நம்பிக்கையில்லா பிரேரணை மீது காரசாரமான விவாதம் | தினகரன்

நம்பிக்கையில்லா பிரேரணை மீது காரசாரமான விவாதம்

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நேற்று காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. முதல்கட்சியாக ஒடிசாவைச் சேர்ந்த பிஜூ ஜனதாதளம் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. காலையிலேயே மாலை 6:00 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் சுமித்ர மகாஜன் அறிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைதெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்தது. தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. கேசினேனி சீனிவாஸ் ஆளும் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரக் கோரி நோட்டீஸ் அளித்தார்.

அதை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் மக்களவையில் காலை 11:00 மணியளவில் தொடங்கியது.

விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய தெலுங்குதேச எம்.பி ஜெயதேவ் கலா, ‘‘தெலுங்கானா பிரிக்கப்பட்டதில் பெரும் பின்னடைவை ஆந்திரா சந்தித்துள்ளது. தாயை கொன்று மகளை காப்பாற்ற காங்கிரஸ் முயலுவதாக அப்போது நரேந்திர மோடி கூறினார். தான் பதவிக்கு வந்த பின்பு, தாயையும் காப்பற்றபோவதாக கூறினார். எனினும் சொன்னதை அவர் செய்யவில்லை. தாயை காப்பாற்றவில்லை. ஆந்திராவுக்கு வழங்கப்பட வேண்டிய எந்த நிதியையும் அவர் வழங்கவில்லை’’ எனக் கூறினார்.

முன்னதாக விவாதம் தொடங்கும் முன்பு, எதிர்கட்சிகள் பேசுவதற்கு கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வேண்டுகோள் விடுத்தார். நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் ஆந்திர தொடர்பானது என்பதால் தங்களுக்கு தொடர்பு இல்லை எனக்கூறி ஒடிசாவைச் சேர்ந்த பிஜூ ஜனதாதள எம்.பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


Add new comment

Or log in with...