ஒன்லைன் ஷொப்பிங்; ஏமாற்றக் காத்திருக்கும் எத்தர்கள் | தினகரன்


ஒன்லைன் ஷொப்பிங்; ஏமாற்றக் காத்திருக்கும் எத்தர்கள்

ஒன்லைன் ஷொப்பிங்; ஏமாற்றக் காத்திருக்கும் எத்தர்கள்-Online shopping

 

பேஸ்புக் மூலம் இடம்பெற்ற உண்மைக் கதை

உலகில் இன்று பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சமூகவலைத்தளங்களில் ஒன்றாக பேஸ்புக் விளங்குகின்றது. 2004 ஆம் ஆண்டு மார்க் என்பவரால் வெறும் பொழுதுபோக்குக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையத்தளம் இன்று அனைவரையும் தன் வசம் கட்டிபோட்டு வைத்திருக்கின்றது எனலாம்.

பேஸ்புக்கின் ஊடாக உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நண்பர்களையும், அந்த நாட்டு மக்களின் கலாச்சாரம்;, வாழ்க்கை முறைப் பற்றியும் அறிந்துக்கொள்கின்றார்கள். வாழ்வில் நடக்கும் சுக, துக்கங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றார்கள்.வேலை இல்லாதவர்கள் பேஸ்புக்  மூலம் வேலைவாய்ப்பினை  பெறுகின்றார்கள், சிலர் பேஸ்புக்கில் நண்பர்களாகி பின், காதலர்களாகி  திருமணம் செய்து கொள்கின்றார்கள். ஆனால் இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க பேஸ்புக்கினால் இடம்பெறும் சில குற்றங்களினால் அதை வெறுத்து ஒதுக்கும்; நிலையும் உருவாகியுள்ளது. பேஸ்புக் நட்பினால் பலர் தங்களுடைய மானத்தை இழந்தவர்களாகவும், விவாகரத்துப் பெற்றவர்களாகவும், உடைமைகளை, சொத்துக்களை இழந்தவர்களாகவும்;; இருக்கின்றனர்.

அத்தகைய பல பேஸ்புக் குற்றச்செயல்களை கடந்தகாலங்களில் சுட்டிகாட்டியிருந்தோம்.

இன்று பேஸ்புக் மூலம் இடம்பெறும் ஒன்லைன் ஷொப்பிங்கில் நடக்கும் ஏமாற்றுவேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. பல வியாபார நிறுவனங்கள் தம்மை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக பேஸ்புக் தளத்தினை ஒரு ஊடகமாக பயன்படுத்திவருகின்றன. இதற்காக பேஸ்புக் லைக் பேஜ் வசதியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதை குறுக்குவழியில்  பணம் சம்பாதிக்க நினைக்கும் பலர் தவறான முறையில் பயன்படுத்துகின்றார்கள்.

தரமற்ற பொருட்களை விற்பனை செய்வது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செய்யாமல் இழுத்தடிப்பது, போலி தளங்களை உருவாக்கி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவது என்று மக்களை ஏமாற்றுகின்றார்கள். இதன் விளைவாக பேஸ்புக்கில் பலர் பணத்தை பறிகொடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

அந்தவரிசையில் பேஸ்புக் லைக்பேஜ் (குயஉநடிழழம டமைந pயபந) ஊடாக போலி விளம்பரங்களை பிரசுரித்து பல இலட்சம் ரூபாக்களை மோசடி செய்த நபரொருவரை மிரிஹான பொலிஸார் அண்மையில் கைதுசெய்தனர்.

இதுதொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது சந்தேகநபர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்; என்பது தெரியவந்துள்ளது.

சிலாபம் சந்தலங்காவ என்ற மிகவும் பின்தங்கிய கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட பிரதீப் புஷ்பகுமார (பெயர் மாற்றப்பட்டுள்ளது. ) குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. தனது 20ஆவது வயதில் இராணுவத்தில் இணைந்த பிரதீப் , 2012ஆம் ஆண்டளவில் தனது காதலியை சந்திப்பதற்கு விடுமுறை வழங்காத காரணத்தினால் மேலதிகாரியை சுட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சிலகாலம் தலைமறைவாகி இருந்துள்ளார்.

எனினும் வெகுநாட்கள் அவரால் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிக்க முடியவில்லை. பொலிஸாரின் சூட்சுமமான விசாரணையில் பிரதீப் சிக்கிக்கொண்டார். இதன்காரணமாக நீதிமன்றம் அவருக்கு சிறைத்தண்டனை வழங்கியது. எனினும், அவர் 8 மாதங்களின் பின்னர் மீண்டும் பிணையில் வெளியில் வந்தார். அதன்பின்னர் 2016 ஆம் ஆண்டு மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்; இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. எனினும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தார் பிரதீப்.

இந்நிலையிலேயே பேஸ்புக் லைக் பேஜ்கள் ஊடாக பிரதீப் பணமோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். தனது சொந்தபெயரில் பேஸ்புக் கணக்கு (Facebook account) ஒன்றை திறக்காது, போலிபெயரில் கணக்கு ஒன்றைத் திறந்து அந்த கணக்கின் ஊடாக ‘செலின் ஸ்ரீ லங்கா’ என்ற பெயரில் போலி பேஸ்புக் லைக் பேஜ் ஒன்றை ஆரம்பித்துள்ளார்;. அதில் கவர்ச்சிகரமான மரதளப்பாடங்களின் படங்களை பதிவேற்றி ‘குறைந்த விலையில் தரமான தளபாடங்களை எங்களிடம் பெற்றுக்கொள்ள முடியும்’ என்ற வாடிக்கையாளர்களை கவரும் வாசகங்களையும் அதன் கீழ் பதிவிட்டுள்ளார். இதன்காரணமாக பல பேஸ்புக் பாவனையாளர்கள் அவருடைய ‘செலின் ஸ்ரீ லங்கா’ என்ற லைக் பேஜ்ஜை லைக் செய்துள்ளார்.

நாளடைவில் தனது ஒன்லைன் வியாபாரத்தை விரிவுப்படுத்திக்கொள்வதற்காக உண்மையாக வாடிக்கையாளர்களின் மீது அக்கறை கொண்டிருக்கும் வியாபார நிறுவனமாக அதை நிலை நிறுத்தினார். அதற்காக பல்வேறு வியாபார உத்திகளையும் கையாண்டார். ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான வீட்டு தளபாடங்கள் அடங்கிய பேகேஜ் ஒன்றை 90 ஆயிரத்திற்கு எங்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் என்று தனது வியாபார லைக் பேஜ்ஜில் பதிவிட்டதுடன், வாடிக்கையாளர்கள் தொடர்புக்கொள்ளும் வகையில் தொலைபேசி இலக்கத்தையும்; பதிவிட்டார். அதைதொடர்ந்து பலர் அந்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புக்கொண்டு விபரங்களை கேட்டறிந்து கொண்டனர்.

இதன்போது தளபாடங்களுக்கு முற்பணமாக சிறிய தொகையொன்றை வங்கியில் வைப்பிலிட்டு வீட்டு விலாசத்தை அனுப்பிவைத்தால் டெலிவரி கட்டணமின்றி வீட்டுக்கே தளபாடங்களை கொண்டுவந்து தருவதாகவும் அதன்பின்னர் மிகுதிபணத்தை; செலுத்தலாம் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, பணத்தை வைப்பிலிட வசதியாக வங்கிகணக்கு இலக்கமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

எனவே பிரதீப்பின் கவர்ச்சிகரமான  விளம்பர உத்திகளில் ஏமாந்த பல வாடிக்கையாளர்கள் பணத்தை வங்கியில் வைப்பிலிட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கு உரிய தளபாடங்கள் சொன்ன நேரத்தில் வீட்டுக்கு வந்துசேரவில்லை. அதனைதொடர்ந்து அவர்கள் குறித்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்திய போது அந்த தொலைபேசி இலக்கம் பாவனையில் இல்லை என்ற வாடிக்கையாளர் சேவை நிலையத்தின் பதில் மட்டுமே கிடைத்துள்ளது.

மீரிஹான, ஹோமாகம, வெல்லம்பிட்டிய, கண்டி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பலர் இவ்வாறு பணத்தை வைப்பிலிட்டு ஏமாந்துள்ளனர். இவர்களில் தன்னுடைய மகளுக்கு திருமண பரிசாக தளபாடங்களை வழங்குவதற்காக பணத்தை வைப்பிலிட்ட தந்தையொருவரும் இருந்தார்.

இவர் மீரிஹான பொலிஸ்நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே இதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேகநபரான பிரதீப்பை நுகெகொடை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்தனர்.

அதன்பின்னர் திஹாரிய பிரதேசத்தில் அவர் தங்கியிருந்த அறையை சோதனையிட்டனர். இதன்போது குறித்த அறையில் விலையுர்ந்த இலகுவில் யாரும் நுழைய முடியாத நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மடிக்கணனி, கையடக்கதொலைபேசி, வங்கி புத்தங்கள், வங்கிஅட்டைகள், சிம்கார்ட்கள் போன்றவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

ஒன்லைன் ஷொப்பிங் செய்வது இலகுவான வழியாக இருக்கின்ற போதிலும் இத்தகைய் மோசடிகளில் நாம் சிக்கி ஏமாறாமல் அவதானமாக இருக்கவேண்டும். 

- வசந்தா அருள்ரட்ணம்

 


Add new comment

Or log in with...