Friday, March 29, 2024
Home » போர் நிறுத்த எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் தொடர்ந்து காசா மீது உக்கிர தாக்குதல்

போர் நிறுத்த எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் தொடர்ந்து காசா மீது உக்கிர தாக்குதல்

ஜபலியா அகதி முகாம் சுற்றிவளைப்பு

by mahesh
November 22, 2023 6:00 am 0 comment

இஸ்ரேலுடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை நெருங்கி இருப்பதாக ஹமாஸ் அமைப்பின் தலைவர் அறிவித்தபோதும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிப்பதோடு இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன.

போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு ஹமாஸ் அதிகாரிகள் நெருங்கி இருப்பதோடு அது தொடர்பில் கட்டார் மத்தியஸ்தர்களுக்கு பதிலளித்திருப்பதாக ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே தெரிவித்துள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஹனியேவின் உதவியாளர் அனுப்பியுள்ள அறிவிப்பில் போர் நிறுத்தம் தொடர்பான எந்த விரிவான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனினும் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு பேசிய ஹமாஸ் அதிகாரி ஒருவர், போர் நிறுத்தம் எத்தனை காலம் நீடிப்பது, காசாவுக்கு உதவிகளை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் இஸ்ரேலில் உள்ள பலஸ்தீன கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தெரிவித்தார்.

இதில் இரு தரப்பும் பெண்கள் மற்றும் சிறுவர்களை விடுவிக்கவிருப்பதோடு மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் ஈடுபடும் கட்டாரினால் இது தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஹமாஸ் அதிகாரி இஸ்ஸாத் எல் ரஷீக் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதோடு சுமார் 240 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

சர்வதேச செம்பிறை சங்கத் தலைவர் மிர்ஜானா ஸ்பொல்ஜரிக் கடந்த திங்கட்கிழமை (20) கட்டாரில் ஹனியோவை சந்தித்து, மோசமடைந்துள்ள மனிதாபிமான பிரச்சினைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாக ஜெனீவாவை தளமாகக் கொண்ட அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்போது அவர் கட்டார் நிர்வாகிகளையும் வேறாக சந்தித்துள்ளார்.

பணயக்கைதிகளை விடுவிக்கும் பேச்சுவார்த்தையில் தாம் பங்கேற்காதபோதும், ஒரு நடுநிலையாளர்கள் என்ற வகையில் அவ்வாறான விடுதலைக்கான ஏற்பாடுகளை செய்யத் தயாராக இருப்பதாக செம்பிறைச் சங்கம் கூறியது.

பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த பல நாட்களாக நீடித்து வருகிறது. முன்னதாக மூன்று நாள் போர் நிறுத்தத்திற்காக 50 பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான உடன்படிக்கை ஒன்றுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் கோரியதாக கடந்த வாரம் செய்தி வெளியாகி இருந்தது.

அமெரிக்காவுக்கான இஸ்ரேலிய தூதுவர் மைக்கல் ஹர்சொக், கட்டார் பிரதமர் ஷெய்க் முஹமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானி ஆகியோர் உடன்படிக்கை ஒன்று தொடர்பில் குறிப்பிட்டிருந்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளும் உடன்படிக்கை ஒன்றை நெருங்கி இருப்பதாக திங்கட்கிழமை (20) கூறியபோதும் அவ்வாறான உடன்படிக்கை பற்றி முழுமையான நம்பிக்கையை வெளியிடவில்லை.

“இதுபோன்ற உணர்வுமிக்க பேர்ச்சுவார்த்தைகள் கடைசி நேரத்தில் முறிந்துவிட முடியும்” என்று வெள்ளை மாளிகை பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பின்னர், என்.பி.சி தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். “அனைத்து உடன்பாடும் எட்டப்படும் வரை எந்த உடன்படிக்கையும் இல்லை” என்றார் அவர்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதல் இஸ்ரேலின் 75 ஆண்டு வரலாற்றில் அதிக உயிரிழப்புக் கொண்ட தினமாக மாறியதோடு, அது காசா மீது இஸ்ரேல் படையெடுக்கத் தூண்டியது.

அது தொடக்கம் இஸ்ரேல் காசா மீது வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக இடைவிடாது நடத்திவரும் தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 13,300 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 5,600 சிறுவர்கள் மற்றும் 3,550 பெண்கள் அடங்குகின்றனர்.

டெல் அவிவிவை நோக்கி சரிமாரியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஹமாஸ் அதன் டெலிகிராம் தளத்தில் தெரிவித்துள்ளது. மத்திய இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடரும் தாக்குதல்கள்

போர் நிறுத்தம் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்தபோதும், காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் எந்தத் தணிவும் ஏற்படவில்லை. மத்திய காசாவின் நுஸைரத் அகதி முகாமில் இடம்பெற்ற வான் தாக்குதல்களில் குறைந்தது 20 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதன்போது அங்குள்ள இரு வீடுகள் மீதே இஸ்ரேல் குண்டு வீசியதாக பலஸ்தீன உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேபோன்று வடக்கு காசாவில் ஜபலியா அகதி முகாமில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருந்த பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலரும் காயமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலும் சிறுவர்கள் மற்றும் பெண்களே காயமடைந்திருப்பதாக பலஸ்தீன தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அதேபோன்று கடந்த திங்கள் இரவு மற்றும் நேற்று அதிகாலையில் வடக்கு காசா பகுதியில் பயித் லஹியா நகரில் ஒன்பது வீடுகளை இலக்கு வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதேநேரம் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மீது இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சுகளால் காசா நகர் மற்றும் காசா பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமை முழுமையாக சுற்றிவளைத்ததாக இஸ்ரேல் இராணுவம் நேற்று அறிவித்தது. 162 ஆவது படைப்பிரிவு ஜபலியா பகுதியை சுற்றிவளைத்து தாக்குதலை தீவிரப்படுத்துவதற்கு தயாராகி இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

ஹமாஸ் அமைப்பின் கோட்டை என அழைக்கப்படும் காசா நகருக்கு அருகில் இருக்கும் ஜபலியா அகதி முகாமில் ஒரு இலட்சத்திற்கு அதிகமானோர் வசிப்பதாக நம்பப்படுகிறது. 1948இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோதும் வெளியேற்றப்பட்ட மக்கள் மற்றும் அவர்களின் சந்ததிகள் வசிக்கும் இந்த முகாம் தற்போது போரின் மையப் புள்ளியாக மாறியுள்ளது. இந்தப் பகுதி மீது கடந்த பல வாரங்களாக குண்டு வீசிவரும் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு இங்கு மீள ஒருங்கிணைந்து வருவதாக கூறுகிறது.

ஜபலியா புறநகர் பகுதியில் இருக்கும் இந்தோனேசிய மருத்துவமனையிலும் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த மருத்துவமனை மீது திங்கட்கிழமை நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த மருத்துவமனைக்குள் நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் என நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளனர்.

ஏற்கனவே வடக்கு காசாவின் அல் ஷிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் ஊடுருவி தாக்குதல்களை நடத்தி இருந்தது. இந்நிலையில் வடக்கு காசாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் செயலிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசாவில் தொடர்ந்து எஞ்சியுள்ளவர்கள் பற்றி உறுதியான புள்ளிவிபரங்கள் இல்லாதபோதும் அங்கு சுமார் 160,000 பேர் இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் அங்கு அடிப்படை சேவைகள் மற்றும் வசதிகள் முடக்கப்பட்டு இஸ்ரேலின் உக்கிரத் தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காசா மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கினரான சுமார் 1.7 மில்லியன் மக்கள் தற்போது தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் தெற்கு காசாவை நோக்கி வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் அங்குள்ள ஐ.நாவினால் நடத்தப்படும் பாடசாலைகள் மற்றும் ஏனைய வசதிகளில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

இந்தத் தற்காலிக முகாம்களும் நிரம்பி வழியும் நிலையில் மக்கள் வீதிகளில் உறங்கி வருகின்றனர். காசாவில் குளிர்கால மழைப் பருவம் ஆரம்பித்திருக்கும் சூழலில் இந்த மக்கள் மற்றுமொரு நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

காசா எங்கும் உணவு மற்றும் நீருக்கு பற்றாக்குறை நீடித்து வருவதோடு மின்சாரத்தை பெறுவதற்கான எரிபொருளுக்கு தட்டுப்பாடு உள்ளது. இந்தப் போர் வெடித்த ஆரம்பத்திலேயே இஸ்ரேல் காசாவுக்கான எரிபொருள் விநியோகத்தை துண்டித்ததால் அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் இன்றி இருள் சூழ்ந்துள்ளது.

வடக்கில் உக்கிர தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் பெரும்பாலானோர் தஞ்சமடைந்திருக்கும் தெற்கின் மீது தாக்குதல்களை அதிகரித்திருக்கும் நிலையில் அங்கும் தனது போர் நடவடிக்கையை விரிவுபடுத்தும் அச்சம் அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT