இலங்கைக்கு சார்பான நிலைப்பாட்டினாலல்ல | தினகரன்

இலங்கைக்கு சார்பான நிலைப்பாட்டினாலல்ல

பத்திரிகைகள் பொறுப்பற்ற விதத்தில் செய்திகளை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் விஜயதாஸ விளக்கம்

இலங்கை சார்பில் நிலைப்பாடு எடுத்தமைக்காக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் இயன் பெய்ஸ்லி இடைநிறுத்தப்படவில்லை. தனிப்பட்ட விஜயங்களின்போது இலங்கை அரசாங்கம் அவருக்காக பணம் செலவிட்டமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இலங்கை சார்பான நிலைப்பாட்டை எடுத்தமைக்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சில அச்சு ஊடகங்கள் பிழையாக வழிநடத்தியுள்ளன. பொறுப்பற்ற சில ஊடகங்களின் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் இரு நாட்டுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை பாதித்துவிடும் என்றும் அவர் கூறினார்.

இலஞ்சம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ இதனைக் கூறினார். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் இயன் பெய்ஸ்லி இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இது தொடர்பில் விளக்கமளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் 30 நாட்கள் இடைநிறுத்தப்பட்டிருப்பது தொடர்பில் பத்திரிகைகள் பொறுப்பற்ற விதத்தில் செய்திகளை வெளியிட்டுள்ளன. இலங்கை சார்பான நிலைப்பாட்டை எடுத்தமையால் அவர் இடைநிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுப்பதற்கான உரிமை உடையவர். எனினும், இயன் பெய்ஸ்லி இலங்கைக்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பங்களில் அவர் சார்பில் இலங்கை அரசாங்கத்தினால் பணம் செலவிடப்பட்டுள்ளது. பிரித்தானிய பாராளுமன்ற ஒழுக்கக் கோவையின் அடிப்படையில் உறுப்பினர் ஒருவருக்கு மூன்றாம் தரப்பினரால் பணம் செலவிடப்பட்டிருந்தால் அது பற்றி பாராளுமன்றத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். எனினும், இயன் பெய்ஸ்லி இது பற்றிய தகவல்களை வழங்காத காரணத்தினாலேயே அவருக்கு 30 நாட்கள் சபை அமர்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார்.

இதனைவிட இலங்கை அரசாங்கம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் முறைப்பாடு செய்யப்படவோ அல்லது இலங்கை தொடர்பில் பிரித்தானியா விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவோ இல்லையென்றும் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எந்தவொரு நாடு தொடர்பில் சுயாதீனமான நிலைப்பாட்டை எடுப்பதற்கு உரிமை உள்ளவர். இவ்வாறான நிலையில் ஊடகங்கள் சில பொறுப்பற்ற விதத்தில் தெரிவித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் இரு நாட்டு இராஜதந்திர உறவுகளைப் பாதித்துவிடலாம் என்றும் குறிப்பிட்டார். ஆளுந்தரப்பு, எதிரணி உறுப்பினர்கள் இது தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் காரசாரமான கருத்துக்களை முன்வைத்திருந்தனர். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் இயன் பெய்ஸ்லிக்கு கடந்த அரசாங்கம் எவ்வாறு பணம் வழங்கியது என்பதை பாராளுமன்றம் விசாரணை நடத்தவேண்டுமென இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா சபையில் வலியுறுத்தினார். எந்த அடிப்படையில் இவருக்குப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இலஞ்சம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் இயன் பெய்ஸ்லிக்கு ஒரு இலட்சம் ஸ்டேலிங் பவுன்ஸ் வழங்கிய விவகாரத்தை சபையில் தெரிவித்தார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை முன்வைத்து கருத்துத் தெரிவித்த இராஜங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருக்கு மஹிந்த நிர்வாகம் பணம் வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, எவ்வாறு கடந்த அரசாங்கம் இந்தப் பணத்தை வழங்கியது என்பது விசாரிக்கப்பட வேண்டியுள்ளது என்றார்.

பொது மக்களின் நிதி தொடர்பாகத் தீர்மானிக்கும் உரிமை பாராளுமன்றத்துக்கே உள்ளது. எனவே, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருக்கு எவ்வாறு இந்தளவு பாரிய தொகை பணம் வழங்கப்பட்டது என்பதை பாராளுமன்றம் ஆராய வேண்டும். இதன் பாரதூரத் தன்மையை சகலரும் உணர்ந்துகொண்டு இதற்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இது பற்றிக் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ.டி.சில்வா, பிரித்தானிய அரசியல் வரலாற்றில் கடந்த 15 வருடங்களில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பாரியதொரு தண்டனை இதுவாகும் என்றார். அவருக்கு எப்படி பணம் சென்றது என்பதை கணக்காய்வாளர் நாயகம் ஆராயவேண்டியுள்ளது என்றார். இதேவேளை, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருக்கு பணம் வழங்கிய விடயம் வெளிவிவகார அமைச்சின் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும் வலியுறுத்தினார்.

இயன் பெய்ஸ்லி மாத்திரமன்றி இலங்கை அரசாங்கத்திடம் பணம் பெற்றுக்கொண்ட மேலும் ஐந்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்கள் பற்றிய தகவல்களும் விரைவில் வெளிவரும்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் சுவாசிலாந்து மற்றும் பல்வேறு ஆபிரிக்க நாடுகளிலிருந்து அரச தலைவர்கள் இலங்கைக்கு வந்து சென்றனர். அவர்கள் அனைவரும் இப்படி பணம் கொடுத்து வரைவழைக்கப்பட்டனரா என்ற சந்தேகம் எழுவதாகவும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகள் பேரவையில் கொழும்புக்கு ஆதரவாக வாக்களித்தமைக்கான பிரதியுபகாரமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னைய அரசிடமிருந்து அவரும் அவரது குடும்பத்தினரும் பெற்றுக்கொண்ட இலவச ஆடம்பர விடுமுறை குறித்த விபரங்களை வெளியிடத் தவறியமைக்காக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரொருவர் புதன்கிழமை இடைநிறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. பிரதமர் தெரேசா மேயின் ஆட்டங் காணும் அரசாங்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நேரத்தில் பாராளுமன்றத்தில் அவரது பெரும்பான்மையை மேலும் குறைக்கும் நடவடிக்கையொன்றாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இயன் பெய்ஸ்லி ஜுனியர் பிரித்தானிய பாராளுமன்றத்தின் 30 அமர்வுகளில் கலந்துகொள்வதிலிருந்து அல்லது சுமார் இரண்டு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டார்.

(மகேஸ்வரன் பிரசாத்)

 


Add new comment

Or log in with...