Home » காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உடன்பாடு: 50 பணயக்கைதிகள் விடுதலை

காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உடன்பாடு: 50 பணயக்கைதிகள் விடுதலை

-போர் நிறுத்த அமுலுக்கு முன்னரும் காசாவில் தொடர்ந்து தாக்குதல்

by sachintha
November 23, 2023 6:25 am 0 comment

காசாவில் நான்கு நாள் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேல் அரசாங்கம் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன்போது ஹமாஸ் போராளிகளால் பிடிக்கப்பட்டிருக்கும் 50 பணயக்கைதிகள் விடுவிக்கப்படவிருப்பதோடு அதற்கு பகரமாக இஸ்ரேல் சிறையில் இருக்கும் குறைந்தது 150 பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். இந்தப் போர் நிறுத்தக் காலத்தில் காசாவுக்கு உதவிகள் செல்லவும் அனுமதிக்கப்படவுள்ளது.

நேற்று போர் நிறுத்தத்திற்கான உடன்பாடு எட்டப்பட்டபோதும் அது இன்று (23) வியாழக்கிழமையே அமுலுக்கு வரவிருக்கும் நிலையில் இஸ்ரேல் நேற்றைய தினத்திலும்காசா மீது சரமாரித் தாக்குதல்களை நடத்தியது. எனினும் போர் நிறுத்தம் ஒன்று ஏழு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் வேதனையை சந்தித்து வரும் காசா மக்களுக்கு பெரும் ஆறுதலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாரின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை மூலமே இந்தப் போரில் முதல் முறை உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது. இந்தப் போர் நிறுத்தத்தை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.

இந்தப் போர் நிறுத்தம் மேலும் நீடிக்கப்படுவதற்கும், மேலும் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவுக்குள் ஊடுருவி நடத்தி தாக்குதலின்போதே ஹமாஸ் மற்றும் பலஸ்தீன போராளிகள் சுமார் 240 பேரை பணயக்கைதிகளாக பிடித்தனர். முன்னதாக நான்கு பணயக்கைதிகளை அந்த அமைப்பு விடுவித்திருந்தது.

போர் நிறுத்தம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நேரம் விரைவில் அறிவிக்கப்படவிருந்ததோடு முதலாவது பணயக்கைதிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளனர்.

நான்கு நாள் போர் நிறுத்தத்தில் ஒரு நாளில் குறைந்தது 10 பணயக்கைதிகள் வீதம் மொத்தம் 50 பெண்கள் மற்றும் சிறுவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அப்பால் ஒரு நாளைக்கு பத்து பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வகையில் போர் நிறுத்தம் முடியுமான காலம் வரை நீடிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் விடுவிக்கப்படும் பலஸ்தீன கைதிகள் தொடர்பில் விபரம் வெளியிடப்படாதபோதும், இஸ்ரேலிய நீதி அமைச்சு விடுவிக்கப்படக் கூடிய 300 பலஸ்தீன கைதிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டது.

ஹமாஸ் வெளியிட்ட அறிவிப்பில் 50 பணயக்கைதிகளுக்கு பகரமாக இஸ்ரேலிய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 150 பலஸ்தீன பெண்கள் மற்றும் சிறுவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் போர் நிறுத்தத்தின் மூலம் மனிதாபிமான, மருத்துவ மற்றும் எரிபொருள் உதவிகளை ஏற்றிய நூற்றுக்கணக்கான ட்ரக் வண்டிகள் காசாவுக்குள் அனுமதிக்கப்படவுள்ளன என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.

நான்கு நாள் போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேல் எந்தத் தாக்குதலையும் நடத்தாது, யாரையும் கைது செய்யாது என்று ஹமாஸின் அறிக்கை கூறுகிறது.

“நான்கு நாள் தற்காலிக போர் நிறுத்தத்தின் போது, தெற்கு காசாவில் விமானங்கள் பறக்க முற்றிலுமாகத் தடை இருக்கும். வடக்கு காசாவில் ஒவ்வொரு நாளும் ஆறு மணி நேரம் இந்தக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும்” என்று ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காசாவின் வான்வெளி முழுவதும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டது தொடக்கம் காசாவில் முழு முற்றுகையை செயற்படுத்திய இஸ்ரேல் அங்கு இடைவிடாது தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட பின்னரும் கூட இஸ்ரேலிய இராணுவம் கடந்த செவ்வாய் இரவு மற்றும் நேற்றுக் காலையிலும் தாக்குதல்களை நடத்தியது. இதில் குறைந்தது 100 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதேபோன்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் தாக்குதல்கள் இடம்பெற்றன.

மத்திய காசாவின் நுஸைரத் முகாமில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. வடக்கில் ஜபலியா முகாம் மீது இடம்பெற்ற தாக்குதல்களில் மேலும் 60 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

போர் ஆரம்பித்தது தொடக்கம் காசாலில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 14,000ஐ தாண்டியுள்ளது. இதில் 40 வீதமானவர்கள் சிறுவர்களாவர்.

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் கட்டாரின் தலைமை பேச்சுவார்த்தையாளரான, வெளியுறவு அமைச்சகத்தின் இணை அமைச்சரான முஹமது அல் குலைபி கூறியதாவது, “போர் நிறுத்தம் என்பது எந்தத் தாக்குதல்களும் இல்லை. எந்த இராணுவ நடவடிக்கைகளோ, எந்த விரிவாக்கங்களோ எதுவும் இல்லை” என்றார். இந்த உடன்பாடு பிரதான உடன்படிக்கை ஒன்று மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கு வழிவகுக்கும் என்றும் அதுவே எமது நோக்கமாகும் என்றும் முஹமது அல் குலைபி குறிப்பிட்டார்.

“என்ன போர் நிறுத்தம் இருக்க முடியும்?”

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான 75 ஆண்டு முறுகலில் அதிக அழிவுகளை ஏற்படுத்திய மோதலுக்குப் பின்னர் அமைதியை நோக்கிய பாதையில் முதல் படியாக இந்த உடன்படிக்கை அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏழு வாரங்கள் இடம்பெற்ற அழிவுகள் மற்றும் உயிரிழப்புகள் உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் காசாவில் பாரிய மனிதாபிமான பேரழிவுக்கு இந்தப் போர் வழிவகுத்துள்ளது.

“எமக்கு இத்தனை நிகழ்ந்த பின்னர் என்ன போர் நிறுத்தம் இருக்க முடியும்? நாம் அனைவரும் இறந்த மனிதர்கள்” என்று இஸ்ரேலிய வான் தாக்குதலில் தனது மருமகன் மற்றும் மருமகளை இழந்த மோனா என்ற பெண் குறிப்பிட்டார். “இது நாம் இழந்தவற்றை மீண்டும் பெற்றுத்தராது, எமது காயங்களை அல்லது நாம் சிந்திய கண்ணீரை ஆற்றாது” என்றார்.

மறுபுறம் காசாவில் பிடிக்கப்பட்டிருப்பதாக நம்பப்பபடும் தனது 13 வயது பேத்தி திரும்பி வரும் வரை இந்த போர் நிறுத்த செய்தியை நம்பப்போவதில்லை என்று இஸ்ரேலின் கமலியா ஹொடர் இஷாய் தெரிவித்துள்ளார்.

இந்தப் போர் நிறுத்தம் தமது பரந்த திட்டத்தை தடுக்காது என்று இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் தெரிவித்துள்ளது. “நாம் போரில் ஈடுபட்டுள்ளோம். எமது இலக்கு எட்டப்படும் வரை போரைத் தொடர்வோம். ஹமாஸை ஒழிப்போம், அனைத்து பணயக்கைதிகளையும் மீட்போம் மற்றும் காசாவில் உள்ள எந்த அமைப்பும் இஸ்ரேலை அச்சுறுத்த முடியாது என்பதை உறுதி செய்வோம்” என்று பதிவு செய்யப்பட்ட செய்தி ஒன்றை வெளியிட்டு நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்ட உடன்படிக்கையை நாம் அறிவித்தபோதும், எமது விரல் தொடர்ந்தும் துப்பாக்கி விசையிலேயே இருக்கிறது என்றும் எமது வெற்றிகர போராளிகள் எமது மக்களை பாதுகாப்பது மற்றும் ஆக்கிரமிப்பாளர்களை தோற்கடிப்பதில் விழிப்புடன் உள்ளனர் என்றும் உறுதி அளிக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை காசாவின் வட பகுதியில் 3 மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளை வேறிடங்களுக்கு மாற்ற உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது.

ஆனால் எங்கும் பாதுகாப்பு இல்லை என்பதால் நோயாளிகளைப் பத்திரமாகப் பாதுகாப்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

அல் ஷிபா, இந்தோனேசியா மற்றும் அல் அஹ்லி ஆகிய மருத்துவமனைகளைச் சேர்ந்த ஊழியர்கள் உதவி கோரியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியது. மருத்துவமனைகளுக்குள்ளே இருந்தால் பிழைக்க வாய்ப்பே இல்லை என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

காசாவின் மிகப்பெரிய அல் ஷிபா மருத்துவமனையின் சில பகுதிகள் இஸ்ரேலின் வான் தாக்குதலில் நாசமாகிவிட்டன. முழுமையாக முடங்கிக் கிடக்கும் வட பகுதி சுகாதார நிலையங்களில் அடைக்கலம் நாடுவோர் கூட்டம் நிரம்பி வழிகிறது.

தெற்கே உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி உள்ளது. மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நீடிக்கிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT