தென்னாபிரிக்காவுக்கு எதிராக தொடர் வெற்றியை நெருங்கும் இலங்கை அணி | தினகரன்

தென்னாபிரிக்காவுக்கு எதிராக தொடர் வெற்றியை நெருங்கும் இலங்கை அணி

 

தென்னாபிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 490 என்ற எட்டக் கடினமான சவாலான வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

கொழும்பு, எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி ஆட்ட நேர முடிவின்போது 5 விக்கெட்டுகளை இழந்து 139 ஒட்டங்களை பெற்றுள்ளது.

இதன்படி போட்டியின் மேலும் இரண்டு நட்கள் முழுமையாக எஞ்சி இருக்கும் நிலையில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெறுவதற்கு 5 விக்கெட்டுகள் கைவசம் இருக்க மேலும் 351 ஓட்டங்களை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் ஒன்றை வெல்ல இலங்கை அணிக்கு இன்னும் 5 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டி உள்ளது. இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரில் 1 – 0 என முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வரிசைக்கு இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் மீண்டும் ஒருமுறை நெருக்கடி கொடுத்தனர். ஆரம்ப வீரர் எய்டன் மர்க்ராமை 14 ஓட்டங்களுடன் வெளியேற்றிய ரங்கன ஹேரம் அனுபவ வீரர் ஹாஷிம் அம்லாவை 6 ஓட்டங்களுடன் போல்ட் செய்தார்.

மறுமுனையில் ஆடிய ஆரம்ப வீரர் டீன் எல்கரை 37 ஓட்டங்களுடன் தில்ருவன் பெரேரா ஆட்டமிழக்கச் செய்ததோடு அணித்தலைவர் பப் டூ பிளசிஸை வெறும் ஏழு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்ய அகில தனஞ்சயவினால் முடிந்தது.

முன்னதாக நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணிக்காக அஞ்சலோ மத்தியூஸும் (71) அரைச்சதம் ஒன்றை எட்டினார். இலங்கை அணி சார்பில் ஆரம்ப வீரர்களான தனுஷ்க குணதிலக்க (61) மற்றும் திமுத் கருணாரத்ன (85) ஆகியோரும் சிறப்பாக ஆடி அரைச்சதம் கடந்தனர்.

இதன்படி இலங்கை அணி 81 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஆட்டத்தை இடைநிறுத்தி, தென்னாபிரிக்க அணிக்கு எட்டக் கடினமாக வெற்றி இலக்கொன்றை நிர்ணயித்தது.

இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 338 ஓட்டங்களை பெற்றதோடு தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 124 ஓட்டங்களுக்கே சுருண்டு பின்னடைவை சந்தித்தது.

இன்று போட்டியின் நான்காவது நாளாகும்.


Add new comment

Or log in with...