காலி மைதானம் அகற்றப்படமாட்டாது | தினகரன்

காலி மைதானம் அகற்றப்படமாட்டாது

காலி மைதானம் அகற்றப்படமாட்டாது-Galle Ground Issue-No Idea to Change the Ground

 

கொக்கலவில் புதிய மைதானம்

அரசாங்கத்துக்கு காலி சர்வதேச மைதானத்தை அகற்றவேண்டும் என்ற நோக்கம் எதுவும் கிடையாது என தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

இன்று (20) பாராளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய சந்திம வீரக்கொடி எம்பி, காலி மைதானத்தை அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

யுனெஸ்கொ உலக மரபுரிமை என்ற அடிப்படையில் மைதானத்திலுள்ள சட்டவிரோத கட்டடத்தை அகற்றவேண்டிய தேவை எழுந்துள்ளது. கொக்கலவில் புதிய மைதானத்தை அமைப்பது குறித்த யோசனையை அரசாங்கம் கைவிடாத அதேநேரம், காலி மைதானத்தை சர்வதேச மைதானமாக தொடர்ந்தும் பேண எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் சாகல  சுட்டிக்காட்டினார்.

சந்திம வீரக்கொடி எம்பியின் ஒழுங்குப் பிரச்சினைக்கு பதிலளித்த கலாசார அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ, யுனெஸ்கோவின் உலக மரபுரிமையாக அறிவிக்கப்பட்டுள்ள காலி கோட்டையுடன் இணைந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடத்தை அகற்றுவது பற்றிய பிரச்சினையே எழுந்துள்ளது. இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டாம் என்று யுனெஸ்கோ கோரவில்லை. உலக மரபு உரிமை என்ற அடிப்படையில் அதனைப் பேணுவதுடன், மக்களின் பார்வைக்கு திறந்திருக்க வேண்டும் என்றே அவர்கள் வலியுறுத்தியிருப்பதாகக் கூறினார்.

2006ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்‌ஷவின் பெயரில் அங்கு சட்டவிரோதமான முறையில் பார்வையாளர் அரங்கொன்று அமைக்கப்பட்டது. இதனை அகற்றுமாறு யுனெஸ்கோ தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. இவ்வாறான நிலையில் குறித்த காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பெயரை யுனெஸ்கோ உலக மரபுரிமை பட்டியலில் தொடர்ந்தும் பேணுவதா அல்லது அங்குள்ள மஹிந்த ராஜபக்‌ஷ பார்வையாளர் மண்டபத்தின் பெயரை பாதுகாத்து மரபுரிமைப் பட்டியலிலிருந்து மைதானத்தின் பெயரை நீக்கிக் கொள்வதா என்பதை தீர்மானிக்க வேண்டியிருப்பதாக உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ இதன்போது பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

காலி நகரிலுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலுள்ள சட்டவிரோத கட்டடத்தை அகற்றுவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு, அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்திருப்பதாகவும், இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அக்குழுவுக்குப் பணித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

(மகேஸ்வரன் பிரசாத்)

 


Add new comment

Or log in with...