வாய் பேச முடியா மகனைக் காணவில்லை; 10 நாள் தேடல் | தினகரன்


வாய் பேச முடியா மகனைக் காணவில்லை; 10 நாள் தேடல்

வாய் பேச முடியா மகனைக் காணவில்லை; 10 நாள் தேடல்-கதிர்காமம் யாத்திரை-Kataragama Pilgrimage-Dumb Son Missing

 

  • ஒருதாயின் உருக்கமான வேண்டுகோள்!
  • கண்டால் 077 5566052 தெரிவியுங்கள்

உகந்தையிலிருந்து நானும் எனது இரு வாய் பேசாத மகன்களும் முதற் தடவையாக கதிர்காமம் செல்வதற்காக 17 ஆம் திகதி காலை காட்டுக்குள் இறங்கினோம். மறுநாள் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் சென்று கொண்டிருக்கையில் எனது கடைசி மகனைக் காணவில்லை. 10 நாட்கள் ஆன நிலையில், இன்று வரை காட்டுக்குள்ளும் கதிர்காமத்திலும் தேடிக்கொண்டிருக்கின்றோம். இன்னும் கிடைக்கவில்லை. யாராவது கண்டால் அறிவிக்கவும்.

வாய் பேச முடியா மகனைக் காணவில்லை; 10 நாள் தேடல்-கதிர்காமம் யாத்திரை-Kataragama Pilgrimage-Dumb Son Missing

இவ்வாறு கதிர்காம காட்டுப்பாதையில் தனது மகனைப்பறிகொடுத்த தாய் திருமதி கணபதிப்பிள்ளை யோகநாயகி (66) பதறுகின்றார்.

இவர் மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தின் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலுள்ள முனைக்காடு எனும் கிராமத்தைச் சேர்ந்தவராவார்.

இச்சம்பவம் கடந்த 18 ஆம் திகதி நடுக்காட்டுக்குள் இடம்பெற்றுள்ளதோடு, கடந்த 10 நாட்களாக தேடியும் அவர் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 16 ஆம் திகதி வீட்டிலிருந்து தாய் திருமதி க. யோகநாயகியுடன் இரு மகன்களான நல்லையா குணாநிதி (36) நல்லையா குகதாஸ் (28) கதிர்காமம் செல்வதற்காக உகந்தைக்குச் சென்றார்கள்.

மகன்மார் இருவரும் வாய் பேச முடியாதவர்கள். ஜூலை 18 ஆம் திகதி குமுக்கனிலிருந்து நாவலடி செல்லும் வழியில் கடைசி மகனான குகன் என அழைக்கப்படும் நல்லையா குகதாஸ் (28) காணாமல் போயுள்ளார். பொலிஸ் தொடக்கம் வனஜீவராசிகள் இராணுவத் துணையுடன் தேடியும் கிடைக்கவில்லை.

வாய் பேச முடியா மகனைக் காணவில்லை; 10 நாள் தேடல்-கதிர்காமம் யாத்திரை-Kataragama Pilgrimage-Dumb Son Missing

குறித்த தாய் இது குறித்து தெரிவிக்கையில்;:

எனக்கு 02 பெண்களும் 03 ஆண்களும் என 05 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் கடைசி மகன் தான் குகதாஸ். கணவர் ஏலவே மரணித்துவிட்டார்.

கதிர்காம யாத்திரையின் இரண்டாம் நாள் காட்டுப்பாதையில் ஆயிரக் கணக்கானோர் பயணித்துக் கொண்டிருந்தோம். நடக்கும்போது முன்பின்னாக நடப்பது வழமை. ஆனால் அன்று இரவு தங்குவதற்காக வெட்டைக்குச் சென்றபோது மகனைக் காணவில்லை. தேடினோம் . பலரிடமும் விசாரித்தோம். பலனில்லை. அங்கு தண்ணீர்த் தாங்கி நிரப்ப வந்தர்களிடம் விசாரித்தபோது அவர் நாவலடியில் நிற்பதாகச் சொன்னார்கள்.

ஒரு வகையில் மகிழ்ச்சியடைந்த நிலையில், மறுநாள் காலை நாவலடிக்குச்சென்றோம். அற்கு அவரைக் காணவில்லை. விசாரித்தபோது எவருக்கும் தெரியவில்லை. பின்னால் நடந்துவரக்கூடும் அல்லது முன்னால் போயிருக்கக்கூடும் என்ற எண்ணத்தில் நாம் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு முருகனை நினைத்தபடி கதிர்காமத்தை நோக்கி நடந்தோம். ஜூலை 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கதிர்காமத்தை அடைந்தோம். அங்கும் தேடினோம். கிடைக்கவில்லை.

அங்கு பொலிசார், வன ஜீவராசிகள் திணைக்களம், இராணுவம் என்று பலரிடமும் முறையிட்டுள்ளோம். இதுவரை எதுவித தகவலுமில்லை.

இறுதியாக வெண்ணிற காற்சட்டையும் சேட்டும் அணிந்திருந்தார். எனது மகன் வாய் பேசாதவர். எனவேதான் நாம் கூடுதலாக பயப்படுகின்றோம். அவருக்கு என்ன நடந்தது? என்று தெரியாமல் பதறுகின்றோம். என்று கூறி அழுதார்.

அவரது மற்றொரு மகனான நல்லையா குமாரதாஸ் (40) கூறுகையில்:

நாம் சம்பவத்தைக் கேள்வியுற்றதும் ஞாயிறு தொடக்கம் புதன்கிழமை வரை கதிர்காமத்திலே தங்கியிருந்து அவரது புகைப்படத்துடன் கூடிய துண்டுப்பிரசுரத்தை தமிழ், சிங்கள மொழிமூலம் அச்சிட்டு விநியோகித்தோம்.

செவ்வாயன்று வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், இராணுவம் சகிதம் வாடகைக்கு ஒரு ஜீப் வண்டியை அமர்த்திக் கொண்டு கதிர்காமத்திலிருந்து மீண்டும் காட்டுப் பாதையுடாக அவர் தவறிவிடப்பட்ட இடம் வரை சென்று தேடினோம். நாவலடியில் 90 இராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர். அவர்களிடமும் விசாரித்தோம். ஆயினும் எந்த தகவலுமில்லை.

அவர் காணாமல் போனதாக தெரிவிக்கும் இடம் கதிர்காமம் பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நிலையில் அவர்கள் எமது முறைப்பாட்டை ஏற்கவில்லை. கொக்கட்டிச்சோலைப் பொலிசாரிடமம் முறையிட்டுள்ளோம்.

தயவு செய்து யாராவது இப்படத்தில் காணப்படும் எனது தம்பியைக் கண்டால் 077 5566052 எனும் செல்லிடத் தொலைபேசிக்கு அறிவிக்குமாறு அவரு சகோதரன் வேண்டுகோள் விடுக்கின்றார்.

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை கடந்த 22 ஆம் திகதி உகந்தையில் மூடப்பட்டது தெரிந்ததே. அதாவது இறுதிநாள் 22ஆம் திகதி காட்டுக்குள் இறங்கிய இறுதி பாதயாத்திரிகர்கள் இன்று (26) கதிர்காமத்தை வந்தடைந்தனர். அந்த வகையில் இனி எந்தவொரு அடியாரும் காட்டு வழியாக பயணித்து வர வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(காரைதீவு குறூப் நிருபர் சகா)
 


Add new comment

Or log in with...