கேள்விக்குறியாகும் காலி கிரிக்கெட் மைதானத்தின் எதிர்காலம் | தினகரன்

கேள்விக்குறியாகும் காலி கிரிக்கெட் மைதானத்தின் எதிர்காலம்

கேள்விக்குறியாகும் காலி கிரிக்கெட் மைதானத்தின் எதிர்காலம்-The question for Galle Cricket Ground

 

இலங்கை கிரிக்கெட் அணியின் ராசியான மைதானமாகவும், இலங்கையின் டெஸ்ட் கோட்டையாகவும் இதுவரை காலமும் விளங்கிய காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை விரைவில் அகற்றுவதற்கு அரசியல் வட்டாரங்களில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

உலகின் முன்னணி டெஸ்ட் நாடுகளை மண்டியிட வைத்து இலங்கை வீரர்கள் சாதனைகள் பலவற்றை படைத்த இந்த மைதானத்தில் எதிர்காலத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியாமல் போகலாம் என காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பொறுப்பாளரும், மேல் மாகாண கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான அநுர வீரசிங்க தெரிவித்தார்.

உயர் கல்வி மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரணசிங்க தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி, காலி கிரிக்கெட் மைதானத்தில் உள்ள பிரதான பார்வையாளர் அரங்கு உள்ளிட்ட ஒரு சில கட்டடங்கள் அகற்றப்படலாம் எனவும், அங்கிருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள வக்வெல்ல அல்லது பின்னதுவ பகுதியில் புதிய விளையாட்டரங்கு அமைக்கப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

காலி கோட்டையின் பாதுகாப்புக்காக அதன் நிர்வாகக் கட்டடத்தையும், பார்வையாளர் அரங்ககையும் அகற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காலி கோட்டை அமைந்துள்ள பிரதேசம் வரலாற்று முக்கியம் வாய்ந்தது எனவும், அது உலக மரபுரிமை சொத்து எனவும் யுனெஸ்கோ பிரகடனப்படுத்தியுள்ளது. இதனையடுத்து 2007 முதல் காலி கிரிக்கெட் மைதானத்தை அங்கிருந்து அகற்றுவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதில் காலி கிரிக்கெட் மைதானத்தில் உள்ள பிரதான பார்வையாளர் அரங்கை அகற்றி யுனெஸ்கோவிற்கு அறிக்கையொன்றை சமர்பிக்கவும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. அவ்வாறு செய்யாவிடின் உலக மரபுரிமை பட்டியலில் இருந்து காலி கோட்டை நீக்கிவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, இந்த மைதானத்தை அகற்ற வேண்டும் என 2007ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் விசேட யோசனையொன்றையும் முன்வைத்தார். எனினும், 2008ஆம் ஆண்டு காலி மாநகர சபையின் தலைவர் எஸ். பண்டிதவின் அனுமதியுடன் பார்வையாளர் அரங்கு மற்றும் நிர்வாகக் கட்டிடம் உள்ளிட்டவைகளின் நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சு, உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை, காலி மாநகர சபை மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் என்பன இதுதொடர்பில் பல பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்த போதிலும், அவையனைத்தும் தோல்வியில் முடிவுக்கு வந்தன.

இதேநேரம், பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் அனுமதியின்றி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய கிரிக்கெட் மைதானமொன்றை வேறொரு இடத்தில் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெற்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டையை பாதுகாப்பது தொடர்பான முதலாவது கூட்டம் அலரி மாளிகையில் அண்மையில் நடைபெற்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தெற்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சாகல ரத்னாயக்க, அதன் இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே, விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, அமைச்சர் வஜிர அபேகுணவர்தன, காலி பாரம்பரியம், தொல்பொருள் திணைக்களம், காலி மாநகர ஆணையாளர், காலி மாவட்ட தலைவர், கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து, உயர் கல்வி மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரணசிங்க தலைமையில் மற்றுமொரு பேச்சுவார்த்தை கடந்த செவ்வாய்க்கிழமை (17) செத்சிறிபாயவில் இடம்பெற்றது.

இதன்போது அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன் காலி மைதானத்தில் உள்ள அனுமதியின்றி நிர்மானிக்கப்பட்ட அனைத்து கட்டிடங்களையும் அகற்றி அதை பொது மைதானமாக மக்களுக்கு திறந்து விடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அந்த கட்டிடங்களில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்வாகக் கட்டிடம் மற்றும் பிரதான பார்வையாளர் அரங்கும் உள்ளடங்கியுள்ளதாக காலி கிரிக்கெட் மைதானத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனினும், காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அங்கிருந்து அகற்றுவதற்கு இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை என தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, இதுதொடர்பில் அமைச்சரவையில் அறிக்கையொன்றை சமர்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பார்வையாளர் அரங்கை அகற்ற இடமளிக்க முடியாதென காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

காலிக்கு உரிய இந்த சொத்தை அளிப்பதற்கு பிரதமருக்கு எந்தளவு தேவை இருந்தாலும், காலி மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட எந்தவொரு மக்கள் பிரதிநிதிகளும் இந்த மைதானத்தை அகற்றி காலி மக்களின் பொருளாதாரத்தை சீர்குலைக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.

மாறாக இந்த மைதானத்தை முற்றாக அகற்றிவிடுவதற்கு முயற்சி செய்கின்ற அனைவருக்கும் எதிராக காலி மக்கள் போர்க்கொடி ஏந்த வேண்டும் என அவர் தெரிவித்தார். இதேநேரம், காலி மாநகர சபையின் தலைவர் பிரியன்த சஹபன்து கருத்து வெளியிடுகையில், காலி மாநகர சபை இந்த மைதானத்தை அகற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அவ்வாறான திட்டங்களுக்கு நாம் அனுமதி வழங்கவும் இல்லை.

இந்த மைதானம் காலி மாநகர சபைக்குச் சொந்தமானது. 10 வருடங்களுக்கு ஒருமுறை கிரிக்கெட் நிறுவனத்துடன் நாம் ஒப்பந்தமும் செய்து கொண்டுள்ளோம்.

அப்போதைய காலத்தில் இருந்து அந்த மைதானத்தில் பார்வையாளர் அரங்கும், நகர சபைக்குச் சொந்தமான விளையாட்டு மண்டபம் ஒன்றும் உள்ளது. இதற்கான அனுமதியை காலி மாநகர சபையின் தொழில்நுட்பக் குழு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

150 வருட கால வரலாற்றைக் கொண்ட காலி கிரிக்கெட் மைதானம் ஆங்கிலேய ஆட்சியின் போது குதிரைப் பந்தயத்திடல் மைதானமாக பயன்படுத்தப்பட்டது.

அதன்பிறகு 1927ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் போட்டிகளுக்கு மாத்திரம் அந்த மைதானம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

 


Add new comment

Or log in with...