வாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்! | தினகரன்

வாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்!

உயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை ஆட்கொண்ட போதே வீதி விபத்துக்கள் மலிய ஆரம்பித்து விட்டன.விபத்துக்கள் மலிந்து விட்ட ஒரு காலத்தில் நாம் தற்போது வாழ்கின்றோம்.

இலங்கையில் ஒவ்வொரு நிமிடமும் 08 பேர் விபத்துக்களால் (வீதி விபத்து மட்டுமல்ல) ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவு தேசியத் திட்ட முகாமையாளரும் (காயத் தடுப்பு) சமூக மருத்துவ ஆலோசகருமான டொக்டர் சமித ஸ்ரீதுங்க தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, ஒவ்வொரு மணித்தியாலமும் 450 இலங்கையர்கள் விபத்தினால் ஏற்பட்ட காயங்களுக்காக மருத்துவ சிகிச்சையினை நாடுவதாகவும், நாளொன்றுக்கு சுமார் 11ஆயிரம் பேர், இவ்வாறு சிகிச்சை பெற்றுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில் வருடமொன்றுக்கு சுமார் 40 இலட்சம் பேர் விபத்துக்களால் ஏற்பட்ட காயங்களுக்காக மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வதாக டொக்டர் சமித தெரிவித்தார்.

ஆனால் உயிரிழப்புகளை பார்க்கின்ற போது, 'வீதி விபத்துக்களால் நாளொன்றுக்கு 07பேர் மரணிக்கின்றனர். அதுமாத்திரமன்றி, ஒரு வருடத்துக்கு 2800இற்கும் அதிகமான மனித உயிர்களை விபத்துக்களின் மூலம் இழக்க நேரிடுகின்றது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின் பிரகாரம் வருடமொன்றுக்கு உலகமெங்கும் 12.5இலட்சம் பேர் வீதி விபத்துக்களால் மரணிப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இதனடிப்படையில் பார்த்தால் உலகில் நாளொன்றுக்கு 3472பேர் விபத்துக்களினால் மரணமடைகின்றனர். இவ்வீதி விபத்துக்களால் மரணிப்போரில் 15 தொடக்கம் 29 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் எனவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. உலகில் அதிகமாக மரணம் நிகழ்வதற்குரிய காரணங்களை பட்டியல்படுத்தும் போது வீதிவிபத்து ஒன்பதாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. அதன்படி உலகில் நிகழும் மரணங்களில் 2.2 சதவீதமானவை வீதிவிபத்துக்களால் இடம்பெறுகின்றன.

2030ஆம் ஆண்டளவில் இக்காரணி 07ஆவது இடத்தை எட்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்வு கூறியுள்ளது.

உலகில் அதிகமான வீதிவிபத்துக்கள் இடம்பெறும் நாடுகளைப் பட்டியல்படுத்தும் போது குறைந்த வருமானமுள்ள, நடுத்தர வருமானத்தை கொண்ட நாடுகளிலே அதிகமான வீதி விபத்துக்கள் இடம்பெறுவது தெரியவருகிறது. இந்நாடுகளில் போக்குவரத்துக்குத் தேவையான உட்கட்டுமான வசதிகள், கொள்கை மாற்றங்கள் போன்றன சிறப்பாக இல்லை. நமது நாட்டினைப் பொறுத்தவரை அதிகமான வீதிவிபத்துக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணிகளுள் ஒன்று குடிபோதையில் வாகனம் செலுத்துவதாகும். தூரப் பிரயாணம் மேற்கொள்ளும் சாரதிகள் குடிபோதையில் வாகனம் செலுத்துவது அதிகளவில் இடம்பெறுகிறது.அதனை உயிர்களின் பெறுமானம் பற்றிய அலட்சியமாகவே கருத வேண்டியுள்ளது.

எவ்வளவுதான் சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்ற போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவோர் அலட்சியமாக நடந்து கொள்வதனால் முன்னேற்றம் எதனையும் கண்டுகொள்ள முடியாது.

அதிவேகம், தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்துவது, சிறுவர்கள் மோட்டார் சைக்கிளைச் செலுத்துவது, கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு வாகனங்களைச் செலுத்துவது போன்ற காரணிகளும் வீதி விபத்துக்கள் நிகழ காரணமாக அமைகின்றன.

றிசாத் ஏ காதர்
ஒலுவில் மத்திய விசேட நிருபர்


Add new comment

Or log in with...