சுதந்திரக் கட்சியை புனரமைக்கும் பணிகள் 80 வீதம் பூர்த்தி | தினகரன்

சுதந்திரக் கட்சியை புனரமைக்கும் பணிகள் 80 வீதம் பூர்த்தி

ஜனாதிபதி தலைமையில் முக்கிய தீர்மானங்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் புனரமைக்கும் பணிகள் எண்பது வீதம் பூர்த்தியடைந்துள்ளதுடன் ஜனாதிபதியின் தலைமையில் நேற்று (09) இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஸ்ரீ.ல.சு.கட்சியின் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு விடயங்கள் பற்றி கட்சியின் மத்திய குழு கலந்துரையாடியது.கட்சியைப் புனர​ைமக்கும் பணிகள் தொகுதி,பிரதேச,மாவட்ட மட்டங்களில் எண்பது வீதம் பூர்த்தியடைந்துள்ளன.

எதிர் வரும் வாரங்களில் பிரதியமைச்சர் அங்கஜன் த​ைலமையில் வடக்கில் கட்சி புனரமைக்கப்பட்டு அமைப்பாளர்களும் நியமிக்கப்படுவர். இதையடுத்து செப்டம்பர் 02 இல் தேசிய மாநாடு நடத்தப்படவுள்ளது. இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வா தலைமையில் விசேட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.சிறுபான்மையினத்தவர் அதிகமானோர் எமது கட்சியில் இணைந்துள்ளனர். குருநாகலில் நடைபெற்ற கட்சியின் வருடாந்த கூட்டத்தை விடவும் அதிகமானோர் செப்டம்பரில் இடம்பெறும் மாநாட்டில் பங்கேற்பர்.

முன்னாள் அமைச்சர் தயாசிறியினால் தயாரிக்கப்பட்ட கட்சி புனரமைப்பு அறிக்கை நேற்று மத்திய குழுவில் அவரால் சமர்ப்பிக்கப்பட்டது. அரசாங்கத்தின் யாப்பு குழுவில் எமது கட்சி சார்பாக அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா, டிலான் பெரோ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

எனினும் அரசியலமைப்பு குழு அறிக்கை கிடைக்கப் பெறவில்லை.

அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய மாகாணசபை தேர்தல் முறைமையே ஸ்ரீ.ல. சுகட்சியின் நிலைப்பாடாகும். மாகாண சபை மற்றும் பாராளுமன்றத் தேர்தலிலும் விருப்பு முறை மற்றும் மாவட்ட முறைமைகளை நாங்கள் ஆதரிக்கவில்லை. எமது கட்சி ஒருபோதும் தேர்தல்களை பிற்போட விரும்பவில்லை.

நாட்டின் 41 புத்திஜீவிகள் கடந்த ஒன்றரை வருடகாலமாக இணைந்து தயாரித்த நிலையான அபிவிருத்தி அறிக்கை மூன்று நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அஷ்ரப் ஏ சமத்


Add new comment

Or log in with...