கேரளாவில் கனமழை நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலி | தினகரன்

கேரளாவில் கனமழை நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலி

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து அங்குக் கனமழை பெய்துவருவதால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இங்கு பெய்த மழையால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 18 பேர் பலியாகி இருப்பதாக மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கிறது.

இடுக்கி மாவட்டத்தில் மட்டும் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் இறந்துள்ளனர். தேவிகுளம் தாலுகாவில் உள்ள அடிமாலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர், இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், இருவர் தேவிகுளம் தாலுகாவில் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர். இடுக்கி தாலுகாவிலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் ஆனால் அவர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை.

மலப்புரம் மாவட்டத்தில் 5 பேரும் கண்ணூரில் 2 பேரும் வயநாடு மாவட்டத்தில் ஒருவரும் நிலச்சரிவு மற்றும் மழைக்குப் பலியாகியுள்ளனர்.

மேலும் வயநாடு, பாலக்காடு, கோழிக்கோடு மாவட்டங்களில் 3 பேரைக் காணவில்லை.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடமலையார் அணையில் இருந்து 600 கனஅடி நீர் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பெரியாற்றில் வெள்ளம் ஓடுகிறது.

மேலும் இடுக்கி அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 2,403 அடியில் 2,398 அடியை எட்டிவிட்டதால் அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.


Add new comment

Or log in with...