அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் ஆராய விசேட ஆணைக்குழு | தினகரன்

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் ஆராய விசேட ஆணைக்குழு

விரைவில் சம்பள மறுசீரமைப்பு
தீர்மானம் எடுக்கும்வரை வேலைநிறுத்தத்தை கைவிடுங்கள்

விசேட அரச சேவைகள் ஆணைக்குழுவை அமைத்து சகல அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பிலும் தீர்மானம் எடுக்கும்வரை ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடவேண்டும் என நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். ரயில் சாரதிகளின் போராட்டம் முடியும்வரை 'வழித்தட அனுமதிப்பத்திரம்' இல்லாத தனியார் பஸ்களை அரசாங்கத்தின் செலவில் விசேட போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலம் (வற்வரி) மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், ரயில் சாரதிகளின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவையில் நான் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தேன். அவர்கள் கோருவதைப் போன்று சம்பள அதிகரிப்பை வழங்கினால் அது வைத்தியர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தைவிட பலமடங்கு அதிகமாக இருக்கும்.

இது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவேதான் ரயில் சாரதிகள் உள்ளிட்ட முழு அரச பணியாளர்களின் சம்பள மறுசீரமைப்புக் குறித்து முடிவெடுக்க சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தேன். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அடுத்த வாரம் சமர்ப்பிக்கவுள்ளேன். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் ஆணைக்குழுவை நியமித்து அதனூடாக முழு அரச பணியாளர்களின் சம்பள மறுசீரமைப்புக் குறித்த அறிக்கையைப் பெறவுள்ளோம்.

ரயில் சாரதிகளின் திடீர் வேலைநிறுத்தமானது சம்பிரதாயத்துக்கு முரணானதாக அமைந்தது. முன் அறிவித்தல் இன்றி அவர்கள் மேற்கொண்ட இந்த வேலைநிறுத்தத்தால் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பலர் பாரிய கஷ்டங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அரசாங்கத்தின் சார்பில் அவர்களுக்கு கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

திடீர் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டதும் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தாமாக முன்வந்து இராணுவத்தினரின் பஸ்களை ரயில் நிலையங்களுக்கு அனுப்பி நடுத்தெருவில் நின்ற ரயில் பயணிகள் தமது இடங்களுக்குச் செல்ல வழிவகுத்திருந்தார். சட்டம் ஒழுங்கு அமைச்சரின் பணிப்புரையின் கீழ் பொலிஸாரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.

போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்கவின் பணிப்புரையில் விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தம் முடிவடையும் வரை ரயில் சீசன் டிக்கட்டுக்களைப் பயன்படுத்தி போக்குவரத்து சபையின் பஸ்களின் பயணிக்க முடியும். புதிய பஸ்வண்டிகளைப் பெற்றுக் கொடுக்கவிருப்பதுடன், ஓய்வுபெற்ற ரயில் சாரதிகளை மீண்டும் சேவைக்கு அழைத்துள்ளோம்.

இது மாத்திரமன்றி உயர்தரப் பரீட்சைக்குச் செல்லும் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது காலை முதல் இலவச விசேட பஸ் சேவைகளை முன்னெடுத்துள்ளோம். வழித்தட அனுமதி இல்லாத பஸ்களையும் பயணிகள் சேவையில் ஈடுபடுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளோம். மாகாணங்களில் உள்ள தனியார் பஸ்கள் இருந்தால் அரசாங்கத்தின் நிதியைச் செலவுசெய்து அந்த பஸ்களையும் பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அவ்வாறு பஸ்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் உடனடியாக நிதி அமைச்சின் செயலாளர் அல்லது உதவிச் செயலாளரைத் தொடர்புகொண்டு பதிவுசெய்யுமாறு கோருவதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டார்.

முழு அரச பணியாளர்களின் சம்பள மறுசீரமைப்பை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் பூர்த்திசெய்யவுள்ளோம். அதுவரை வேலைநிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைக்கின்றேன். இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் நான் ஈடுபட்டதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...