Friday, March 29, 2024
Home » தொல்பொருள் பெறுமதிமிக்க சுற்றுலா ஈர்ப்புள்ள இடமாக காலி, புராதன கச்சுவத்தை பள்ளிவாசல் பெயரிடப்பட்டது

தொல்பொருள் பெறுமதிமிக்க சுற்றுலா ஈர்ப்புள்ள இடமாக காலி, புராதன கச்சுவத்தை பள்ளிவாசல் பெயரிடப்பட்டது

by mahesh
November 22, 2023 6:00 am 0 comment

– தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளை ஆரம்பிக்கும் பொறுப்பு தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது
– அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இதற்கான பணி ஆரம்பம்

காலி மக்குலுவ பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கச்சுவத்தை முஸ்லிம் பள்ளிவாசலை மரபுரிமையாக அடையாளப்படுத்தி தொல்பொருள் பெறுமதிவாய்ந்த இடமாக பெயரிடும் நிகழ்வு அண்மையில் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருமான மனுஷ நாணயக்காரவின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்திருந்ததோடு தொல்பொருள் பணிகளை ஆரம்பிக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

வரலாற்று சிறப்புமிக்க முஸ்லிம் பள்ளிவாசலை மரபுரிமையாக, பெயரிட்டு தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் தொடக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில், வரலாற்றை விளக்கும் பலகையையும் அமைச்சர் திரை நீக்கம் செய்து வைத்தார். இது தொடர்பான தொல்பொருள் ஆய்வுகளை விரைவில் நிறைவு செய்யுமாறு, தொல்பொருள் திணைக்களத்தை இதன் போது அமைச்சர் கேட்டுக் கொண்டார். இதனை முன்னிட்டு கச்சுவத்தை தொடர்பான நூலொன்றும் வெளியிடப்பட்டது. விரைவில் இங்கு தொல்பொருள் ஆய்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இலங்கை முஸ்லிம்கள்

உலகில் உள்ள பல நாடுகளைப் போலவே இலங்கையும் பல்லினங்கள் பல்மதங்கள் மற்றும் பல மொழிகள் கொண்ட ஒரு நாடாகும். இலங்கையில் சுமார் 20 வெவ்வேறு கலாசார ரீதியான மக்கள், குழுக்கள் வாழ்கின்றன. இது மனிதக் கலாசாரத்தின் சுவாரஸ்யமான அம்சமாகும். முக்கியமாக இன ரீதியாக சிங்களம், இலங்கைத் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் எனவும் மத நம்பிக்கைகளின்படி பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்கர் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மொத்த மக்கள் தொகையில் உள்ள 9.7விகிதமாகவுள்ள முஸ்லிம்களிடையே இலங்கை முஸ்லிம்கள், மலாயர்கள், போராக்கள், மேமன்கள் என பலதரப்பினர் உள்ளனர்.

* முஸ்லிம் தொன்மை

பழங்காலத்திலிருந்தே மத்தியதரைக் கடலில் இருந்து அரேபியர்கள் இலங்கைக்கு வர்த்தக நோக்கத்திற்காக வந்ததாக வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. அவர்கள் காலி, யாழ்ப்பாணம், கொழும்பு, மாத்தறை, திருகோணமலை, பேருவளை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், மன்னார் ஆகிய கரையோரப் பகுதிகளில் குடியேறினர்.

அரேபிய வணிகர்கள் இலங்கையின் கரையோரங்களில் வாழ்ந்த பூர்வீகப் பெண்களை மணந்தனர். அரேபிய வணிகர்கள் அங்கு குடியேறியதால் அந்த பகுதிகளில் இஸ்லாம் பரவியது. அப்போது இந்து சமுத்திர வலயத்தில் அவர்கள் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.

* புராதன முஸ்லிம் பள்ளிவாசல்கள்

இலங்கையில் சுமார் 840 முஸ்லிம் பள்ளிவாசல்கள் உள்ளன. கி.பி 920 முதல் 1948 வரை கட்டப்பட்ட பள்ளிவாசல்களின் பட்டியல்:

வருடம் பள்ளிவாசல் அமைவிடம்

920 அல் அப்ரார் பள்ளிவாசல் -பேருவளை

948 பெரிய பள்ளிவாசல் – கொழும்பு

1024 கெச்சிமலை பள்ளிவாசல் -பேருவளை

1300 கச்சிவத்தை பள்ளிவாசல் – மகுலுவ

1824 மீரா மக்காம் பள்ளிவாசல் – கண்டி

1904 மீரான் ஜும்ஆ பள்ளிவாசல் – காலி

1909 ஜாமிஉல் அல்பார் பள்ளி – கொழும்பு

1920 சிவப்புப் பள்ளி – மாத்தறை

1935 முஹியத்தீன் ஜும்ஆ பள்ளி – கண்டி

பேருவளை அப்ரார் பள்ளிவாசல்

கி.பி 920 இல் கட்டப்பட்ட பேருவளையில் உள்ள அப்ரார் பள்ளிவாசல் இலங்கையின் பழைமையான முஸ்லிம் புனித ஸ்தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பலசரக்குப் பொருட்கள் சேகரிக்கவும் ஏனைய பொருட்களை விற்பனை செய்யவும் வந்த அரேபிய வணிகர்கள் இந்த பள்ளிவாசலைக் கட்டியதாக வரலாற்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பள்ளிவாசல் 1897 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.

கெச்சிமலை பள்ளிவாசல்

கெச்சிமலை முஸ்லிம் பள்ளிவாசலானது கெச்சிமலை தர்கா என்றும் அழைக்கப்படுகிறது. இது தெற்கு கடற்கரையில் பேருவளை துறைமுகத்தை ஒட்டி அமைந்துள்ளது. புராணத்தின் படி இந்த பள்ளிவாசல் யெமனில் இருந்து வருகைதந்த வணிகர்கள் 12 ஆம் நூற்றாண்டில் கட்டியதாக குறிப்பிடப்படுகிறது .

கொழும்பு பெரிய பள்ளிவாசல்

இது இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் முக்கிய பள்ளிவாசலாகும். 948 ஆம் ஆண்டு கொழும்பு பகுதியில் சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட அரபு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட மையவாடியுள்ள இடத்திற்கு அருகில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசல் 1100 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது.

சிவப்புப் பள்ளி என அழைக்கப்படும் ஜாமிஉல் அல்பர் பள்ளிவாசல் கொழும்பு புறக்கோட்டை இரண்டாவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ளது. 1908 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிவப்புப் பள்ளிவாசல் நிர்மாணப் பணிகள் 1909 இல் நிறைவடைந்தது. இது இந்து-இஸ்லாமிய கட்டிடக்கலையின் முறையான கலவையாகும்.

* காலி

1588 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயர்கள் தென்மேற்கு கடற்கரையில் காலி கோட்டையை நிறுவியதோடு 1649 க்குப் பிறகு ஒல்லாந்து நாட்டவர்கள் கோட்டையை அபிவிருத்தி செய்தனர். இன்றுவரை காலி கோட்டை பன்முகத்தன்மையின் அடையாளமாக உள்ளது. எனவே, இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. கி.பி 125-1,50 இல் தொலமியினால் உருவாக்கப்பட்ட உலக வரைபடத்தில் காலி துறைமுகத்தை கிரேக்க, அரேபிய மற்றும் சீன வர்த்தகர்களுக்கு இடையே பரபரப்பான வர்த்தக மையமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மீரான் ஜும்மா பள்ளிவாசல், காலி கோட்டையின் கலங்கரை விளக்கத்திற்கு அருகில் போர்த்துக்கேய கத்தோலிக்க தேவாலயத்திற்கு அண்மையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளிவாசல் 1750 இல் போர்த்துக்கேய காலனித்துவ ஆட்சியின் போது கட்டப்பட்டது . தென்னிந்தியாவிலிருந்து வந்த முஸ்லிம் இறைநேசரான மீரான் சாஹிப்பின் நினைவாக இது கட்டப்பட்டது. தென்னிந்தியாவில் நாகப்பட்டினத்தில் அவரது அடக்கஸ்தலத்தைக் காணலாம். இந்தப் பள்ளிவாசலின் கட்டிடக்கலையானது பிரிட்டிஷ் விக்டோரிய மற்றும் இஸ்லாமிய பாரம்பரியத்தின் கலவையாகும்

* மகுலுவவில் அமைந்துள்ள கச்சிவத்தை பள்ளிவாசல்

மாகல்ல பாலத்திற்கு அருகில் உள்ள காலி மகுலுவ கச்சிவத்தை பழைமையான பள்ளிவாசல் 1300 இல் கட்டப்பட்டதாகக் கூறப்படும் அதேவேளை வேறு சிலரது கருத்துப்படி இலங்கைக்கு அரபி நாட்டவர்கள் வருகை தந்த ஆரம்ப காலத்தில் அதாவது இந்தப் பள்ளிவாசல் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தொல்பொருள் ஆராய்ச்சி இல்லாமல் சரியான காலத்தை தீர்மானிப்பது கடினம். காலி கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நவீனமயமாக்கப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்களுடன் ஒப்பிடும்போது அதன் தொன்மை தெளிவாகத் தெரிகிறது. இப்பள்ளிவாசல் பல தடவைகள் புனரமைக்கப்பட்டிருப்பது சுவர்களிலுள்ள தடித்த சீமெந்து அடுக்குகளின் ஊடாக தெளிவாகிறது. தற்போதுள்ள பழைய கட்டடம் ஒல்லாந்து ஆட்சிக் காலத்தில் கண்டி கால கட்டடக்கலை பாரம்பரியத்தை சேர்ந்தது. இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரைக்காக புறப்பட்ட தென் மாகாணத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் காலி துறைமுகத்தில் இருந்து மக்கா செல்வதற்கு முன்னர் இந்தப் பள்ளிவாசலில் தங்கியுள்ளனர். இந்தப் பள்ளிவாசல் முதலில் ‘ஹஜ்ஜிவத்தை’ என்று அழைக்கப்பட்டது.

கண்டி

மத்திய மாகாணத்தின் முக்கிய நகரமான கண்டி, வரலாற்று ரீதியாக மிகவும் முக்கியமான நகரமாகும். இது கண்டி யுகத்தில் இலங்கை இராச்சியமாக இருந்தது. மத அடிப்படையில் இது ஒரு புனித நகரமாகும். எனவே, 1988 ஆம் ஆண்டில் கண்டி யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்டது.

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்
அதனை என்னில் இருந்து ஆரம்பியுங்கள்
– தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார

நாட்டின் அபிவிருத்தி – தேசிய ஐக்கியத்தை எதிர்பார்ப்பதாயின், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள். அதனை என்னில் இருந்து ஆரம்பியுங்கள். இலங்கையர்; என்ற ரீதியில், மனிதர்கள் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், நாட்டின் அபிவிருத்தி மற்றும் தேசிய ஐக்கியத்தை எவரேனும் எதிர்பார்ப்பார்களாயின் ஒருவரையொருவர் குற்றம் சாட்டாது அதற்காக ஆரம்பத்தை தன்னிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

ஒரு நாட்டில் வாழும் சகோதரனாகவோ அல்லது சகோதரியாகவோ மற்றவரைப் நேசிக்கக்கூடியவர்கள் அந்த நாட்டின் கண்ணியத்திற்கும் பெருமைக்கும், தேசப் பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருப்பார்கள். அப்படிப்பட்ட நாடே வலிமையான நாடு என்று நாம் சொல்கிறோம்.

கடந்த காலங்களில், அரசியல், சமூக மற்றும் மத மற்றும் கலாசார ரீதியாக, மக்கள் வேறுபட்டவர்களாக இருந்திருக்கலாம். வெவ்வேறு மக்கள் வெவ்வேறு மரபுகளை மதங்களுக்குள் கொண்டு வர முயற்சித்தனர் . சிலர் மாற்றங்களை மேற்கொள்ள முயன்றனர். சிலர் புதிய கலாசாரப் போக்குகளுக்குள் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முயன்றனர். இதற்கு மத்தியில் மக்கள் வீதியில் இறங்கி வாக்களித்து போராடி அந்த மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் நாங்கள் எப்பொழுதும் செய்ததெல்லாம் வாய் வார்த்தை மூலம் மாற்றத்தை தேடுவதுதான். ஒவ்வொரு மாற்றத்திற்கும் செயற்பாடு தேவை. சற்று யோசித்துப் பாருங்கள், உங்கள் உடலை மாற்ற வேண்டுமானால், உங்கள் தோரணையை மாற்ற வேண்டும். அந்த மாற்றம் என்னில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று கூறி ஜனாதிபதி தலைமையில் அந்த

எண்ணக்கருவை ஆரம்பித்தோம். முறைமை மாற்றத்திற்கு நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட போது, இந்தப் பணியை ‘என்னில் இருந்து’ என்ற தொனிப்பொருளில் ஆரம்பித்தோம். அதுவரை இருந்த சீர்குழைந்த அரசியல் கலாசாரத்தை மாற்றும் நடவடிக்கை என்னில் இருந்து தொடங்குகிறது.

நமது நாடு 75 ஆண்டுகளாக வறிய நாடாக இருப்பதற்கு ஒரு காரணம் இனவெறிக் கலவரம் தான். அல்லது ஒரு குழு ஆயுதம் ஏந்தியமை. மக்கள் போராட வேண்டும் விலங்குகளாக அல்ல, மனிதர்களாக போராட வேண்டும்.

தற்போது, இஸ்ரேல் – பாலஸ்தீன நெருக்கடியுடன் அரசியல் இலாபம் நோக்கில் சிலர் இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினையை இனவாத கலவரமாக கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். வரலாற்றின் முந்தைய தவறு மீண்டும் நிகழாமல் இருக்க என்னில் இருந்து எப்படி தொடங்க வேண்டும் என்று யோசித்தேன். இன்று நாங்கள் எனது சிந்தனையின் ஒரு விளைவாக பங்கேற்கிறோம்.

கச்சுவத்தை பழைமையான பள்ளிவாசல் என்பது ஒரு மத தலம் மட்டுமல்ல என்பது என் கருத்து. கச்சுவத்தை வழிபாட்டுத்தலத்துடன் இலங்கையர்களாகிய நாம் கடந்த காலத்திலிருந்து எம்மிடையே இருந்த சகவாழ்வின் நெருக்கத்தையும் உணர்திறனையும் தொன்மையாக உலகுக்கு எடுத்துரைக்கிறோம் என்பதாகும்.

எனவே, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், எங்களின் இந்த தொன்மையான பாரம்பரியத்தை விரைவில் உலகுக்கு எடுத்துரைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் வருங்கால சந்ததியினருக்காக வரலாற்றைப் பாதுகாப்பதுடன், அதனை பாதுகாப்புடன் அவர்களிடம் கையளிக்க வேண்டும் .

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில், கலந்துகொண்ட அனைவருக்கும், இந்த தருணத்தில் நேரடியாகத் தொடர்புள்ள அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நான் என்னில் ஆரம்பித்தேன். நீங்களே தொடங்குங்கள். நீங்கள் தேசிய ஒற்றுமையை விரும்பினால், அது உங்களிடமிருந்து ஆரம்பமாகட்டும். நீங்கள் ஒரு வளர்ச்சிக்கண்ட நாட்டை விரும்பினால், நீங்களே இதனை தொடங்குங்கள் என்றும் தெரிவித்தார்.

பல்மத , பல்கலாசார வரலாற்றின் அழகை வளர்க்கும் ஒரு புனித தளமாக கச்சிவத்தை பள்ளிவாசல் உள்ளது 
– அஷ்ஷெய்க் அம்ஹர் ஹகம்தீன்


நாட்டின் தொல்லியல் மதிப்பை உயர்த்தும் வணிக நகரமாக காலி காணப்படுகிறது. இலங்கையின் தென்மேற்கே கரையோரத்தில் பரந்து விரிந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த நகரம் மயூர, பரவி, கோகிலா போன்ற காவியங்களில் புலவர்களால் வர்ணிக்கப்பட்டுள்ளது. கி.பி 1325-,1354 க்கு இடைப்பட்ட காலப் பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்த இபுனு பதூதா, தனது “அர்-ரிஹ்லா” என்ற தேச சஞ்சார படைப்பில் காலி நகரை “காலி” என்று குறிப்பிட்டுள்ளார். காலியில் காணப்படும் முக்கிய நினைவுச்சின்னம் சீனம, அரபு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட மும்மொழிக் கற்சாசனமாகும். இந்த கற்சாசனம் 1911 ஆம் ஆண்டு வொட்லின் என்பவரால் காலி, கிரிப்ஸ் வீதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கி.பி 1505 இல் தற்செயலாக காலியை அடைந்த லொரென்சோ த அல்மேதா “காலோ, காலோ” என்று கூறியதால் இந்த நகரம் காலி ஆனது என்றும் நம்பப்படுகிறது.

பட்டுப் பாதையில் காலியானது பரபரப்பான கடற் துறைமுகமாக இருந்தது என்பதை வரலாறு நிரூபிக்கிறது. இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரையை ஆரம்பிப்பதற்காக காலி ஹஜ்ஜிவத்தைக்கு சென்றதாகவும், அங்கு அவர்கள் தொழுகை மற்றும் சடங்குகளை மேற்கொள்வதற்கு ஹஜ்ஜிவத்தை பள்ளிவாசலை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஹஜ்ஜிவத்தை பின்னர் கச்சிவத்தை என்று மாறியதாகத புராணங்களில் கூறப்பட்டுள்ளது. கடந்த கால நிகழ்வுகள், அனுபவங்கள் மற்றும் நினைவுகளின் தொகுப்பானது வரலாறு என்ற சொல்லுடன் இணைவதைப் போன்று , கச்சிவத்தை பழைமையான பள்ளிவாசலும் வரலாறாக மாறியுள்ளது. பல்மத மற்றும் பல்கலாசார வரலாற்றின் அழகை வளர்க்கும் ஒரு புனித தளமாக கச்சிவத்தை பள்ளிவாசல் காணப்படுகிறது. தேசிய நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தும் எமது பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் காலி கச்சிவத்தை பள்ளிவாசலை வரலாற்றுப் பாரம்பரியத்துடன் இணைப்பது நம் அனைவருக்கும் கிடைத்த ஒரு சிறந்த சந்தர்ப்பம் என்பதை குறிப்பிட வேண்டும்.

தொகுப்பு எம்.எஸ்.பாஹிம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT