இந்தோனேசிய பூகம்பத்தால் 200 மலையேறிகள் நிர்க்கதி | தினகரன்


இந்தோனேசிய பூகம்பத்தால் 200 மலையேறிகள் நிர்க்கதி

இந்தோனேசியாவின் சுற்றுலா தீவின் மலை ஒன்றில் சிக்கி இருக்கும் 200க்கும் அதிகமான மலையேறிகளை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற பூகம்பத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் இந்த மலையில் இருந்து வெளியேறும் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

பிரபல மலையேறு தளமான ரின்ஜானி மலையில் இருந்து இவர்களை வெளியேற்றுவதற்கு நூற்றுக்கணக்கான மீட்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த மலைக்கு அருகிலேயே 6.4 அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் 16 பேர் உயிரிழந்ததோடு 160க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் நிர்க்கதியாகிய மலையேறிகள் ஹெலிகொப்டர்கள் மற்றும் கால்நடையாக தேடப்பட்டு வருகின்றனர். இந்த மலையில் இரண்டு பாதைகளும் பூகம்பத்தால் முற்றிலும் சேதமடைந்துள்ளது. ஏற்கனவே 500க்கும் அதிகமான மலையேறிகள் பாதுகாப்பாக மலையில் இருந்து இறங்கி வந்திருக்கும் நிலையில் இன்னும் 200க்கும் அதிகமானவர்கள் அங்கு இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டினர் ஆவர்.


Add new comment

Or log in with...