Saturday, April 20, 2024
Home » நாட்டை மீளக்கட்டியெழுப்பும் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம்!

நாட்டை மீளக்கட்டியெழுப்பும் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம்!

by mahesh
November 22, 2023 6:00 am 0 comment

வரவு செலவுத் திட்டம்_2024 இன் இரண்டாம் வாசிப்பு நேற்று பாராளுமன்றத்தில் நேற்று 45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற போது, அதிகப்படியான வாக்குகளால் அது நிறைவேறியது. நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முடிவு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற செயல்திட்டங்களுக்கு பாராளுமன்றம் வழங்கியுள்ள அங்கீகாரமாகவே இந்த வாக்ெகடுப்பு வெற்றியைக் கொள்ள வேண்டியுள்ளது.

இலங்கையின் முன்னொருபோதுமில்லாதவாறு கடந்த வருடத்தில் பொருளாதார நெருக்கடி நிலவியிருந்தது. எமது நாடு அதல பாதாளத்தில் மூழ்கியிருந்தது. வெளிநாட்டுக் கடன்கள், உள்நாட்டுப் பொருளாதாரப் பாதிப்பு, எரிபொருள் தட்டுப்பாடு என்றெல்லாம் ஒரேகாலப்பகுதியில் நெருக்கடிகள் சூழ்ந்து கொண்டதனால் இலங்கை அதலபாதாளத்தில் வீழ்ந்திருந்தது.

மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத நிலையில் அன்றைய ஜனாதிபதி உட்பட ஒட்டுமொத்த அரசாங்கமுமே பதவி விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. அன்றைய வேளையில் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் தலைமையைப் பொறுப்பேற்பதற்கு அரசியல் தலைவர்கள் எவருமே முன்வரவில்லை.

பொருளாதாரத்தில் பெருவீழ்ச்சியுற்றுக் கிடக்கின்ற நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா என்ற அவர்கள் அவநம்பிக்ைக கொண்டிருந்தனர். அதேசமயம் வீழ்ச்சியுற்ற நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்கின்ற தகுதி தங்களுக்கு உண்டா என்ற சந்தேகத்தையும் அவர்கள் கொண்டிருந்தனர்.

இவ்வாறு அரசியல் தலைவர்கள் தயங்கிய வேளையில் துணிச்சலுடன் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் பொறுப்பை அவர் சவாலுடன் ஏற்றுக் கொண்டார். அவரது அத்தீர்மானமானது துணிச்சலும் அர்ப்பணிப்பும் மிகுந்ததாகும்.

அவர் எத்தகைய துணிச்சலுடனும் நம்பிக்ைகயுடனும் நாட்டின் தலைமையைப் பொறுப்பேற்றாரோ அப்பொறுப்பை சரிவர நிறைவேற்றியிருக்கின்றாரென்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு படிப்படியாக மீண்டெழுந்து வருகின்றது. கியூவரிசை யுகம் முற்றாகவே தீர்ந்து போயுள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கான உத்தரவாதத்தை அளித்துள்ளது.

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவது உறுதியென்பதை சர்வதேசமே ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கை கடந்த வருடத்தில் இருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில் இதனை மாபெரும் வெற்றியென்றே கொள்ள வேண்டும். இந்த வெற்றிக்குக் காரணமானவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார்.

ஜனாதிபதியின் ஆளுமை, அரசியல் அனுபவம், தகைமை ஆகியவற்றின் காரணமாகவே இந்த வெற்றியை எமது நாடு ஈட்டியுள்ளது. அதேபோன்று 2024 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி முன்வைத்துள்ள வரவுசெலவுத் திட்டமும் பொருளாதார நிபுணர்களால் பாராட்டப்பட்டுள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி முழுமையாக சீரடையாத போதிலும் அரசாங்க ஊழியர்கள், ஓய்வூதியக்காரர், வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்ற மக்கள் போன்றோரையெல்லாம் இந்த வரவுசெலவுத் திட்டம் நன்றாகவே பொருட்படுத்தியிருக்கின்றது. அதுமாத்திரமன்றி தனியார்துறை, கல்வி, வர்த்தகம் போன்ற துறைகளுக்கும் ஜனாதிபதி கூடுதல் முக்கியத்துவம் அளித்திருப்பதைக் காண முடிகின்றது.

பொருளாதார நெருக்கடியை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் வாழ்க்கைச் செலவு குறித்து ஜனாதிபதி காண்பித்திருக்கின்ற விசேட அக்கறை குறித்து பாராட்டாமலிருக்க முடியாது.

அதேவேளை அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு இங்கே குறிப்பிடக் கூடியதாகும். அரச இயந்திரத்தை திறம்பட இயக்குவதற்கும், அரச ஊழியர்களின் வாழ்க்ைகச் சுமையைக் குறைப்பதற்கும் வழிவகுக்கும் வகையில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு இந்த வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சமர்ப்பித்த அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக அதிகப்படியான வாக்குகள் கிடைத்துள்ளன. அதன்படி வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது. வரவு செலவுத் திட்டத்தில் சிறப்பானதும் சாதகமானதுமான அம்சங்கள் அதிகம் காணப்படுவதனாலேயே அதிகபட்ச ஆதரவு பட்ஜட்டுக்குக் கிடைத்துள்ளது எனலாம்.

பொருளாதார நெருக்கடி விரைவில் முடிவுக்கு வந்து விடுமென்பதற்கான அறிகுறிகளில் ஒன்றாகவே பாராளுமன்றத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றியைக் கருத ​வேண்டியுள்ளது. நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் அரசியல் மற்றும் இனமத பேதங்களுக்கு இடமளிக்கலாகாது. பொருளாதார மீட்புக்கான காலம் இதுவென்பதால் நாட்டை மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு அரசியல் பேதங்களின்றி அனைவரும் ஆதரவளிப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT