இ.போ.ச பஸ்களில் பயணம் இலவசம்; பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு | தினகரன்

இ.போ.ச பஸ்களில் பயணம் இலவசம்; பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு

இ.போ.ச பஸ்களில் பயணம் இலவசம்; பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு-Train Strike-Media & Finance Ministry Press Release
(Pix: Gayan Rathnayaka)

 

எந்வொரு பாதையிலும் பயணிக்க தனியார் பஸ்களுக்கு அனுமதி

முறையான முன்னறிவித்தல் எதுவுமின்றி, இன்று (08) பிற்பகல் திடீரென புகையிரத பணி புறக்கணிப்பை மேற்கொண்டமை காரணமாக, அசௌகரியங்களுக்குள்ளான புகையிரத பயணிகள் அனைவர் தொடர்பிலும் தமது அரசாங்கம் வருந்துவதாக, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நேற்றைய தினம் (07) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், புகையிரத தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரச சேவை ஊழியர்களினதும் சம்பள திருத்தம் தொடர்பிலான, சம்பளம் தொடர்பான விசேட ஆணைக்குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இ.போ.ச பஸ்களில் பயணம் இலவசம்; பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு-Train Strike-Media & Finance Ministry Press Release

அம்முடிவுக்கு அமைய, நிதியமைச்சினால் எதிர்வரும் வாரம் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புகையிரத பயணிகளை அசௌகரியங்களுக்குள்ளாக்கி, அதன் மூலம் அரசாங்கத்தை சங்கடத்திற்குள்ளாக்குவதற்காக, புகையிரத ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையை, அரசாங்கம் மிக வன்மையாக கண்டிக்கிறது.

இந்த அவசர பணி புறக்கணிப்பினால் அசௌகரியங்களுக்குள்ளான, தங்களது வீடுகளை நோக்கி பயணம் செய்வதற்காக புகையிரத நிலையங்களை நோக்கி வந்த அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் உள்ளிட்ட புகையிரத பயணிகளுக்காக விசேட பஸ் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புகையிரத பயணிகள், தங்களது பயணச்சீட்டை அல்லது பருவச் சீட்டை பயன்படுத்தி, இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் இலவசமாக பயணிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

பாதை அனுமதிப்பத்திரத்தை (Route Permit) கருதாது, தனியார் பஸ்களுக்கு எந்தவொரு பாதையிலும் பயணிப்பதற்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இ.போ.சவினால் மேற்கொள்ளப்படும் விசேட பஸ் சேவைகள் தொடர்பிலான, செலவுகளை அரசாங்கம் இ.போ.ச பஸ்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.

பணிப் புறக்கணிப்பை கைவிட்டு, தற்போதைய நிலைக்கு தீர்வு காணும் பொருட்டு, மிக விரைவாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 


Add new comment

Or log in with...