய புவியியல் மையம் குறிப்பிட்டுள்ளது. எனினும் உயிரிழப்புகள் பற்றி உடன் செய்தி வெளியாகவில்லை.

பூகம்பத்தின்போதும் வடக்கு லொம்பொக்கில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் இருக்கும் மக்கள் பயத்தில் அலறிக்கொண்டு விதியை நோக்கி ஓடிவந்ததாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் விபரித்துள்ளனர்.

இதன்படி ஒருவாரத்திற்கு சற்று கூடுதலான காலத்தில் இந்த தீவில் ஏற்படும் மூன்றாவது சக்தி வாய்ந்த பூகம்பமாக இது உள்ளது.


Add new comment

Or log in with...