மத்தள விமான நிலைய செயற்பாடு; இந்தியாவூக்கு இலங்கை நிபந்தனை | தினகரன்

மத்தள விமான நிலைய செயற்பாடு; இந்தியாவூக்கு இலங்கை நிபந்தனை

 

* இராணுவ செயற்பாடுகளுக்கு பயன்படுத்தவும் முடியாது
* இலங்கையின் நிபந்தனைகள் எவ்வகையிலும் நீக்கப்படாது

இராணுவ செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படாது என்ற முன்நிபந்தனையின் அடிப்படையிலேயே மத்தள விமான நிலையம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். இலங்கை அரசாங்கம் சார்பில் முன்வைக்கப்படும் முன்நிபந்தனைகள் எதுவும் ஒருபோதும் நீக்கப்படாது என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தெரிவித்தார்.

இந்திய விமான சேவைகள் அதிகார சபையுடன் கூட்டு முயற்சியாக மத்தள விமான நிலையத்தின் நிர்வாகம் இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட முன்னர் சிவில் விமான சேவைகள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

27/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மத்தள விமான நிலையத்தின் முகாமைத்துவம் தொடர்பில் இந்தியாவுடன் கூட்டு முயற்சிக்குச் செல்ல முன்னர் முன்நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை நிவர்த்தி செய்தால் மாத்திரமே இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்படும். மத்தள விமான நிலையத்தில் சிவில் விமான சேவை செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட வேண்டும். எந்தவித இராணுவ செயற்பாடுகளுக்கும் பயன்படுத்த இடமளிக்கப் போவதில்லை. விமானங்கள் தொடர்பான வழிநடத்தல் செயற்பாடுகளை 'நெவிகேஷன்' செயற்பாடுகளை இலங்கை விமான சேவைகள் அதிகார சபையினால் நியமிக்கப்படும் தரப்பினரே நிர்வகிப்பார்கள். விமான நிலையத்தின் பாதுகாப்பு இலங்கையிடமே இருக்கும், தீயணைப்பு உள்ளிட்ட அவசர சேவைகளுக்கான பொறுப்பும் இலங்கையிடம் இருக்கும் உள்ளிட்ட முன்நிபந்தனைகள் போடப்பட்டுள்ளன. இவை ஒருபோதும் மீளப்பெறப்படமாட்டாது என்றும் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா குறிப்பிட்டார்.

பாரிய கடன் சுமையில் அமைக்கப்பட்டுள்ள மத்தள விமான நிலையத்தை வினைத்திறன் மிக்க விமான நிலையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு முதலீடு செய்ய விரும்பும் பங்குதாரர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. எனினும், ஏற்றுக்கொள்ளக் கூடிய விண்ணப்பங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவேதான், இலங்கை இந்திய கூட்டு முயற்சியாக முன்னெடுப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கை விமான நிலைய அதிகாரசபையும், இந்திய விமான நிலைய அதிகாரசபையும் கூட்டு முயற்சியாக தனியான நிறுவனமொன்றை உருவாக்கி விமான நிலையத்தின் முகாமைத்துவம் மேற்கொள்ளப்படும்.

நஷ்டத்தில் இயங்கும் மத்தள விமான நிலையத்தை வினைத்திறன் மிக்க விமானநிலையமாக மாற்றுவதற்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் யோசனைத்திட்டங்கள் கோரப்பட்டன. ஆறு யோசனைகள் முன்வைக்கப்பட்டபோதும் அவை பொருத்தமானதாக இருக்கவில்லை. சீனா கூட எந்த யோசனைகளையும் முன்வைக்கவில்லை. இந்த நிலையிலேயே இந்திய விமான சேவைகள் அதிகார சபையுடன் கூட்டுமுயற்சியொன்றுக்குச் செல்ல தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டு முயற்சியில் இந்தியாவுக்கு 70 வீதமும் இலங்கைக்கு 30 வீதமும் இருக்கும். இதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கடன்களை மீளச் செலுத்தவுள்ளோம். இதன்போது மத்தள விமான நிலையத்தில் ஏற்கனவே பணியாற்றுபவர்களின் வேலைவாய்ப்புக்கள் உறுதிப்படுத்தப்படும். அது மாத்திரமன்றி ஐந்து வருடத்துக்கான வர்த்தக திட்டத்தை சமர்ப்பிக்குமாறு இந்தியாவிடம் கோரியுள்ளோம். அவற்றை அடிப்படையாகக் கொண்டே தீர்மானம் எடுக்கப்படும். அது மாத்திரமன்றி சிவில் விமான சேவைகள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவேண்டியுள்ளது. இது பாராளுமன்றத்தின் அனுமதிபெறப்பட வேண்டும். பாராளுமன்றம் அனுமதி வழங்காவிட்டால் இந்த செயற்பாடு அத்துடன் முடிவுக்கு வந்துவிடும் என்றார்.

மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...