ஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு | தினகரன்

ஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு

எகிப்து முன்னாள் ஜனாதிபதி மொஹமது முர்சி பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் இருந்து இராணுவ தளபதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் ஒன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி இந்த வன்முறைகள் தொடர்பில் வழக்குகளில் இருந்து தப்புவதற்கான இராணுவ அதிகாரிகளின் பெயர் பட்டியலை தற்போதைய ஜனாதிபதி அப்துல் பத்தா அல் சிசி வெளியிடவுள்ளார். 2013 ஜூலை தொடக்கம் 2014 ஜுன் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் குறித்த அதிகாரிகளுக்கு சட்டத்தில் பாதுகாப்ப அளிக்கப்படுகிறது. இந்த சட்டம் கடந்த திங்கட்கிழமை எகிப்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கட்டது.

இந்த காலப்பிரிவில் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளில் 1000க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.

இதன்போது தற்போது எகிப்தில் தடை செய்யப்பட்டிருக்கும் முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் மற்றும் மிதவாதிகள், மதச்சார்பற்றோரும் பாதுகாப்பு படையினரின் ஒடுக்குமுறைக்கு இலக்காகினர்.

எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்வான முதல் ஜனாதிபதியான முர்சி 2013 ஆம் ஆண்டு சிசி தலைமையிலான இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார். இதற்கு பின்னர் இடம்பெற்ற வன்முறை எகிப்தின் நவீன வரலாற்றில் அதிக உயிரிழப்புக் கொண்டதாக இருந்தது.


Add new comment

Or log in with...