மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வெற்றி | தினகரன்

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வெற்றி

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் 105 வாக்குகள் மட்டுமே பெற்று காங்கிரஸ் கூட்டணி வெற்றியை பறிகொடுத்தது. பிஜூ ஜனதாதளம் உள்ளிட்ட எந்த அணியையும் சேராத கட்சிகளின் ஆதரவையும் பெற்று பாஜக கூட்டணி வேட்பாளர் 125 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 245 எம்.பிக்களைக் கொண்ட மாநிலங்களவையில் வெற்றி பெற 123 எம்.பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலை இருந்தது.

மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு போதிய எம்.பிக்கள் இல்லாத நிலையில் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒரணியில் திரட்டி இந்த தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் திட்டமிட்டது.

பாஜக கூட்டணியின் சார்பில் ஐக்கிய ஜனதாதளக் கட்சியைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங் வேட்பாளராக களமிறங்கினார். காங்கிரஸ் கூட்டணி சார்பில் தேசியவாத காங்கிரஸூக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் முன் வந்தது. ஆனால் அந்த கட்சி தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என தெரிவித்தது.

இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளராக ஹரி பிரசாத் அறிவிக்கப்பட்டார். இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெறவேண்டும் என காங்கிரஸ் தீவிரம் காட்டியது. எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டது. அதன்படி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆம் ஆத்மி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் ஆதரவளிக்குமாறு கோரினார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றால் அரவிந்த் கேஜ்ரிவாலை தொலைபேசியில் ராகுல் காந்தி தொடர்பு கொண்டு ஆதரவு கேட்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி நிபந்தனை விதித்தது. இதை காங்கிரஸ் ஏற்கவில்லை.

அதுபோலவே எந்த அணியையும் சேராதா பிஜூ ஜனதாதளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமதி ஆகிய கட்சிகளை தங்கள் பக்கம் வளைக்க பாஜக கூட்டணி செயலில் இறங்கியது. பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு, தெலுங்கானா ராஷ்டிர சமதி, தெலுங்குதேசம், பிஜூ ஜனதாதளம் தலைவர்களை தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். அந்த கட்சிகளும் ஆதரவளிப்பதாக அறிவித்தன.

இதனால் காங்கிரஸ் வெற்றி பெரும் சூழல் குறைந்தது. அதேசமயம் போதிய ஆதரவு இல்லாத நிலையிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் அறிவிக்கப்பட்டபடி மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற தேவையான 123 வாக்குகளுக்கும் கூடுதலாக 125 வாக்குகள் பெற்று பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஹரி பிரசாத்துக்கு 105 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.


Add new comment

Or log in with...