மரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை | தினகரன்

மரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை

மரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கிறது. இருந்தாலும் ஏன் மரங்கள் பெருமளவில் வெட்டப்படுகின்றன? எளிமையான வாழ்க்கை முறை மாறி, இன்னும் வசதிகள் வேண்டும், வேண்டும்' என்கிற மனிதனின் பேராசைதான் காரணம்.

வீதிகளும், வீடுகளும், மருத்துவமனைகளும், கல்விக்கூடங்களும் வேண்டும்தான். ஆனால் இவற்றை விட முக்கியம் சுவாசிக்கக் காற்றும், குடிக்கத் தண்ணீரும்.

ஆயிரக்கணக்கில் மரங்களை வெட்டினால் நம் வாழ்க்கைப் பயணத்தின் நேரமும் அல்லவா குறைந்து போகும்?

நம்மைவிட பின்தங்கியுள்ள கென்யாவில், பெருநகரங்களின் வீதிகள் எல்லாம் இருபுறமும் மிகப் பெரிய மரங்களோடு காணப்படுகின்றன. அதுமட்டுமல்ல, வீதிகளின் நடுவிலும் மிகப் பெரிய மரங்கள் வரிசையில் உள்ளன. அவற்றின் மேல் கூடுகள் கட்டிக் கொக்குகள் வாழ்கின்றன. வாகனங்கள் பொறுமையாக நகர்கின்றன. நம்மூர் போல் யாரும் ஒலிப்பான்களை அலற விடுவதில்லை.

நம்மைவிட அதிகம் முன்னேறியுள்ள சீனாவில், குறுகிய வீதிகளிலும் கூட இருபுறமும் பெரிய பெரிய தொட்டிகளில் பூத்துக்குலுங்கும் சிறிய வகை மரங்கள் இரண்டு அடுக்குகளாக வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் அதிகம் ஓடும் இவ்வீதிகளில் காற்று மற்றும் ஒலி மாசு பெருமளவில் குறைவதோடு, இம்மரங்களின் பல வண்ணப்பூக்கள் கண்களுக்கு விருந்தாகவும் காட்சியளிக்கின்றன. நம் நாட்டில் எந்தவொரு கட்டுமானம் என்றாலும், முதலில் வெட்டு மரங்களை' என்ற கண்ணோட்டத்துடன்தான் செயல்படுகின்றனர். இது மாற வேண்டும்.

இதுவரை வெட்டியது போதும். இனியாவது இருக்கும் மரங்களை வெட்டாமல், இயற்கையோடு இணைந்து முன்னேற வேண்டும். ஒரு கட்டடம், அது வீடாக இருந்தாலும் சரி, வணிக வளாகமாக இருந்தாலும் சரி, அதற்கு அனுமதி தரும்போதே, இத்தனை சதுர அடிக்கு இத்தனை மரங்கள் வளர்க்க வேண்டும் என்று வரையறுக்க வேண்டும். அவ்விதம் வளர்க்கப்படுகின்றன என்பதை உறுதிசெய்யவும் வேண்டும்.

பொதுமக்களில் பலரும் மரங்களால் குப்பை சேருகிறது, வீட்டை மறைக்கிறது, பெயர்ப் பலகையை மறைக்கிறது என்று பல காரணங்கள் கூறி, மரங்களை வெட்டுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். மரம் வெட்டப்பட்டால் புகார் தெரிவிக்க ஒரு தொலைபேசி எண் அறிவிக்கப்பட வேண்டும். புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனிதன் இல்லாமல் மரங்கள் வாழலாம், மரங்கள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது என்பது நினைவிருக்கட்டும்!


Add new comment

Or log in with...