விளையாட்டுசங்கத் தேர்தலில் முன்னாள் நீதிபதிகளை உள்ளடக்கிய தேர்தல் குழு அமைக்க நடவடிக்கை | தினகரன்

விளையாட்டுசங்கத் தேர்தலில் முன்னாள் நீதிபதிகளை உள்ளடக்கிய தேர்தல் குழு அமைக்க நடவடிக்கை

விரைவில் யோசனை முன்வைக்குமாறு அமைச்சர் பைசர் முஸ்தபா கோரிக்கை

விளையாட்டுத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் முறையை அமுல்படுத்துவதற்கான யோசனையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் சமர்ப்பிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா கேட்டுகொண்டார்.

1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டுத்துறை சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விளையாட்டுத்துறை சங்கங்களுக்கான தேர்தல் முறைகளில் நிலவும் குறைபாடுகளை நீக்கி அதற்குப் பதிலாக இந்தமுறை அமையவுள்ளது.

இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சருக்கும், விளையாட்டுத்துறைசங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கடந்த செவ்வாய்க்கிழமை விளையாட்டுத்துறைஅமைச்சில் இடம்பெற்றது.

இந்தகலந்துரையாடலின் போது சுயாதீன தேர்தல் குழுவை நியமிப்பது தொடர்பில் எழுத்து மூல யோசனையொன்றை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் சமர்ப்பிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா,விளையாட்டுத்துறை சங்க பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் 63 விளையாட்டுசங்கங்கள் உள்ளன. அந்தசங்கங்களின் தேர்தலின் போதுபல்வேறுபிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக தேர்தலுக்கான மனுதாக்கல் செய்கின்ற போது பல்வேறுசட்டசிக்கல்களும் தோன்றுகின்றன.

எனவே மனு தாக்கலின் பின்னர் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூவரைக் கொண்ட சுயாதீன குழுவொன்றை தேர்தல் நடைபெற நான்கு மாதங்களுக்கு முன்னரே நியமிக்கும் வகையில் தேர்தல் பரிந்துரைகளில் மாற்றங்களைகொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை,சுயாதீன தேர்தல் குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் நியமிப்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் முன்னாள் தலைவர் திலங்கசுமதிபால கடுமையான எதிர்ப்பினை இதன்போது வெளியிட்டிருந்ததுடன், தற்போதுள்ள விளையாட்டுசங்கங்களின் ஊடாக சுயாதீன தேர்தல் குழுவொன்றை நியமிக்க முடியும் எனதெரிவித்தார்.

அத்துடன்,விளையாட்டுத்துறை அமைச்சர் தேர்தல் குழுவைநியமிக்கும் போதுஅரசியல் தலையீடுகள் அதிகளவில் இருக்கும் என சுட்டிக்காட்டிய திலங்க சுமதிபால, இதுதொடர்பிலான இறுதித் தீர்மானத்தை இலங்கை கிரிக்கெட் தேர்தல் நிறைவடைந்த பிறகு முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து. குறித்த கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த ஏனைய விளையாட்டுசங்கங்களிடம்,சுயாதீன தேர்தல் குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் நியமிப்பதை ஏற்றுக் கொள்கின்றீர்களா? அல்லது எதிர்க்கின்றீர்களா? என வினவினார்.

இதற்குபெரும்பான்மையான விளையாட்டு சங்கங்கள் தமது சம்மதத்தினை தெரிவித்திருந்தனர். அதன்பிறகு,பெரும்பான்மையானோரின் விருப்பத்திற்கமைய இனிவரும் காலங்களில் தேர்தலை நடத்துவதற்கு சுயாதீன குழுவொன்றை நியமிக்கநடவடிக்கை எடுப்பதாகவும், இதற்கான சட்டக் கோவையை எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து சங்கங்களினதும் கைகளுக்கு கிடைக்கும்படி நடவடிக்கைஎடுப்பதாகவும் தெரிவித்தார்.

பயிற்றுவிப்பாளர்களாக செயற்படுகின்ற ஒருசிலர் சங்கங்களில் தலைவர் மற்றும் செயலாளர் பதவி வகிப்பதாக இலங்கை படகோட்ட சங்கத்தின் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ இதன்போது தெரிவித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர், சட்டவிதிமுறைகளை மீறிசெயற்படுகின்ற நபர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

(பீ.எப் மொஹமட்)


Add new comment

Or log in with...