எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பதிலாக அதிகாரத்தை கைப்பற்றுங்கள் | தினகரன்

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பதிலாக அதிகாரத்தை கைப்பற்றுங்கள்

மஹிந்த அணியினர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவதைவிடுத்து முன்னர் ஆளும் தரப்பில் உள்ள ஐ.ம.சு.மு உறுப்பினர்களையும் உள்ளடக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்க வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கு இருக்கும் அடையாளங்களை ஏற்றுக் கொள்ளாத வகையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் அது அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்துவிடும் என்றும் அவர் கூறினார்.

எதிரணியில் 70 ஆசனங்கள் இருப்பதாயின் ஆளும் கட்சியில் உள்ள 26 பேருக்கு கீழ்பட்டு இருக்காமல் ஐ.ம.சு.முவின் நிறைவேற்றுக் குழுவில் பங்குபற்றி சகலரையும் இணைத்துக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்க வேண்டும். அதனைவிடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற முயற்சிப்பது அர்த்தமற்றது என்றும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் பாராளுமன்றத்தில் எழுந்த வாதப் பிரதிவாதத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அநுரகுமார திசாநாயக்க இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

19ஆவது திருத்தச் சட்டமூலத்தின் கீழ் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு அடையாளங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் கட்சிகள் தொடர்பில் தெளிவான நிலைப்பாடு உள்ளது. இதன் கீழேயே கட்சிகள் இணைந்து எவ்வாறு தேசிய அரசாங்கத்தை அமைப்பது போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அடையாளத்தை மதிக்காது செயற்பட்டால் எதிரணியில் இருக்கும் கட்சியொன்று தனக்கு விரும்பியவர்களுடன் கூட்டணியை ஏற்படுத்தி தேசிய அரசாங்கத்தை உருவாக்க முடியும். எனவே இது விடயத்தில் எடுக்கப்படும் முடிவு அரசியலமைப்பை மீறுவதாக அமைந்துவிடும்.

19ஆவது திருத்தத்தின் கீழ் கட்சிகளுக்கு கிடைத்த அடையாளத்துக்கு அமைய எதிர்க்கட்சிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பி மற்றும் ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 23 பேரைக் கொண்ட சிறியதொரு எதிர்க்கட்சியே உள்ளது. எனவேதான் நேரம் ஒதுக்குவதில் எதிர்க்கட்சிக்கு 30 வீதமும் 70 வீதம் ஆளும் கட்சிக்கும் வழங்கி வருகின்றோம். எனினும் எதிர்க்கட்சிக்கு 60 வீதமும் அரசாங்கத்துக்கு 40 வீதமுமே சாதாரண வழக்கமாகும். தற்பொழுது ஆளும் கட்சிக்கே அதிக நேரம் வழங்கியுள்ளோம்.

அது மாத்திரமன்றி ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு தனியான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. தனிக்கட்சி என்ற அடையாளத்தின் கீழ் தினேஷ் குணவர்த்தன கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சித் தலைவராகவிருந்த நிமல் சிறிபால டி.சில்வா, தனது கட்சித் தலைவர் பதவியை தினேஷ் குணவர்த்தனவுக்கு வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற பதாகையைப் பிடித்தமைக்காக கட்சித் தலைவர் பதவி தினேஷ் குணவர்த்தனவுக்கு கிடைக்கவில்லை. இது அவர்களுடைய கட்சி விவகாரம்.

இதுபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் ஐ.ம.சு.முவைச் சேர்ந்த 70 பேரும் ஆளும் கட்சியில் உள்ள 26 பேரையும் தம்முடன் இணைத்துக் கொண்டு அதிகாரத்தைப் பிடிக்க முயற்சிக்க வேண்டும். ஆளும் தரப்பில் உள்ள 26 பேருக்கு கீழ்ப்பட்டு இருக்கத் தேவையில்லை. ஐ.ம.சு.முவில் முன்னாள் ஜனாதிபதிகள், பாரிய ஒருங்கிணைப்பாளர்கள் பலரும் இருக்கின்றனர். எதிர்க்கட்சிப் பதவியைக் கோருபவர்கள் ஐ.ம.சு.முவின் நிறைவேற்றுக் குழுவுக்குச் சென்று சகலரையும் ஒன்றிணைத்து அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்க வேண்டும்.

19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் நிமல் சிறிபால டி.சில்வா எதிர்க்கட்சித் தலைவராக இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டது. இந்த விடயத்தை அப்போது எவரும் பிரச்சினைக்கு உட்படுத்தியிருக்கவில்லை என்றார்.

இதேவேளை, மஹிந்த அணியைச் சேர்ந்தவர்கள் கூழுக்கும் மீசைக்கும் ஒரே நேரத்தில் ஆசைப்பட முடியாது என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவது பிழையான முன்னுதாரணமாக அமைந்துவிடும். பாராளுமன்றத்தில் ஆறு கட்சிகளே அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்த அணியினர் கூழுக்கும் மீசைக்கும் ஆசைப்படுகின்றனர் என்றார்.

மகேஸ்வரன் பிரசாத்

 


Add new comment

Or log in with...