திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் புனித தலங்கலாக்கப்பட வேண்டும் | தினகரன்


திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் புனித தலங்கலாக்கப்பட வேண்டும்

திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் புனித தலங்கலாக்கப்பட வேண்டும்-Thiru Koneswaram Must be Named as Holy Place

 

அமைச்சரவை அனுமதி கோருமாறு மனோ கணேசன், சுவாமிநாதனுக்கு கடிதம்

திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய தலங்கள், இந்துக்களின் புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டுமென அமைச்சர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்தான அமைச்சரவை பத்திரத்தை, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, இந்து மத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்     அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இத்தகைய முயற்சி சாத்தியமாக அவசியமான ஒத்துழைப்புகளை வழங்க நான்  தயாராக உள்ளேன் என, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் சுவாமிநாதனுக்கு உத்தியோபபூர்வமாக அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது, சுமார் 400 ஆண்டு கால வரலாறு கொண்ட, மன்னார் புனித மரியாள் மடு தேவாலய பிரதேசம் புனித பிரதேசமாக அறிவிக்கக் கோரும் அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்பித்திருந்தார்.

இதுவே இந்நாட்டில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள முதலாவது கத்தோலிக்க புனித தலமாகும். இது  ஒரு நல்ல நடவடிக்கையாகும். எனவே இதை நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏக மனதாக ஏற்றுக்கொண்டுள்ளோம். 

இதே அடிப்படையில், திருஞானசம்பந்தரால் பாடப்பட்டு, இந்நாட்டில் தென்கைலாயம் என கொண்டாடப்படும், கிழக்கு கரையில் அமையப் பெற்ற திருக்கோணேஸ்வரம், மேற்கு கரையில் அமையப்பெற்ற திருக்கேதீஸ்வரம் ஆகிய தலங்களையும், வட கோடியில் அமைந்துள்ள  நகுலேஸ்வரம் தலத்தையும் புனித தலங்களாக பிரகடனம் செய்ய வேண்டுமென இந்நாட்டில் வாழும் இந்துக்கள் என்னிடம் கோரியுள்ளனர்.

இந்து மத விவகாரம் உங்களை சார்ந்த அமைச்சு விவகாரம் என்பதால், இதை உங்கள் கவனத்துக்கு அதிகாரபூர்வமாக கொண்டு வருகிறேன். என அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.


 


Add new comment

Or log in with...