பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்கும் கும்பல்! | தினகரன்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்கும் கும்பல்!

இலங்கையில் போதைப்பொருட்கள் ஒரு பொதுப்பிரச்சினையாக மாறிவிடுமோ என்ற அச்சம் பல்வேறு மட்டங்களிலும் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக போதைப்பொருள் குற்றங்களைக் கட்டுப்படுத்தவென மரணதண்டனையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஏனென்றொல் முன்னொரு போதுமே இல்லாத அந்தளவுக்கு போதைப்பொருட்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் வந்து சேர்ந்த வண்ணமுள்ளன. தினமும் குறைந்தது ஒருவராவது போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படும் அளவுக்கு நிலைமை வளர்ச்சி பெற்று இருக்கின்றது. போதைப்பொருட்கள் தொடர்பில் கைது செய்யப்படுபவர்கள் ஒன்றில் அவற்றை விற்பனை செய்பவர்களாக அல்லது கடத்துபவர்களாக அல்லது பாவிப்பவர்களாக இருக்கின்றனர். இவ்வாறான நிலைமை அண்மைக்காலம் முதல்தான் இந்நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது.

இன்று கேரளா கஞ்சா, ஹெரொய்ன். கொக்கைய்ன், ஹஸீஸ் உட்பட போதை மாத்திரைகளாகப் பாவிக்கப்படும் வலிநிவாரண மாத்திரைகள் அடங்கலாகப் பல்வேறு விதமான போதைப்பொருட்களும் நாட்டுக்குள் வந்து சேர்கின்றன. இது ஒரு தீவு நாடாக இருப்பதால்தான் இவ்வாறு போதைப்பொருட்கள் அதிகளவில் வருவதாக கருதும் நிலைமை காணப்படுகின்றது. ஆனால் ஆகாய மார்க்கமாகவும் போதைப்பொருட்கள் வந்து சேர்வதையும் மறந்து விட முடியாதுள்ளது.

அண்மைக் காலமாகத்தான் இந்நாட்டுக்குள் போதைப்பொருட்களின் வருகை இவ்வாறு அதிகரித்துள்ளது. இது உள்நாட்டில் போதைப்பொருள் பாவனையாளர்களில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பின் வெளிப்பாடு அல்ல. மாறாக போதைப்பொருள் கடத்தல் கும்பல் இந்நாட்டை தளமாகக் கொண்டு அவற்றை வேறு நாடுகளுக்கு கடத்த முயற்சிக்கின்றனர் என்ற கருத்தும் நிலவுகின்றது.

ஆனால் இவ்வாறு போதைப்பொருட்கள் நாட்டுக்குள் வந்து சேர்வது ஆரோக்கியமானதல்ல. இதில் இரு கருத்துக்கு இடமிருக்க முடியாது. போதைப்பொருட்களை கடத்துபவர்களும் விற்பனை செய்பவர்களும், பாவிப்போரும் நாட்டில் அதிகரித்துள்ளனர் என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

இவ்வாறான நிலையில் அண்மைக்காலமாகப் பதிவாகும் சம்பவங்கள் பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் விற்பனையாளர்கள் இலக்கு வைத்திருப்பதற்கான சமிக்ைஞகளை வெளிப்படுத்தும் வண்ணம் உள்ளன. அதாவது பாடசாலைகளுக்கு அருகில் மாவா, உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட இடங்களைப் பாதுகாப்பு தரப்பினர் ஏற்கனவே கைப்பற்றியுள்ளனர்.

இன்னும் சில இடங்களில் போதைப்பொருட்கள் பாவித்திருந்த நிலையில் மாணவர்கள் வகுப்பாசிரியர்களால் இனம் காணப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் சில இடங்களில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக மாணவர்களை இலக்கு வைத்து விற்கப்பட்ட சம்பவங்களும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. அத்தோடு நாட்டின் சில இடங்களில் மாணவர்களை இலக்கு வைத்து கேரளா கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருடகள் விற்பனை செய்யப்படும் இடங்கள் இன்னும் இயங்கிக் கொண்டிருப்பதையும் பாதுகாப்பு தரப்பினர் அடையாளம் கண்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் குளியாப்பிட்டியிலுள்ள முன்னணிப் பாடசாலையொன்றின் காவலளர் ஒருவர் ஆறு பக்கட்டுகள் ஹெரொய்னுடன் பொலிஸாரினால் நேற்று காலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் பரவலாக ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் பாடசாலைக் காவலரிடமே ஹெரொய்ன் பக்கட்டுகள் இரு-க்கின்றது என்றால் அதனைப் பாவிக்கும் மாணவர்களும் அந்தப் பாடசாலையில் இருக்கின்றனர் என்பது தான் அர்த்தம். ஹெரொய்ன் பாவிக்கும் மாணவர்கள் பாடசாலையில் இருக்கின்றார்கள் என்றால் அங்கு கல்வி பயிலும் ஏனைய மாணவர்களின் நிலைமை என்னவாகும். இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இதேவேளை குறித்த பாடசாலைக் காவலரிடம் ஹெரெய்ன் கைப்பற்றப்பட்டமை அந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் மத்தியில் மாத்திரமல்லாமல் எல்லா பெற்றோர்கள் மத்திலும் பெரும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் போதைப்பொருட்கள் வியாபாரிகள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துள்ளனரா என்ற ஐயத்தையும், கேள்வியைளயும் ஏற்படுத்தியுள்ளது. அது நியாயமான கேள்வியும் கூட. அதாவது இந்நாட்டில் சுமார் 43 இலட்சம் மாணவர்கள் பாடசாலைகளில் கல்வி பயிலுகின்றனர். அவர்களை இப்பாவனைக்கு பழக்கி விடுவதன் மூலம் அதிக இலாபம் பெற முடியும் என போதைப்பொருட் வர்த்தகர்கள் எதிர்பார்ப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது-. இது பெரும் வேதனைக்கும் கவலைக்கும் உரிய நிலையாகும்.

இன்றைய பாடசாலை மாணவர்கள் தான் இந்நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்க இருப்பவர்களாவர். இவர்களைப் போதைப்பொருட்களுக்கு அடிமையாக்கி அவர்களது எதிர்காலத்தை அழித்து சீரழிக்க சதி இடம்பெறுகின்றதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஆகவே ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளின் நடத்தை பழக்க வழக்கம் மற்றும் நட்பு குறித்து மிகுந்த விழிப்புடன் இருந்து செயற்பட வேண்டும். இது காலத்தின்அவசியத் தேவையாக மாறியுள்ளது.அப்போது தான் போதைப்பொருட்களின் பிடியிலிருந்து தம் பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

 


Add new comment

Or log in with...