சிறுத்தையின் தாக்குதலில் மட்டக்குதிரை பலி | தினகரன்

சிறுத்தையின் தாக்குதலில் மட்டக்குதிரை பலி

சிறுத்தையின் தாக்குதலில் மட்டக்குதிரை பலி-Pony Killed by Leopard

 

நுவரெலியா, கல்வேஸ் பறைவைகள் சரணாலய பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசப் பகுதியை அண்மித்து இரை தேடி சென்ற மட்டக்குதிரையொன்றை (Pony) சிறுத்தை கடித்து கொன்றுள்ளது.

இன்று (30) திங்கட்கிழமை நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா, கல்வேஸ் பறைவைகள் சரணாலய பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசப் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.  

மேலும் இவ்விடத்துக்கு அருகாமையில் பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி ஆரம்ப பிரிவும் காணப்படுகின்றது. இக்கல்லூரிக்கு பின்புறத்தில் இக்காடு அமைந்துள்ளமையால் பாடசாலை வளாகத்தினுள் சிறுத்தைகளின் நடமாட்டம் உட்புக வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பும் இவ்வாறான மட்டக்குதிரையொன்று சிறுத்தைக்கு பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்வேஸ் கிராமம் மற்றும் நேஸ்பி தோட்ட மாணவர்கள் நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரிக்கு இந்த வனபிரதேசத்திற்கு அருகாமையில் செல்லும் பாதையில்  தினம்தோறும் செல்லுகின்றார்கள். எனவே பாடசாலை மாணவர்களின் நலன் கருதியும் பொது மக்களின் நலன் கருதியும் வன ஜீவராசி திணைக்களத்தின் அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(நுவரெலியா தினகரன் நிருபர் - எஸ். தியாகு)

 

Add new comment

Or log in with...