உலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை | தினகரன்

உலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை

உலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத நிறைவேற்று அதிகாரம் தனிநபரிடம் குவிந்ததொரு நாடாகவும், ஊழல் நிறைந்த நாடாகவும் காணப்பட்ட ஒரு ஜனநாயக நாடு இலங்கை மட்டும்தான் என்ற கருத்தை 1978 முதல் நாம் காண முடிகிறது. ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகார ஆட்சியொன்றே இங்கு காணப்பட்டு வந்தது. இந்த எல்லை மீறிய தனியொரு நபரிடம் காணப்பட்ட அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்த நாளாக 2015 ஜனவரி 8ஆம் திகதி வரலாற்றுப் பதிவாக பதியப்பெற்றது. தான் ஜனாதிபதியாக பதவியேற்று ஆறு மாதங்களுக்கிடையில் தன்னிடம் இருந்த நிறைவேற்று அதிகாரங்களை பாராளுமன்றத்துக்கு வழங்க முடிந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜோர்ஜியாவில் நடைபெற்ற திறந்த அரசாங்க பங்குடமை என்ற வெளிப்படைத்தன்மை கொண்ட நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் தெரிவித்திருக்கின்றார்.

ஜனநாயகப் பண்பு நிறைந்த சுதந்திர நாடொன்றில் நிறைவேற்றதிகாரம் பாராளுமன்றத்திடம் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில் இலங்கையானது 1978 முதல் தனிநபரின் கைகளுக்குச் செல்லக் கூடிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதன் விளைவாக ஜனநாயகத்தின் பெயரால் சர்வாதிகார ஆட்சியே கோலோச்சியது. இதன் காரணமாக ஊழல், மோசடிகளே எங்கும் மலிந்து காணப்பட்டது. சர்வாதிகாரத்தையும், ஊழலையும் முற்றாக ஒழித்தேயாக வேண்டும் என்ற கட்டாயத் தேவையை உணர்ந்தே ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்துக் கொண்டு நாம் களமிறங்கியதாகவும் பதவிக்கு வந்த ஆறே மாதங்களில் நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு மீள வழங்க முடிந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜோர்ஜிய மகாநாட்டில் பங்கேற்ற தலைவர்களால் தொடுக்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெளிவுபடுத்தியிருக்கின்றார். ஜனநாயக் பண்புகளைக் கொண்ட சுதந்திர நாடொன்றில் சர்வாதிகாரப் போக்குடைய நிறைவேற்று அதிகாரம் தனிநபரிடம் இருக்கக் கூடாது என்பதை ஆணித்தரமாக வெளிப்படுத்திய ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை பேச்சளவில் மட்டுப்படுத்தாது குறுகிய காலத்திற்குள் செயற்படுத்திக் காட்ட முடிந்ததாகவும் இங்கு குறிப்பிட்டிருக்கிறார். நாட்டை சர்வாதிகாரப் பிடியிலிருந்து மீட்பதற்கான சவாலை ஜனநாயக சக்திகளுடன் கைகோ்ரத்து எதிர்கொண்டதை சர்வதேச மாநாடொன்றில் எமது தலைவர் வெளிப்படையாக கூறியிருக்கின்றார்.

எமது நாடு ஊழல், மோசடி, இலஞ்சம், வீண்விரயம் உள்ளிட்ட மோசமான நாடாகக் காணப்பட்டதன் காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டதுடன், ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டிருந்தது. நிறைவேற்று அதிகாரம் என்ற கூர்மையான வாள் தனி நபரின் கைகளுக்குச் செல்வதால் உருவான பாரிய விளைவுகளை எம்மால் வெளிப்படையாகவே கண்டுகொள்ள முடிந்தது. மக்களுக்கு அளித்த முக்கியமான வாக்குறுதியை ஆறே மாதங்களில் நிறைவேற்றிய ஜனநாயகத் தலைவராக ஜனாதிபதியை மக்கள் கண்டு கொண்டுள்ளனர். அது மக்கள் அடைந்த மிகப் பெரிய வெற்றியாகவே காண முடிகிறது.

சமகாலத்துக்குப் பொறுத்தமானதொரு மாநாடாக திறந்த அரசாங்க பங்குடைமை மாநாடு காணப்படுகின்றது. பிரஜைகளுக்கான அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறுதல், மற்றும் பொது மக்கள் பங்கேற்பை அதிகரித்தல் போன்றவற்றுக்கான ஒரு பொறிமுறையாக இந்த மாநாட்டைக் கொள்ள வேண்டியுள்ளது. இந்தப் பொறிமுறையை ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட நாடுகள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளன. இன்று அதற்குரிய தருணமாகவே கருதப்பட வேண்டும்.

திறந்த அரசாங்க பங்குடைமை என்ற அமைப்பு 2011ல் சர்வதேச மட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. இதில் இன்று 75 நாடுகள் உறுப்புரிமை பெற்றுக்கொண்டுள்ளன. உறுப்புரிமை பெற்ற தெற்காசிய நாடுகளில் இலங்கை முன்னுரிமை பெற்றுள்ளது. 2015ல் நல்லாட்சி அரசு உருவான ஆரம்பத்திலேயே இலங்கை இதில் இணைந்து கொண்டது. இலங்கையின் செயற்பாடுகளை கவனத்தில் எடுத்து நல்லாட்சியின் இயங்கு நிலையை பாராட்டி பங்குடைமை அமைப்பில் சேர்ந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கை ஏற்றுக்கொண்டு உறுப்புரிமையை பெற்றுக்கொண்டது. இவ்வமைப்பினூடாக ஆரோக்கியமான பயன்களை அடைந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வெளிப்பாடு காணப்பட்டதன் காரணமாகவே இலங்கை இதில் தயக்கமின்றி இணைந்தது.

ஊழல் ஒழிப்பு, சிவில் சமூக ஈடுபாட்டை அதிகரித்து மற்றும் அரச சேவையை பலப்படுத்தல் போன்ற நோக்கங்களை அடைந்து கொள்வதில் உள்ள சவால்கள் மற்றும் அச்சவால்களை வெற்றி கொள்வதற்கு பூகோள ரீதியில் கூட்டாக மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்து இந்த அமைப்பின் அரசியல் தலைவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கப்படுவது வரவேற்கத்தக்கதாகும். வித்தியாசமான தொனிப்பொருளை உள்வாங்கியதொரு அமைப்பாக இந்த பங்குடமை அமைப்பு காணப்படுகின்றது. இதன் பயன்பாட்டை ஒவ்வொரு உறுப்புநாடும் கூடுதலாகப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

நாட்டின் இயங்குநிலை ஜனநாயக வழியில் பயணித்தால் மட்டுமே சாத்தியப்பட முடியும் என்பதற்காகவே தன்னிடமுள்ள அதிகாரங்களை பாராளுமன்றத்துக்கு வழங்கி மீண்டும் நாட்டில் ஜனநாயகத்தை மலரச் செய்திருக்கின்றார் ஜனாதிபதி. இந்தப் பயணம் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதாக அமையப் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. மற்றொரு தடவை நாடு சர்வாதிகாரத்தின் பக்கம் போக முடியாத வகையில் உறுதியான அரசியலமைப்பை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

நல்லாட்சி அரசின் இந்தப் பயணம் இடைநடுவில் முறிந்து விடாது. நாட்டை ஜனநாயக வழியில் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடப்பாட்டை ஜனநாயத்தின் மீது நம்பிக்கைகொண்ட ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றனர். இதற்கு மக்களனைவரதும் பூரண ஒத்துழைப்பும் மிக முக்கியமானதென்பதைச் சுட்டிக்காட்டி நிற்கின்றோம்.


Add new comment

Or log in with...