சுங்க அதிகாரிகளை தாக்கிய குவைத் தம்பதிக்கு பிணை | தினகரன்

சுங்க அதிகாரிகளை தாக்கிய குவைத் தம்பதிக்கு பிணை

சுங்க அதிகாரிகளை தாக்கிய குவைத் தம்பதிக்கு பிணை-Kuwait Couple Arrived with Dog-Attacked Cutom Official-Released on Bail

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் ஐவரை தாக்கியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குவைத்திலிருந்து வந்த தம்பதியினருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பொலிசாரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரும், இன்று (28) நீர்கொழும்பு நீதவான் நெல்சன் பீ. குமாரநாயக்க முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நீதவான் அவர்களை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

ரூபா ஒரு இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளின் அடிப்படையில் அவர்கள் இருவரையும் விடுவித்த நீதவான், குறித்த வழக்கு விசாரணையை நாளை மறுதினம் (30) வரை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

நேற்று (27) காலை குவைத்திலிருந்து வந்த 32, 24 வயதான தம்பதியினர், தம்முடன் தமது செல்லப்பிராணியான நாயையும் அழைத்து வந்துள்ளனர்.

செல்லப் பிராணிகள் கடவுச்சீட்டு மற்றும் இறக்குமதி தொடர்பான இலங்கை சட்டத்தின் கீழ், அது நோய் எதனையும் கொண்டுள்ளதா என அவதானிப்பதற்காக, குறித்த பிராணியை 3 நாட்களுக்கு தடுத்து வைத்து அவதானிக்க மேற்கொண்ட முயற்சிக்கு மறுப்புத் தெரிவித்த குறித்த தம்பதியினர், வருகை தரும் பகுதியிலிருந்து பலாத்காரமாக வெளியேற முயற்சி செய்துள்ளனர்.

இதன்போது, அங்கிருந்து சுங்க அதிகாரிகள் ஐவரை அவர்கள் தாக்கியதாக, சுங்க திணைக்கள பேச்சாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்தார்.

இதனையடுத்து, குறித்த ஐவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிசாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நாய், தற்போது விலங்குகள் தடுப்பு பிரிவின் பராமரிப்பில் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...