90 வயது தாயை வீதியில் கைவிட்ட 3 பிள்ளைகளும் நீதிமன்றில் ஆஜர் | தினகரன்

90 வயது தாயை வீதியில் கைவிட்ட 3 பிள்ளைகளும் நீதிமன்றில் ஆஜர்

கல்முனையில் தெருவில் மூதாட்டியை கைவிட்ட பிள்ளைகள் மூவருக்கும் தலா 50ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் அனுமதித்தார். மூதாட்டியின் பராமரிப்பிற்காக மாதமொன்றுக்கு 3 பிள்ளைகளும் தலா 5ஆயிரம் ரூபா வீதம் மொத்தமாக 15ஆயிரம் ரூபாவைச் செலுத்தவேண்டும் என்றும் அவர் தீர்ப்பளித்தார். கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று (9) விசாரிக்கப்பட்ட போது இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. நேற்று மன்றுக்கு பிள்ளைகள் நால்வரும் வந்திருந்தனர். குறித்த மூதாட்டியும் கல்முனை ஆஸ்பத்திரியிலிருந்து மன்றுக்கு வந்திருந்தார்.

அடுத்த தவணை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 4ஆம் திகதி என நீதிவான் கூறினார்.

மூதாட்டியை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 4ஆம் திகதி வரை கல்முனை ஆதாரவைத்தியசாலையில் வைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டார். அதற்கிடையில் கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக சமுகசேவை உத்தியோகத்தரையும் 4ஆம் திகதி மன்றிற்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டார். குறித்த மூதாட்டியை பொருத்தமான வயோதிபர் இல்லத்தில் சேர்ப்பதற்கு அந்த அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ளுமுகமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூதாட்டி கல்முனை இளைஞர்சேனை இளைஞர்களிடம் கூறியதாவது:

முதலில் எனது பிள்ளைகளை வெளியில் எடுத்துவிடுங்கள். அவர்கள் கூட்டுக்குள் இருக்கும்போது எனக்கு சோறும் வேண்டாம் தண்ணியும் வேண்டாம். அவர்களை வெளியில் விடுங்கள். அவர்களது காசுவேண்டாம். நான் பிச்சை எடுத்தாவது பிழைப்பேன். அவர்களை கஸ்டப்படுத்த வேண்டாம் என்றார்.

கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை பிள்ளைகளால் கொண்டுவந்து கல்முனை ஆதாரவைத்தியசாலை முன்பாக இறக்கிவிடப்பட்டு அநாதரவாகக்கிடந்த மூதாட்டியை கல்முனைப் பிராந்திய இளைஞர்சேனை அமைப்பினர் கண்டு உடனடியாக கல்முனை ஆதாரவைத்தியசாலையில் சேர்த்தனர்.

இளைஞர் சேனையால் மீட்கப்பட்ட மூதாட்டியை பின்னர் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்ப்பதற்காக நீதிமன்ற அனுமதி கோரி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இளைஞர்சேனை அமைப்பு வழக்கொன்றை தாக்கல் செய்தது.

மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதி றிஸ்வான் குறித்த மூதாட்டியை கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சை பெறுமாறும் பணித்ததுடன் அந்த மூதாட்டியின் பிள்ளைகள் மூவரையும் நேற்று (9)ஆஜராகும் வண்ணம் அழைப்பாணையையும் பிறப்பித்திருந்தார்.

 காரைதீவு குறூப் நிருபர்

 


Add new comment

Or log in with...