சிரியாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பினர் இஸ்ரேலால் மீட்பு | தினகரன்

சிரியாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பினர் இஸ்ரேலால் மீட்பு

 

தென்மேற்கு சிரியாவின் யுத்த வலயத்தில் இருந்து அந்நாட்டு சிவில் பாதுகாப்பு குழுவான வைட் ஹெல்மட் அமைப்பின் உறுப்பினர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்ததாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கைக்கு அமைய தாம் இவ்வாறு செயற்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் குன்று வழியாக கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 800 பேர் ஜேர்தானுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிரியாவின் யுத்த வலய பகுதிகளில் தன்னார்வ மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாக வைட் ஹெல்மட் குழுவினர் செயற்பட்டு வருகின்றனர். தாம் எந்த தரப்பையும் சாராதவர்கள் என்று இவர்கள் குறிப்பிட்டபோதும், இவர்களது மீட்புப் பணிகள் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதிகளிலேயே இடம்பெற்று வருகிறது.

எனினும் இந்த வைட் ஹெல்மட் குழுவினர் கிளர்ச்சியாளர்கள் என்றும் இஸ்லாமியவாத ஜிஹாதிக்களுடன் தொடர்புட்டவர்கள் என்றும் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசு மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான ரஷ்யா குற்றம்சாட்டுகிறது.

தென் மேற்கு சிரியாவின் அரச எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டு புகுதியில் பணியாற்றிய இந்த வைட் ஹெல்மட் உறுப்பினர்கள் அரச படையின் தாக்குதல்களால் இடையில் சிக்கிக் கொண்ட நிலையிலேயே இவர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

சிரிய சிவில் அமைப்பு மற்றும் அவர்களின் குடும்பத்தினரை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கை பூர்த்தி அடைந்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் இஸ்ரேல் ஊடே அண்டை நாடான ஜோர்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டது.

இஸ்ரேல் மற்றும் சிரியாவுக்கு இடையில் பல தசாப்தங்களாக போர் சூழல் நீடித்துவரும் நிலையில் சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டு யுத்தத்தில் இஸ்ரேல் நேரடியாக தலையிடுவதில்லை.


Add new comment

Or log in with...