ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவிக்கு சிலியின் பசேலட் பெயர் | தினகரன்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவிக்கு சிலியின் பசேலட் பெயர்

ஐ.நாவின் அடுத்த மனித உரிமை ஆணையாளர் பதவிக்கு சிலி நாட்டு முன்னாள் ஜனாதிபதியான மிசெல் பசேலட் நியமிக்கப்படுவதாக ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குடரஸ் அறிவித்துள்ளார்.

66 வயதான பசேலட் ஜோர்தானைச் சேர்ந்த செயித் ராத் அல் ஹுஸைனுக்கு பதிலாகவே அந்த பதவியை ஏற்கவுள்ளார். கடந்த 2014 செப்டெம்பர் தொடக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையாளராக பதவி வகிக்கும் செயித் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கொள்கைகளை கடுமையாக எதிர்ப்பவராக உள்ளார்.

சிலியில் பினோசே ஆட்சியில் துன்புறுத்தல்களை சந்தித்த பசேலட் அந்நாட்டில் இரண்டு முறை ஜனாதிபதி பதவியை வகித்திருப்பதோடு அரசியலில் உலகில் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக அறியப்படுகிறார். பால் சமத்துவத்தை ஊக்குவிக்கும் ஐ.நா பெண் அமைப்பின் முதல் இயக்குனராக அவர் 2010 ஆம் ஆண்டு பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பசேலட்டை நியமிக்கும் தனது முடிவு பற்றி குடரஸ் கடந்த புதன்கிழமை ஐ.நா பொதுச் சபைக்கு கடிதம் மூலம் அறிவித்தார்.

எனினும் பசெலட்டை நியமிப்பது குறித்து 193 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐ.நா பொதுச் சபை இன்று வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பை நடத்தவுள்ளது. இதில் அவருக்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயித் வரும் ஓகஸ்ட் 31 ஆம் திகதி தனது பதவியில் இருந்து விடைபெறவுள்ளார். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய உலகின் பலம்மிக்க நாடுகளின் ஆதரவை இழந்த நிலையில் செயித் இரண்டாவது தவணைக்கு போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...