சமூக வலைத்தள செய்தியில் உண்மையில்லை | தினகரன்

சமூக வலைத்தள செய்தியில் உண்மையில்லை

சமூக வலைத்தள செய்தியில் உண்மையில்லை-Gotabaya Rejected Presidential Candidate News

 

முற்றிலும் பிழையான மக்களை திசைதிருப்பும் செய்தி - பேஸ்புக்கில் கோத்தாபய

தான் 2020 இல் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அபேட்சகராக போட்டியிடவுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என கோத்தாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ கணக்கில் இது தொடர்பில் அறிவித்துள்ள அவர், இச்செய்தி முற்றிலும் பிழையானது எனவும், மக்களையும் தமது அரசியல் பங்காளிகளையும் பிழையாக வழி நடத்தும் வகையிலும், அவர்களின் மனநிலையை குழப்புவதற்காகவும் ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி இதுவாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கையெழுத்துடன் நேற்றைய (17) திகதியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியான ஊடக அறிக்கை வருமாறு...

"2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், போட்டியிடுபவர் யார் என்பது தொடர்பில், ஊடகங்களில் மாத்திரமன்றி மக்களும் என்னிடம் அடிக்கடி எழுப்பும் கேள்வியாகும். உங்கள் அனைவரதும் ஆர்வத்தை நிறைவுக்கு கொண்டு வரும் வகையில், இன்று அதற்கான பதிலை வழங்குவது சிறப்பு என நான் நினைக்கிறேன்.

2020 ஜனாதிபதித் தேர்தலில் எமது தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் வேறு யாருமன்றி, கௌரவ மகா சங்கத்தினர் உள்ளிட்ட இலங்கையராகிய உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பான, எனது சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள், என நான் உங்கள் அனைவருக்கும் இத்தால் மிக மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்."

 


Add new comment

Or log in with...