எளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள் | தினகரன்

எளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்

67வது குருபூசை தினம் இன்று

சித்தத்தைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள். சித்தர்கள் யோகத்தின் மூலமும் தியானத்தின் மூலமும் புத்தியைக் கட்டுப்படுத்துவார்கள். சித்தர்களை ஆன்மிக புரட்சியாளர்கள் என்று சொல்வதும் உண்டு.

இத்தகைய சித்தர்கள் பொதுவாக தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் வாழ்ந்துள்ளனர் . தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்து பல சித்துகளை வெளிப்படுத்தி மகா சமாதியுற்ற ஞான சித்தர்கள் ஐவர். இவர்கள் 1920 ஆம் ஆண்டு முற்பகுதியில் இலங்கையை வந்தடைந்ததாகக் கூறப்படுகின்றது.

அவர்களுள் மூவர் பிரசித்தமானவர்கள். நவநாதசித்தர் சுவாமிகள், பெரியானைக்குட்டி சுவாமிகள், சித்தானைக்குட்டி சுவாமிகள் ஆவர்.

பாரத நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநாழி இராச்சியத்தின் சிற்றரசன் மகனாக அவதரித்தவர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகள். 'சித்தருள் சித்தர்' எனப் போற்றப்படும் அவர், காரைதீவில் ஜீவசமாதியாகி இன்றுடன்(21.07.2018) 67 வருடங்களாகின்றன.

ஈழமணித்திருநாட்டின் இல்லமெலாம் நடமாடித் திரிந்து தன்னை ஒரு பித்தனாகவும் கேலிக்குரியவனாகவும் வெளிக்காட்டி உள்ளன்புடன் நாடி வந்த மெய்யடியார்களின் மனோநிலைக்கேற்ப அருளுரைகளை வழங்கி சித்துக்களையும் புரிந்தவர் அவர்.

'முப்பெரும் சித்தர்கள்' என்ற நூலை எழுதிய நாவலப்பிட்டி ஆத்மஜோதி நா.முத்தையா அவர்கள், இலங்கைக்கு சமகாலத்தில் வந்த நவநாதசித்தர் சுவாமிகள், பெரியானைக்குட்டி சுவாமிகள், சித்தானைக்குட்டி சுவாமிகள் ஆகியோர் இலங்கையில் முறையே நாவலப்பிட்டி குயின்ஸ்பெரி தோட்டத்திலும் கொழும்பு முகத்துவாரத்திலும் மட்டக்களப்புக் காரைதீவிலும் சமாதியடைந்தவர்களாவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் ஒருவரே சித்தானைக்குட்டி சுவாமிகள். காரைதீவிலே 1951 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 21ஆம் நாள் சுவாதி நட்சத்திர தினத்தன்று சமாதி எய்தினார். அவருக்கு இன்று 21ஆம் திகதி 67வது குருபூஜை தினமாகும்.

அவர் சமாதியடைந்த இடத்தில் இன்று ஜீவசமாதி ஆலயம் எழுந்தருளியுள்ளது.

இந்து மதத்தில் நிலையாமை என்பது ஒரு முக்கியமான எண்ணக்கருவாகும். இதனை சித்தானைக்குட்டி சுவாமியும் ஏனைய பல சித்தர்களும் பல்வேறு கருத்துக்கள் வாயிலாக முன்வைத்தார்கள்.

'நீரின் மேல் குமிழி போல் உடம்பு இது நில்லாது

போய்விடும் இது நீயறியா மாயம்'

என்று உடலின் நிலையாமை பற்றி பாடியுள்ளார்கள்.

இதனைப் போல சித்தானைக்குட்டி சுவாமிகளின் வாழ்க்கைச் சம்பவங்கள் வாயிலாக உடல் நிலையாமைச் சிந்தனை விளக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதனை இவருடைய உடல் தோற்றமும் தெளிவுபடுத்துகின்றது. சுவாமிகள் ஈழத்தின் பல இடங்களுக்கும் கால்நடையாகவே சென்றார். சுவாமிகளுடைய பாதம் படாத இடமே கிடையாது. இவர் உணவிற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தனக்குக் கிடைத்தவற்றை பிறருக்கு கொடுத்து மகிழ்ந்தார்.

'உண்ணும் முன்பு ஒரு கணம் இறைவனை நினை' என்பதனுடாக இறைவனை வழிபட்ட பின்னே உணவினை உட்கொள்ள வேண்டும் என்ற சிறப்பான உணவுப் பழக்கவழக்கத்தை தனது உபதேசத்தின் வாயிலாக சமூகத்துக்கு கூறியிருந்தார்.

இதனை இவருடைய உபதேசத்தின் வாயிலாகவும் விளக்கியுள்ளார். 'பசித்து வந்தோர் முகம் பார்' என்பதனூடாக இதனை அறியலாம்.

இந்து சமயத்தில் கூறப்படுகின்ற கொடை, தானம் பற்றி மக்களுக்கு விளக்கியவராக விளங்குகிறார் அவர். இதனைப் பற்றியும் இதன் சிறப்புப் பற்றியும் இந்து சமய மூல நூல்களும் அற நூல்களும் எடுத்துக்காட்டுக்களை முன்வைக்கின்றன.

பிறருக்குக் கொடுத்து உதவாமல் பெட்டியிலே பூட்டி வைக்கும் செல்வமானது மக்கள் செறிந்து வாழ்கின்ற ஒரு இடத்திலே நச்சுமரம் காய்த்து பழுத்து தொங்குவதற்கு ஒப்பானது என்று கூறப்படுகின்றது. இதனை சித்தானைக்குட்டி சுவாமி தனது வாழ்க்கைச் சம்பவங்கள் வாயிலாக மக்களுக்கு விளக்கியுள்ளார். இதனைப் போலவே கொடையின் சிறப்பினைப் பற்றியும் பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பது பற்றியும் சித்தானைக்குட்டி சுவாமிகள் தனது உபதேசத்தின் மூலம் கூறியுள்ளார்.

'உன்னிடத்தில் உள்ளதை இல்லையென்னாமல் மற்றவர்களுக்கு கொடு!' என்பதனூடாக அறியலாம்.

சித்தானைக்குட்டி சுவாமியின் உபதேசங்கள் வாயிலாக வெளிப்படும் சமூக சிந்தனைகள் பின்வருமாறு அமைகின்றன. அதிகாலையில் நித்திரை விட்டு எழ வேண்டும். எழும்போதே இறைவனை நினைத்துக் கொண்டு எழ வேண்டும். காலை மாலை கடன்களை குறைவின்றி செய்ய வேண்டும். ஒரு மனிதனின் ஆற்ற வேண்டிய தனிமனித கடமைகள் தொடர்பாக இவருடைய உபதேசங்கள் மேற்கூறப்பட்ட கருத்துக்களைக் கூறி நிற்கின்றன.

'அதிகாலையில் நித்திரை விட்டெழு,

எழும்போதே ஆண்டவனை நினை,

காலை மாலை கடன்களை குறைவறச்செய்'

போன்ற வரிகள் மூலம் இதனை அறியலாம்.

'படுக்க முன்பு இறைவனைப் பிரார்த்தி,

கோபத்தை விடு இறைவன் அருள் தானே வரும்'

போன்ற வரிகள் மூலம் இதனை அறியலாம். சுவாமிகள் இந்தியாவின் பல தலங்களுக்கும் ஈழத்தில் கதிர்காமம், செல்லக் கதிர்காமம் போன்ற தலங்களுக்கும் தலயாத்திரை சென்றுள்ளார். பல அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார்.

வி.ரி.சகாதேவராஜா
(காரைதீவு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...