நாட்டில் படிப்படியாக தேய்கிறது நல்லிணக்கம் | தினகரன்

நாட்டில் படிப்படியாக தேய்கிறது நல்லிணக்கம்

'வடக்கு, கிழக்கு மக்களுக்கு சிங்களத்தையும் தெற்கு மக்களுக்கு தமிழையும் கற்பிக்க நடவடிக்கை எடுப்பேன்' என்று காலி சமாதானக் குழுவின் பிரதிநிதியான முன்னாள் பாடசாலை அதிபரும் அரசகரும மொழி ஆலோசகருமான கருணாதுங்க வெலிகல யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்தார்.

இலங்கையில் நிலைபேறான சமாதானத்தை உருவாக்க இனமத பேதமின்றி இங்கு வசிக்கும் அனைத்து இன மக்கள் மற்றும் மதத்தவர்களும் இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தும் நோக்கில் காலி மாவட்ட ஸ்ரீலங்கா தேசிய சமாதானக் குழுவின் காலி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் வதிவிட பயிற்சிப் பட்டறை கடந்த மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் கிறீன் பாத் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் மதக் குழுக்களின் பிரதிநிதிகள் இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

அங்கு பிரதான உரையை காலி மாவட்ட தேசிய மத குழுவின் பிரதான ஏற்பாட்டாளரான ஓய்வுபெற்ற பாடசாலை அதிபரும் அரசகரும மொழிகள் திணைக்கள சிங்கள, தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்பாளரும் ஆலோசகருமான கருணாதுங்க நிகழ்த்தினார்.

"இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்தார்கள். 1915 மற்றும் 1958 ஆம் ஆண்டுகளிலும் அதற்குப் பின்னரும் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையே கலவர நிலைமை உருவாகியது. ஆனால் நாம் அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்து மீண்டும் ஒற்றுமையாக வாழ்ந்தோம்.

கவலையுடன் என்றாலும் தற்போது இந்த நல்லிணக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருவதை கூற வேண்டியுள்ளது. அதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் சில இனவாத அரசியல் கட்சிகளும் மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்களும் என்று கூற வேண்டியுள்ளது. சிலர் தங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் இனங்களின் பெயரால் அரசியல் கட்சிகளை உருவாக்கிக் கொண்டு வாக்குகளைப் பெற இனங்களைப் பிரிக்கின்றார்கள். ஏனைய மதங்களைச் சேர்ந்த சில தலைவர்கள் தங்களது மதத்தை மாத்திரம் உயர்வாக எண்ணி ஏனைய மதங்களை தூற்றுகின்றார்கள். எந்தவொரு மத அறிஞரும் அவ்வாறு கூறவில்லை. அதனால் கட்சி பேதம், மத பேதமின்றி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சகோதரத்துவத்துடன் வாழவேண்டும். காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை போன்ற தூர இடங்களிலிருந்து நாம் இங்கு வந்தது இங்குள்ள மக்களின் மனதை வென்று நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே” எனக் கூறினார் அவர்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், "இலங்கையில் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பிரதான காரணியாக மொழியைக் குறிப்பிடலாம். இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு சிங்கள மொழியையும் தெற்கு மக்களுக்கு தமிழ்மொழியையும் இலவசமாக கற்பிக்கும் திட்டமொன்றை தேசிய சமாதான குழு மூலம் செயற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன் மூலம் எவ்வகையிலாவது இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முடியுமென நம்புகிறோம். அதேபோல் வடக்கு மக்களை தெற்கிற்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கிறோம். அதற்கான அனைத்து வசதிகளையும் வழங்க தேசிய சமாதான குழு நடவடிக்கை எடுக்கும் " எனவும் அவர் கூறினார். மூன்று மொழிகளிலும் அவர் உரை் ஆற்றியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மனித மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் தொடர்பாளர் பீ. எச். சோமசிறியால் மத மற்றும் நல்லிணக்கம் என்னும் தொனிப்பொருளின் கீழ் இவ்விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற பட்டறையில் அதிபர்கள், தேரர்கள், முஸ்லிம் மற்றும் தமிழ் மதத் தலைவர்கள், அறிஞர்கள, ஊடவியலாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானோர் பங்குபற்றினார்கள். வடக்கு மக்கள் இவர்களை அன்புடன் வரவேற்று சகல வசதிகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தார்கள்.


Add new comment

Or log in with...