Friday, March 29, 2024
Home » இளையோரின் பிரச்சினைகளை தீர்க்க குழுவை நியமிக்குமாறு ஆளுநர் பணிப்பு
வடமாகாணத்தில்

இளையோரின் பிரச்சினைகளை தீர்க்க குழுவை நியமிக்குமாறு ஆளுநர் பணிப்பு

by mahesh
November 22, 2023 10:00 am 0 comment

வடமாகாணத்தில் இளையோர் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு அதிகாரிகளுக்கு வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணித்துள்ளார்.

வடமாகாண கல்வி, சுகாதாரம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று ஆளுநர் அலுவலகத்தில் கடந்த ஞாயிறன்று (19) நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு பணித்துள்ளார்.

வடமாகாணத்தில் இளையோர் மற்றும் பாடசாலை மாணவர்களின் சில நடவடிக்கைகளால், சமூகத்தில் பல்வேறு சிக்கல்கள் உருவாகுவதுடன், இவற்றை ஆராய்ந்து தீர்க்கும் பட்சத்தில் சிறந்த சமூகக் கட்டமைப்பை ஏற்படுத்த முடியுமென்று அதிகாரிகள் சிலர் தெரிவித்த போது, இதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டு குழுவை நியமிப்பதற்கு பணித்துள்ளார்.

வடமாகாணத்தில் பாடசாலை மாணவர் இடைவிலகல் தொடர்பாக பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டப்பட வேண்டுமென்பதுடன், சுமார் 25 சதவீதமான பெற்றோருக்கு இது தொடர்பான விழிப்புணர்வு அவசியமாவதாகவும், ஆளுநரிடம் கல்வித்துறைசார் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை, மாணவர்களின் சுகாதார நிலைமை தொடர்பாக கவலை தெரிவித்த வடமாகாண சுகாதார அமைச்சு அதிகாரிகள், விசேடமாக மாணவிகளின் சுகாதார நிலைமை, மாதவிடாய் சிக்கல் உள்ளிட்டவை தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டுமென்று தெரிவித்தனர்.

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள், வீட்டு வன்முறை சம்பவங்கள், சிறுவர் தொழிலாளர்கள் ஆகியவை தொடர்பாகவும் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் வடமாகாணக் கல்வி, சுகாதாரம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் ஏனைய உயர்மட்ட அதிகாரிகளை இணைத்து குழுவை நியமிக்குமாறும் இந்தக் குழுவின் ஆலோசனைக்கமைய துறைசார் குழுக்கள் மற்றும் உப குழுக்களை நியமித்து, சமூகத்திலுள்ள அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வு தொடர்பான பரிந்துரைகளை சமர்பிக்குமாறும் ஆளுநர் பணித்துள்ளார்.

கோப்பாய் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT