தமிழர்களின் அவலங்களை நிவர்த்திக்க அவுஸ்திரேலியா உதவிக் கரம் நீட்ட வேண்டும் | தினகரன்

தமிழர்களின் அவலங்களை நிவர்த்திக்க அவுஸ்திரேலியா உதவிக் கரம் நீட்ட வேண்டும்

யுத்தம் மற்றும் சுனாமி போன்ற அனர்த்தங்களினால் அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் அடைந்த துயரங்கள் மற்றும் பின்னடைவுகள் அதில் இருந்து மீண்டெழும் வகையில் வழங்கப்பட வேண்டிய வாழ்வாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கோடீஸ்வரன் எம்.பி இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்தார்.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ப்ரைஸ் ஹட்சஸன் மற்றும் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற உறுப்பினரின் வாசஸ்தலத்தில் (18) நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். உயர்ஸ்தானிகரின் அம்பாரை மாவட்டத்திற்கான விஜயத்தின் போதே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சிநேகபூர்வமான முறையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் முக்கிய தேவைப்பாடுகள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார்.

இதேவேளை தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு திட்டமே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதான நோக்கம் என குறிப்பிட்ட அவர், இதனால் கடந்த காலத்தில் மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்தியினை முன்கொண்டு செல்லமுடியாமல் போனதையும் சுட்டிக்காட்டினார். ஆனாலும் தற்போது தமிழ் மக்கள் அபிவிருத்தியையும் எதிர்பார்த்துள்ளனர் எனவும் கூறினார்.

குறிப்பாக கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம், குடிநீர் வசதி என பல விடயங்களில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தின் உதவிகளும் போதிய அளவில் வழங்கப்படவில்லை.

ஆகவே குறித்த விடயங்களை மேம்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் உதவ முன்வர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அத்தோடு அம்பாறை மாவட்டத்தின் அரசியல் நிலைப்பாடு சமூக, கலாசார, பொருளாதார விடயங்கள், யுத்தத்திற்கு பின்னர் இனங்களிடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு, நல்லிணக்கம் தொடர்பிலும் இனங்களிடையே காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் விளக்கினார்.மேலும் மக்களை பாதிக்கும் வகையிலான எந்த அபிவிருத்தி திட்டங்களையும் அம்பாரை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்த தாம் ஒருபோதும் அனுமதிக்கப்பபோவதில்லை எனவும் கூறினார்.

இதன்போது தாம் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவதாக தெரிவித்த உயர்ஸ்தானிகர், தமது நீண்ட கால வேலைத் திட்டத்தில் இக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகளும் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் வி.விநாயகமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

வாச்சிக்குடா விஷேட நிருபர் 

 


Add new comment

Or log in with...