குவைத் தம்பதிக்கு நாட்டை விட்டு வெளியேற தடை | தினகரன்

குவைத் தம்பதிக்கு நாட்டை விட்டு வெளியேற தடை

குவைத் தம்பதிக்கு பிணை நாட்டை விட்டு வெளியேற தடை-Kuwait Couple Ban to Leaving from Country

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் 5 பேரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட குவைத்திலிருந்து வந்த தம்பதியினருக்கு நாட்டிலிருந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (30) நீர்கொழும்பு நீதவான் சஜிந்திர ஜயசூரிய முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விசாரணைகள் முடியும் வரை குறித்த இருவரையும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிப்பதாக உத்தரவிட்ட நீதவான், குறித்த உத்தரவின் பிரதியை குடிவரவு - குடியகல்வு திணைக்களத்திற்கும் அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை (27) காலை குவைத்திலிருந்து வந்த 32, 24 வயதான தம்பதியினர், தம்முடன் தமது செல்லப்பிராணியான நாயையும் அழைத்து வந்துள்ளனர்.

செல்லப் பிராணிகள் கடவுச்சீட்டு மற்றும் இறக்குமதி தொடர்பான இலங்கை சட்டத்தின் கீழ், அது நோய் எதனையும் கொண்டுள்ளதா என அவதானிப்பதற்காக, குறித்த பிராணியை 3 நாட்களுக்கு தடுத்து வைத்து அவதானிக்க மேற்கொண்ட முயற்சிக்கு மறுப்புத் தெரிவித்த குறித்த தம்பதியினர், வருகை தரும் பகுதியிலிருந்து பலாத்காரமாக வெளியேற முயற்சி செய்துள்ளனர்.

இதன்போது, அங்கிருந்து சுங்க அதிகாரிகள் ஐவரை அவர்கள் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த ஐவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் ரூபா ஒரு இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டதோடு, குறித்த வழக்கு விசாரணையை இன்று (30) வரை ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...