குழந்தை அழுததால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட இந்திய தம்பதி | தினகரன்

குழந்தை அழுததால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட இந்திய தம்பதி

3 வயது குழந்தை அழுத காரணத்தால் இந்திய தம்பதியை இனவெறியுடன் திட்டி விமானத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் இறக்கிவிட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் புகார் அளித்துள்ளனர்.

கடந்த மாதம் 23-ம் திகதி ஜெர்மனியின் லண்டனில் இருந்து பெர்லின் நகருக்குப் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. இதில் பல இந்தியர்களும் பயணித்தனர். அதில் ஒரு இந்திய தம்பதி தங்களின் 3 வயது மகனுடன் பயணிக்க அனுமதிச்சீட்டு பெற்றிருந்தனர்.

விமானம் பெர்லின் நகரில் இருந்து லண்டனுக்குப் புறப்பட இருந்த நேரத்தில் இந்திய தம்பதியின் மகன் திடீரென்று அழத் தொடங்கினார். அவரின் சத்தம் விமானம் முழுவதும் எதிரொலித்தது. அந்தக் குழந்தையின் அழுகையைக் கட்டுப்படுத்த பெற்றோர்கள் முயற்சித்தும் நடக்கவில்லை. திட்டியும், பிஸ்கட், சொக்லேட்டுகள் கொடுத்தும் அந்தக் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை.

இதைக்கவனித்த விமான ஊழியர்கள் குழந்தையின் அழுகையை நிறுத்துங்கள் மற்றபயணிகளுக்கு தொந்தரவாக இருக்கிறது எனக் கூறினர். ஆனால் குழந்தை நிறுத்தவில்லை என்பதால் விமானத்தில் இருந்து இறங்கிவிட்டு மாற்றுவிமானத்தில் செல்ல அறிவுறுத்திவிட்டுச் சென்றனர். அப்போது விமான ஊழியர்கள் இந்தியத் தம்பதியை இனவெறியுடன் திட்டி அவமானப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன் பின் அந்த இந்தியத் தம்பதி பெர்லின் நகரில் இருந்து வேறு விமானம் மூலம் லண்டன் நகருக்கு சென்று சேர்ந்தனர்.

இதுகுறித்து அந்த குழந்தையின் தந்தையான மத்திய சாலைப்போக்குவரத்து துறை அதிகாரி மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த புகாரில் கூறியுள்ளதாவது:

‘‘எனது 3 வயது குழந்தை விமானத்தில் அழுதது என்பதற்காக பெர்லினில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் இறக்கிவிட்டுள்ளனர். எங்களை இனவெறியுடன் திட்டி அவமானப்படுத்தினார்கள்.

நாங்கள் குழந்தையின் அழுகையை நிறுத்திவிடுகிறோம், நீங்கள் விமானப்பயணத்தை தொடரலாம் என்று கூறியும், இனவெறியுடன் வார்த்தையைக் கூறி இந்தியர்கள் எப்போதும் இப்படித்தான் என்று திட்டினார்கள். எங்களின் இருக்கைக்குப் பின்புறம் அமர்ந்திருந்த இந்தியர்களும் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து குழந்தையின் அழுகை நிறுத்த முயற்சித்தனர்.

இது குறித்து விசாரணை நடத்த வேண்டும’’ என புகாரில் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இந்த பிரச்சினை குறித்து விளக்கம் அளிக்கையில், ‘‘இந்த விவகாரத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வோம்.

எந்த வகையிலும் இனவெறி உள்ளிட்ட எந்த அடிப்படையிலும் பாகுபாட்டை பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

இந்த விவகாரத்தில் முழுமையாக விசாரணை நடத்துவோம், அந்தப் பயணியையும் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கேட்டு அடுத்த அறிக்கை விரிவாக விடுகிறோம்” எனத் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...