எல்லைமீறிய சமூக சீர்கேடுகளால் உருவான வேதனையின் வெளிப்பாடு | தினகரன்

எல்லைமீறிய சமூக சீர்கேடுகளால் உருவான வேதனையின் வெளிப்பாடு

மரணதண்டனை விதிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள், வியாபாரிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்காக தூக்கிலிடுபவர் வேலைக்கு இலங்கை அரசு நேர்முகத் தேர்வினை நடத்த உள்ள நிலையில், தூக்குத் தண்டனைக் கைதிகளை தூக்கிலிடும் வேலைக்கு 71 வயது மூதாட்டி ஒருவர் தானாக முன்வந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் இலங்கை குடியேற்ற நாடாக இருந்த போது, இலங்கை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 285-வது பிரிவின்படி, மரணதண்டனையும் தண்டனைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகும் மரணதண்டனை இலங்கை சட்டப் புத்தகத்தில் அப்படியே தொடர்ந்தாலும் 1956-ம் ஆண்டு தூக்குத் தண்டனையை அப்போதைய பிரதமர் பண்டாரநாயக்க ரத்து செய்து உத்தரவிட்டார். பண்டாரநாயக்க கொல்லப்பட்ட பிறகு 1959-இல் மீண்டும் தூக்குத் தண்டனை விதிக்கும் சட்டம் இலங்கையில் அமுலுக்கு வந்தது. ஆனால் 1978-ம் ஆண்டுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த இலங்கை ஜனாதிபதிகள் மரணதண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பிக்க மறுத்து விட்டனர்.

42 ஆண்டுகள் கழித்து வரலாறு மீண்டும் திரும்புகிறது. சிறுவர் பாலியல் வன்கொடுமை, கொலைகள், போதைப் பொருள் விற்பனை போன்றவை இலங்கையில் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் மரணதண்டனையை அமுல்படுத்த வேண்டும் என பொதுமக்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதால் கடந்த 10ம் திகதியன்று இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்காக மரணதண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.

இலங்கையில் கொழும்பு வெலிக்கடை, மஹர, பல்லேகலை, அனுராதபுரம், பதுளை ஆகிய சிறைச்சாலைகளில் தற்போது 373 தூக்குத் தண்டனைக் கைதிகள் உள்ளனர். இதில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள், வியாபாரிகள் 18 பேரை தூக்கிலிட இலங்கை சிறைத்துறை சார்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தூக்கிலிடும் பணிக்கு புதிய நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அறிவிப்பினை 2015-ம் ஆண்டு இலங்கை சிறைத்துறை அறிவித்த போது இதற்காக 24 பேர் விண்ணப்பித்து 14 பேர் நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தனர். இதில் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு நியமன உத்தரவு வழங்கப்பட்டும் பணிக்கு எவரும் வரவே இல்லை. தற்போது வெற்றிடமாக உள்ள தூக்கிலிடுபவர் பணிக்கான ஆள்தேர்விற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என இலங்கை சிறைத்துறை ஆணையாளர் துஷார உப்பில்தெனிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தூக்கிலிடும் பணிக்கு இலங்கையில் ஆள் கிடைக்காத பட்சத்தில் தூக்கிலிடும் வேலைக்கு 71 வயதான மூதாட்டி ஒருவர் ஒருவர் தானாக முன்வந்துள்ளார்.

இது குறித்து புத்தளம் மாவட்டம், ஆராச்சிக்கட்டு பகுதியைச் சேர்ந்த கருணாவதி எனும் 71 வயது மூதாட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், "இலங்கையில் போதைப்பொருள் கடத்துபவர்கள், சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கட்டாயம் மரணதண்டனை வழங்க வேண்டும். இலங்கையில் தூக்கிலிடுபவருக்கான பணி நீண்ட ஆண்டுகளாக வெற்றிடமாகவே உள்ளது. இதற்கு யாரும் விண்ணப்பிக்காததால் குற்றச்செயல்களும் அதிகரித்து வருகின்றன. தூக்கிலிடும் பணிக்கு யாரும் வராவிட்டால் தூக்குத் தண்டனை கைதிகளை நானே தூக்கிலிடுகிறேன். இதற்காக எனக்கு அரசு சம்பளம் தரத் தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மரணதண்டனையை நிறைவேற்றும் இலங்கை அரசின் முடிவுக்கு சர்வதேச பொதுமன்னிப்பு சபை உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

(BBC)


Add new comment

Or log in with...