கருணைக்கும் கண்டிப்புக்கும் இடையிலான மனப் போராட்டம்! | தினகரன்

கருணைக்கும் கண்டிப்புக்கும் இடையிலான மனப் போராட்டம்!

போதைப் பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்ட குற்றவாளிகளில் சிலர் சிறைக்குள் இருந்தபடியே தொடர்ந்தும் அக்குற்றங்களுடன் தொடர்புபட்டு இருப்பது தெரியவந்துள்ளதனால், அவர்களுக்கு தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதற்கான கையொப்பத்தை இடப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமீபத்தில் தெரிவித்திருந்த கூற்று உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கையில் சமீப காலமாக போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மோசமாக அதிகரித்திருப்பது வெளிப்படையாகத் தெரிந்த உண்மையாகும். இந்நிலையில் போதைப் பொருள் தொடர்பிலான குற்றங்களை ஒழிப்பதற்கு மரணதண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதே சரியான வழியென்ற கருத்து சமூகத்தின் மத்தியில் மேலோங்கிக் காணப்படுகின்றது. சிறுவர் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்திருப்பதும் இதற்கொரு காரணமாகும். ஆனாலும் மரணதண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கையிலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் இதுவரை வெளிப்படையாக வலியுறுத்தியதைக் காண முடியவில்லை. மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கையானது மேலோட்டமாகவே தலைதூக்கியிருக்கிறது.

சிங்கள சமூகத்திலுள்ள பொதுநல அமைப்புகளும் கூட இவ்விடயத்தை வெளிப்படையாக வலியுறுத்தியிருப்பதாகத் தெரியவில்லை.

தமிழர் தரப்பிலுள்ள பிரதான அரசியல் கட்சிகளோ, அல்லது சமூகநல அமைப்புகளோ மரணதண்டனையை மீண்டும் அமுல்படுத்தியே தீர வேண்டுமென்பதை பிரதான வேண்டுகோளாக முன்வைத்ததையும் காண முடியாதிருக்கிறது.

தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் பின்பற்றப்பட்டு வருகின்ற பௌத்தம், இந்து, கிறிஸ்தவம் ஆகியன கொண்டுள்ள மதக் கோட்பாடுகளும் இதற்கொரு காரணமாகும்.

இந்து, பௌத்தம் ஆகிய இரண்டுமே 'கொல்லாமை' என்பதை பிரதானமாக வலியுறுத்துகின்ற மதங்களாக விளங்குகின்றன. பிராணிகளைக் கொல்வதையும் இம்மதங்கள் பாவச் செயலாகக் கருதுகின்றன. குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதை விட, அவர்கள் சீர்திருத்தப்பட வேண்டுமென்பது இவ்விரு மதங்களின் கோட்பாடாக இருக்கின்றது.

கிறிஸ்தவ சமயமும் குற்றமிழைத்தோருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென்றும் அவர்கள் திருந்தி வாழ்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென்றும் கொள்கையைக் கொண்டுள்ளது. எனவேதான் மரணதண்டனையை மீண்டும் நிறைவேற்றும் விடயத்தில் தமிழ், சிங்கள மக்கள் மத்தியிலுள்ள பிரதான அமைப்புகள் ஒருவித மௌனப் போக்கை கடைப்பிடிப்பதாகத் தெரிகின்றது.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள், போதைவஸ்து தொடர்பான குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மன்னிப்பே வழங்கப்படக் கூடாதென்றும், மரணதண்டனைத் தீர்ப்புக்கு உள்ளானோருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் ஒருசாரார் குரலெழுப்புகின்றனர்.

நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டதனால் மக்கள் மத்தியில் உருவான சீற்றத்தின் வெளிப்பாடாக இதனைக் கொள்ளலாம்.

இலங்கையில் 42 வருடங்களுக்குப் பின்னர் தூக்குத் தண்டனை மீண்டும் நிறைவேற்றப்படுமா?

இது விடை புரியாத வினாவாக இருக்கின்றது. தூக்குத் தண்டனை விடயத்தில் எதிரும்புதிருமான கருத்துகள் நிலவுகின்றன. அரசியல்வாதிகள் மட்டத்தில் கூட ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக் கொண்ட இருசாரார் உள்ளனர். கற்றோர் மட்டத்திலும் இவ்விதமாக இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.

‘உயிர்களைக் கொல்வது பாவம் நிறைந்த செயல், அதிலும் மனிதப் பிறவியென்பது உயர்வானதொரு படைப்பு. சூழ்நிலைக் காரணிகளே மனிதனைக் கொடியவனாக்குகின்றன. தவறுக்கான சூழ்நிலைக் காரணிகளைச் சீர்படுத்த எமது சமூகம் முற்படவில்லை. அவ்வாறிருக்கையில், குற்றவாளிகளை மரணதண்டனைக்கு உள்ளாக்குவது தவறு, அவர்கள் சிறைக்குள் வைத்து சீர்திருத்தப்பட வேண்டும்’ என்று வாதிடுகின்றனர் ஒரு சாரார்.

‘சிலவேளைகளில் குற்றமிழைக்காதோரும் தண்டனை பெறுவதுண்டு. இவ்வாறான நிலையில் மரணதண்டனையானது ஒரு அப்பாவியின் வாழ்வையே முடித்து விடும். எனவே மரணதண்டனை கொடியது’ என்கின்றனர் இவர்கள்.

ஆனால் மற்றொரு தரப்பினரோ எதிர்க் கருத்தைக் கொண்டவர்களாக உள்ளனர்.

‘போதைப் பொருள் வியாபாரிகள், சிறுவர் பாலியல் கொடுமைகளில் ஈடுபடுவோர் எமது சமூகத்தின் கொடிய விஷம் போன்றவர்கள். இவர்கள் எக்காலமும் நல்லவர்களாகத் திருந்தி வாழப் போவதில்லை. சமூகம் பாதுகாப்பாக வாழ வேண்டுமானால் இவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படுவதே சிறந்தது’ என்று வாதிடுகின்றனர் அவர்கள்,

அதேசமயம், இலங்கையிலுள்ள சில மத அமைப்புகள் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை எதிர்க்கின்றன. சர்வதேச ரீதியிலும் மரணதண்டனைக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டுள்ளது. இலங்கை தனது முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென்று சர்வதேச மன்னிப்பு சபையும் சில நாடுகளும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளன.

இலங்கை மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்ற முற்படுமானால் எமது நாடு பொருளாதாரத் தடையை எதிர்கொள்ள நேரிடுமென்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள நாடுகளில் ஏராளமானவை மரணதண்டனையை ஏற்கனவே சட்டத்திலிருந்து நீக்கிக் கொண்டுள்ளன. ஏனைய நாடுகள் ஒவ்வொன்றாக நீக்கியபடி வருகின்றன.

இவ்வாறிருக்கையில், இலங்கை மாத்திரம் மரணதண்டனை நடைமுறையைப் புதுப்பித்துக் கொள்வதற்கு முற்படுவதை சர்வதேசம் வெறுப்புடனேயே நோக்குமென்பது மட்டும் நிட்சயம்.

இவ்விடயத்தில் அரசாங்கம் இன்னுமே இறுதி முடிவுக்கு வந்தபாடாக இல்லை. அரசாங்கத்தின் உள்ளேயே மாறுபட்ட கருத்துகள் நிலவுவதால், இது பற்றிய இறுதி முடிவு எட்டப்படுவதற்கு நீண்ட காலம் செல்லுமென்பது தெளிவாகத் தெரிகின்றது.


Add new comment

Or log in with...