ஒருவேளை மதிய உணவுக்கு ரூ. 7 இலட்சம்: அதிர்ச்சியில் உறைந்த இந்திய கிரிக்கெட் வீரர் | தினகரன்

ஒருவேளை மதிய உணவுக்கு ரூ. 7 இலட்சம்: அதிர்ச்சியில் உறைந்த இந்திய கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவர் இந்தோனேசியா நாட்டுக்குச் சென்று ஒருவேளை மதிய உணவு சாப்பிட்டதற்காக 7 இலட்சம் கட்டணமாகச் செலுத்தியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. இவர் 10 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 450 ஓட்டங்கள் வரை சேர்த்துள்ளார்.

டி20 போட்டிகளிலும், ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியிலும் இடம்பெற்றிருந்தார். 150-க்கும் மேற்பட்ட முதல்தரப்போட்டிகளில் விளையாடி 10 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தோனேசியாவின் பாலி நகருக்குச் சமீபத்தில் சென்றார். அங்குள்ள குட்டா பகுதியில் இந்திய உணவுகள் தயாரிக்கும் ஹோட்டல் ஒன்றில் ஆகாஷ் சோப்ரா மதிய உணவு சாப்பிட்டுள்ளார். அதில் மதிய உணவாக பனீர் டீக்கா, பனீர் மசாலா, சாதம், சப்பாத்தி, வெஜிடபிள் கபாப் உள்ளிட்ட உணவுகளை ஆகாஷ் சோப்ரா சாப்பிட்டுள்ளார். ஆகாஷ் சோப்ரா சாப்பிட்டு முடித்ததும் சர்வர் பில் கொண்டுவந்தார்.

வழக்கமான தொகையாத்தான் பில் இருக்கும் என்று நினைத்த ஆகாஷ் சோப்ராவுக்கு வாழ்நாளில் மறக்கமுடியாத பில் தொகையாக அது அமைந்தது.

ஆகாஷ் சோப்ரா சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுக்கும், வரி உள்ளிட்டவை சேர்த்து மொத்தம் 6 இலட்சத்து 99 ஆயிரத்து 930 பில் கொடுக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த ஆகாஷ் சோப்ரா அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.

அதன்பின் அங்கிருந்த சர்வரிடமும், ஹோட்டல் ஊழியர்களிடமும் விசாரித்துள்ளார். அப்போது இந்தியாவின் ரூபாய் மதிப்பில் ஒரு ரூபாய்க்கு இந்தோனேசியா மதிப்பில் 210 ரூபியாக்கள் சமம் என்று கூறியுள்ளனர். அதன்படி கணக்கிட்டுப்பார்த்தால் இந்திய மதிப்பின்படி அந்த பில்தொகை ரூ.3 ஆயிரத்து 334 எனத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கட்டணத்தை செலுத்திவிட்டு ஆகாஷ் சோப்ரா திரும்பியுள்ளார். அந்த பில்லை புகைப்படமாக எடுத்து தனது ட்விட்ர் பக்கத்தில் ஆகாஷ் சோப்ரா பகிர்ந்துள்ளார்.

அதில் ஆகாஷ் சோப்ரா, ''இதுபோன்ற ஒரு மதிய உணவை நான் இதற்கு முன் சாப்பிட்டதில்லை, இந்தோனேசியா உங்களை வரவேற்கிறது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...