Home » அமெரிக்க வெளியுறவுத் துறையின் ஆதரவுடன் பெண் தொழில்முனைவோரை வெளிக் கொண்டு வரும் Hatch இன் AccelerateHER Demo Day

அமெரிக்க வெளியுறவுத் துறையின் ஆதரவுடன் பெண் தொழில்முனைவோரை வெளிக் கொண்டு வரும் Hatch இன் AccelerateHER Demo Day

by Rizwan Segu Mohideen
November 14, 2023 11:18 am 0 comment

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் நிதியுதவியுடன், பெண் தொழில்முனைவோருக்காக வடிவமைக்கப்பட்ட இலங்கையின் புரட்சிமிக்க ஊக்குவிப்புத் திட்டமான AccelerateHER இற்கான Demo Day நிகழ்வை Hatch அண்மையில் நிறைவு செய்திருந்தது. இந்த திட்டமானது ஏழு பெண் தொழில் நிறுவுனர்கள், தங்களது 3 மாத நிகழ்ச்சி முழுவதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும்,வணிக வேகப்படுத்தலையும் காண்பித்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறியதை காண்பித்தது. முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் ஆகிய பார்வையாளர்களுக்கு மத்தியில் தமது தொழில்முனைவு தொடர்பான உறுதியான விடயங்களை முன்வைத்து, அவர்களின் திட்டங்களுக்கு சாத்தியமான முதலீடு மற்றும் ஆதரவைப் பெறுவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர்.

Hatch இன் AccelerateHER திட்ட முகாமையாளர் ருவனர திலகரத்ன இது தொடர்பில் தெரிவிக்கையில், “கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு, ஆழமான கற்றல், விலைமதிக்க முடியாத வழிகாட்டல், தொடர்புகளை ஏற்படுத்துதல் மற்றும் புத்திசாலித்தனமான வணிக அளவீடு ஆகிய விடயங்கள் காரணமாக, கடந்த சில மாதங்கள் எமக்கும் தொழில்முனைவோருக்கும் ஒரு பரபரப்பான காலமாக இருந்தது. தற்போது இந்த தொழில்முனைவோரின் வளர்ச்சி மற்றும் மாற்றத்தை காண்பதானது, உண்மையிலேயே உத்வேகம் அளிக்கின்றது. அத்துடன், இந்த திட்டத்தை முழு மனதுடன் ஆதரித்தமைக்காக எமது கூட்டாளர்கள் மற்றும் நலன்விரும்பிகளுக்கு, குறிப்பாக இந்த வெற்றிக்காக அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.” என்றார்.

இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த ஏழு பெண் தொழில்முனைவோர்கள் மத்தியில் பேசிய, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், “புத்தாக்கமான புதிய வணிக தொடக்கங்கள், பொருளாதாரத்தை வலுவூட்டவுள்ளதோடு, நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள், சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்த அது உதவும். அத்துடன் நீங்கள், இலங்கையின் அடுத்த தலைமுறை பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும், நிஜ வாழ்க்கையிலான பெண் தலைமைத்துவத்திற்கு உதாரணங்களாக விளங்குகிறீர்கள். உங்கள் முயற்சிகளை ஆதரிப்பதற்கும், தொழில்முனைவை மேம்படுத்துவதற்கும், வணிகத்தில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது. ஒன்றிணைந்து, நாம் தொடர்ச்சியாக புத்தாக்கங்களை ஏற்படுத்தி, வாய்ப்புகளை உருவாக்கி, இலங்கையின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம். அது அனைவரும் செழிப்படையவும், எமது பகிரப்பட்ட உலகளாவிய முன்னேற்றத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் உதவும்.” என்றார்.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களின் வணிகங்களில் ஒன்றான ‘Lak Nature’ ஆனது, செயற்கை காரணிகள் அற்ற, இலங்கையில் அதிகளவில் கிடைக்கும் பல்வேறு வகையான, பழங்கள் மற்றும் மரக்கறிகளைப் பயன்படுத்தி, இயற்கையான, உடன் பரிமாறக் கூடிய உணவுகளை தயாரிக்கும் வணிகமாகும்.

இந்நிகழ்வில், Lak Nature நிறுவனத்தின் ஸ்தாபகரான லக்மினி வீரக்கொடி கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் புதிய விளைச்சல் பொருட்கள் அதிகளவில் வீணடிக்கப்படுவது தொடர்பில் பத்திரிகைகளில் வெளியான செய்தியைத் தொடர்ந்து எனது பயணம் ஆரம்பமானது. இது அதற்காக நடவடிக்கை எடுக்கவும், இந்தக் கழிவுகளை குறைக்கவும் ஒரு வழியைக் கண்டறிய என்னைத் தூண்டியது. எனது தொழிற்சாலை ஊழியர்கள் முழுக்க முழுக்க பெண்களைக் கொண்டவர்கள் என்பதைக் குறிப்பிடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். ஏனெனில் பணியிடத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் நான் உறுதியாக உள்ளேன்.” என்றார்.

Demo Day நிகழ்வில் வெளிப்பட்ட மற்றொரு நிறுவனம் ‘Star Mushrooms’, இது காளான் சார்ந்த மெருகூட்டப்பட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.

Star Mushrooms நிறுவனத்தின் பங்குதாரரான நிமேஷா பெரேரா தெரிவிக்கையில், “இலங்கைச் சந்தையில் இறைச்சிக்கு மாற்றாக சைவ உணவு வகைகள் இல்லாததால், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நட்சத்திர காளான்களை வளர்ப்பதற்கு எனது தாயார் என்னை ஊக்கமளித்தார். சமீபத்தில், நான் இதில் ஒரு பங்காளியாக சேர்ந்தேன். எமது வணிகத்தை விரிவுபடுத்துவதையும், இலங்கையின் உணவு உற்பத்திகளில் போசாக்கு கொண்ட சைவ மாற்றீடுகள் தொடர்பில் காணப்படும் வெற்றிடத்தை நீக்குவதையும் நோக்கமாகக் கொண்டு செயற்பட்டேன்.” என்றார்.

வட மாகாணத்தைச் சேர்ந்த சமூக நிறுவனமான ‘Agro Feed’, மீன் கழிவுகளை கோழித் தீவனமாக மாற்றுவதில் நிபுணத்துவம் பெற்ற மற்றொரு வெற்றிகரமான தொடக்க வணிகமாகும். இது வளங்களை உரிய முறையில் பயன்படுத்துவதற்கான புத்தாக்கமான அணுகுமுறையைக் காண்பிக்கிறது.

Agro Feed நிறுவுனர் அருப்பிரியா தெரிவிக்கையில், “மீன் கழிவுகள் முறையற்ற முறையில் அகற்றப்படுவது, குறிப்பிடத்தக்க வகையில் மாசு மற்றும் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க, மீன் கழிவுகளை பெறுமதியான கோழித் தீவனமாக மாற்ற முயற்சி எடுத்தேன். இந்த வணிகத்தை நிர்வகிக்க எனது பெற்றோரின் ஆதரவு எனக்கு கிடைத்தது. நான் ஒரு மாணவி என்பதால், எனது கல்விக் கடமைகளுக்கும் வணிகத்தை நடத்துவதற்கும் இடையில் சமநிலையைப் பேணுவது ஒரு சவாலாக இருந்தது.” என்றார்.

Demo Day நிகழ்வில் இடம்பெற்ற மற்றொரு புத்தாக்கமான வணிகம் ‘INGROW’ ஆகும். இது Gluten அற்ற மற்றும் இயற்கை உணவுத் தீர்வுகளை வழங்கும் ஆரோக்கியமான உணவு உற்பத்தி வணிகமாகும்.

Ingrow இன் இணை நிறுவனரான, அச்சிந்தயா நெலிகம தெரிவிக்கையில், “இந்த நிறுவனத்தைத் ஆரம்பிப்பதற்குப் பின்னால் உள்ள காரணம், எனது தனிப்பட்ட போராட்டமான Gluten விரும்பாத தன்மை மற்றும் இலங்கையில் அதற்கு பொருத்தமான தெரிவுகள் குறைவாக இருப்பதாகும். இதன் காரணமாக, நான் Gluten இல்லாத தயாரிப்புகளை உருவாக்க ஆரம்பித்தேன். காலப்போக்கில், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்தோம். இந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் போது, மிகச்சிறந்த, இயற்கை பொருட்களை பயன்படுத்துவதில் எமது கவனம் எப்போதும் உள்ளது.” என்றார்.

மேற்கூறிய வணிகங்களைத் தவிர, Demo Day நிகழ்வில், இயற்கையான சருமப் பராமரிப்பு மற்றும் தனிநபர் பராமரிப்புப் பொருட்களை உருவாக்கும் கைவினைப்பொருள் வர்த்தகநாமமான ‘Nue Body Basics’, கலைத் தன்மை கொண்ட, ராஜஸ்தானில் இருந்து தருவிக்கப்பட்ட 100% பருத்தி துணியிலான, கைவினை கொண்ட இரு பாலாருக்கும் பொருந்தும் குழந்தைகளுக்கான புத்தாக்கமான மற்றும் ஊக்கமளிக்கும் வர்த்தகநாமமான Barbet Apparel நிறுவனமும் இடம்பெற்றிருந்தது. அத்துடன் The Makers Global, குழந்தைகளுக்கான வேடிக்கையான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய செயற்பாடுகளை கொண்ட தொழில்நுட்ப கற்றல் பொருட்கள் உற்பத்தி நிறுவனமாகும்

கடந்த நவம்பர் 2021 இல், அமெரிக்க வெளியுறவுத் துறையுடன் இணைந்து ‘AccelerateHER’ திட்டத்தை Hatch அறிமுகப்படுத்தியது. இந்த திட்டமானது, இலங்கையின் பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு, ஊக்குவிக்கும், பெண்களை மையமாகக் கொண்ட ஒரு விழிப்புணர்வு பிரசாரமாக செயற்படுகிறது. Hatch ஆனது AccelerateHer மற்றும் பெண் தொழில்முயற்சிகளை மையமாகக் கொண்ட மேலும் பல திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT