Thursday, March 28, 2024
Home » கலியுகத்தின் கலி தீர்க்கவென வந்துதித்த அவதார புருஷர் பகவான் =சத்திய சாயிபாபா

கலியுகத்தின் கலி தீர்க்கவென வந்துதித்த அவதார புருஷர் பகவான் =சத்திய சாயிபாபா

-இன்று ஜனன தினம்

by sachintha
November 23, 2023 6:01 am 0 comment

மனிதகுலத்தை நெறிப்படுத்தி வாழவைக்கவும், அன்புவழியில் சென்று தெய்வீகத்தை உணர வைக்கவும் திருஅவதாரம் செய்தவர் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா. ‘எங்கெல்லாம் அதர்மம் தழைத்தோங்குகின்றதோ, அங்கெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதாரம் செய்வேன்’ என்று கிருஷ்ண பரமாத்மா பகவத்கீதையிலே உபதேசம் செய்திருந்தார்.

சமுதாயத்தை சீர்திருத்தவே ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் மறுஅவதாரமாக தென்னிந்திய மாநிலத்தின் அநந்தபூர் மாவட்டத்தில் 1926, நவம்பர் 23 ஆம் திகதி பகவான் அவதாரம் செய்தார்.

புட்டப்பர்த்தியில் பிரசாந்தி நிலையத்தில் அமர்ந்திருந்து நாடினோர்க்கு நல்லதை நல்கி, அவர்களது பாவவினைகளைத் தீர்க்கும் தீனதயாளனாக, பக்தர்களைக் காக்கும் கிருஷ்ண பரமாத்மாவாக, நற்புத்தி புகட்டும் சற்குருவாக, நோய்களைத் தீர்க்கும் மகாமருத்துவ நிபுணராக, சாந்தியை நல்கும் கருணாமூர்த்தியாக அவர் விளங்கினார். 2011 ஏப்ரல் 24 ஆம் திகதி, சமாதி நிலையை எய்திய பகவான் சூக்கும வடிவில் பக்தர்களை காத்து இரட்சிப்பது அவர் தம் பக்தர்களின் அனுபவபூர்வமான உண்மையாகும்.

“என்னை நோக்கி ஒரு அடி வைத்தால், நான் என் பக்தனை நோக்கி பத்து அடி வைப்பேன்” என்ற பகவான் வாக்கு சமாதி நிலையிலும் தொடர்கின்றது. சமாதியைச் சென்று தரிசித்தால் அவர்களது குறைகள் தீர்க்கப்படுகின்றன. அமைதியும், ஆனந்தமும் மக்கள் மனதில் குடிகொள்வதனால் இன்றும் பக்தர்கள் புட்டபர்த்தி நோக்கிச் சென்று பகவான் அருள் பெறுகின்றனர்.

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கூற்றுக்கிணங்க பகவானது சர்வமதக் கொள்கையினைக் புட்டபர்த்தியில் காணலாம். பக்தர்கள் இன, மத, மொழி வேறுபாடு இன்றி பக்தி மயமாக அவரது கொள்கைகளை பின்பற்றுபவர்களாக உள்ளனர்.

ஒரேயொரு ஜாதி அது மனித ஜாதி, ஒரேயொரு சமயம் அது அன்பு என்ற சமயம், ஒரேயொரு மொழி அது இதயத்தின் மொழி, ஒரேயொரு கடவுள் அவர் எங்கும் நிறைந்தவர் எனப் பகவான் அன்பினால் கலியுகத்தில் ஒருமைப்பாட்டைக் கொண்டு வந்து அமைதி, ஆனந்தம் ஏற்பட வழிவகுத்தார்.

நீங்களும் நானும் ஒருவரே உங்கள் இதயத்தில் தெய்வீகத்தை வரவழையுங்கள். அதனை உணருங்கள் அதனை ஆன்மீக சாதனை மூலம் வெளிக்கொண்டு வாருங்கள் எனக் கூறி “உங்கள் வாழ்க்கையே என் செய்தி” (your life is my Message) என திருவாய் மலர்ந்தருளினார். 98 ஆவது அவதார தினத்தை காணும் பரம்பிரம்மமான பகவான் பாபாவின் நினைவாக ‘பிரேமதரு’ என்ற நீண்ட நாள் பயன் தரும் மரநடுகைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அவரது அன்பு என்ற ஒரு குடைக்குக் கீழ் அனைவரையும் கொண்டுவருவதற்கு இந்த ‘பிரேமதரு’ திட்டம் உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பகவானின் அவதார தினத்தைக் கொண்டாடும் நாம் அவரது கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் உறுதியான மனத்துடன் ஜாதி, சமயம் பல இனம், மொழி பேதமற்ற வண்ண மலர்களால் தொடுத்த ஒரு பூமாலையை அணிவித்து பக்தியின் உச்சக்கட்டமான பூரண சரணாகதி என்ற வண்ண மலர்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் என்ற மூன்றிலும் ஒருமைத்தன்மையை ஏற்படுத்தி நான் என்ற அகந்தையையும் காமம், குரோதம், லோபம், மோகம், மத, மாச்சரியம் என்ற ஆறு உட்பகைகளையும் அறவே ஒழித்து அன்புடனும் பண்புடனும் நற்செயல்களைப் புரிந்துவரின் நாட்டில் அமைதி நிலவி, எல்லா நன்மைகளும் எம்மை வந்தடையும்.

இன்று எங்கும் அமைதியின்மையும் பேரழிவும் தொடருகின்றன. இந்நிலை மாற அன்புவழியில் அனைவரும் பயணிக்க முயற்சிக்க வேண்டும். அன்பே கடவுள், சேவையே கடவுள், சத்தியமே தெய்வம், அன்பையும், சேவையையும் இரு கண்களாக மதித்து அனைவரும் சமம் என நினைத்து ஒற்றுமையையும், சமோதரத்துவத்தையும் பேண வேண்டும். மனிதன் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். எல்லோரும் இப்பிரபஞ்சத்தில் சமமே. பகவான் படைப்பே அற்புதமும், தெய்வீகமும், ஆனந்தமும் நிறைந்தது.

அனைவரையும் நேசியுங்கள், அனைவருக்கும் உதவி செய்யுங்கள், ஒருவரையும் வெறுக்காதீர்கள் எல்லோரும் அன்பில் மிதந்து அன்பைச் செலுத்துங்கள். அனைத்து ஜீவராசிகளும் அன்புக்குள்தான் அடைக்கலம். எனவே உலகில் ஒற்றுமை, தூய்மை, தெய்வீகத்தை உருவாக்கி ஒளியேற்றுங்கள். இன்றைய சிறுவர்கள் நாளைய பிரஜைகள், நல்ல தலைவர்களாக வருவதற்கு சிறு வயதிலிருந்தே பகவான் வகுத்த பாலவிகாஸ் கல்வியை, அதாவது உயிரூட்டும் அச்சிறப்பான மேம்பாட்டுக் கல்வியை பரந்தளவில் கற்பிப்பதற்கு வழிசமைத்துக் கொடுத்து பகவானது ஆசிர்வாதத்தை பெற முனைய வேண்டும்.

“எப்போதும் ஆனந்தமாய் இருங்கள், மற்றவர்களையும் தன்னலமற்ற சேவையின் மூலம் ஆனந்தப்படுத்துங்கள், ஏழைகளுக்கு உணவு வழங்கல், கிணறு அமைத்து கொடுத்து குடிநீர் வழங்கல், சேமிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்தல், மருத்துவ முகாம் நடத்தல், இரத்த தானம், நிவாரணம் அளித்தல், யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்தல், பண உதவி, சிற்றுண்டி வழங்கல், நாராயண சேவை, ஆடை தானம் செய்தல், வீடமைத்துக் கொடுத்தல் போன்ற சேவைகளை செய்து உங்களது மனித பிறப்பை புனிதப்படுத்துங்கள்” என பகவான் பாபா கூறினார். எனவே பகவான் போதனைகளை பின்பற்றி இன்புற்று இருப்போமாக!

ஜெய் சாய் ராம்.

திருமதி லீலாவதி மோகனசுந்தரம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT