மீட்கப்பட்ட 7 மீனவர்களும் விமானம் மூலம் இலங்கை வருகை | தினகரன்

மீட்கப்பட்ட 7 மீனவர்களும் விமானம் மூலம் இலங்கை வருகை

உறவினர்கள் கதறியழுது வரவேற்பு

காலி மீன் பிடித்துறைமுகத்திலிருந்து கடற்தொழிலுக்குச் சென்று கடந்த 30ம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்த சிந்து -2 மீன்பிடி படகில் இருந்த 7 மீனவர்களும் நேற்றுக் காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தில் வந்திறங்கிய மீனவர்களை வரவேற்க வந்திருந்த உறவினர்கள் கட்டித்தழுவி, கதறியழுதது உணர்வுபூர்மாக இருந்தது. நீண்ட நாட்களாக கடலில் தத்தளித்து கொண்டிந்த மீன் பிடி படகை அமெரிக்க விமானம் கண்டு பிடித்து மாலைதீவு அரசாங்கத்திற்கு அறிவித்ததையடுத்தே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மேற்படி படகின் மின்கலத்தொகுதி செயலிழந்ததால் படகுக்கும் நிலப்பரப்புக்குமான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் மீனவர் படகு தொடர்பில் தகவல்கள் பெற முடியாதிருந்தது.

இதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் அமைச்சு மேற்கொண்ட போதும் அது பயனளிக்கவில்லை. இந்நிலையில் வெளிநாட்டு அமைச்சு, மாலைதீவு தூதுவராலயம், கடற்றொழில் அமைச்சு போன்றவற்றின் தலையீட்டையடுத்து இந்த மீனவர்கள் நேற்று மீள நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பிய மீனவர்கள்:

எஸ்.எச்.ஏமந்த, டபிள்யு. ரோஹன, அசேல சமந்த, சுசில் ப்ரீனித், தமிந்த குலரத்ண, கலிந்து திலங்க, ஜனித் பிரசங்க ஆகியோரே சிந்து -2 படகில் கடற்றொழிலுக்குச் சென்றவர்களாவர். இவர்கள் சீனிகம வெரலன பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

ஜூன் 14ம் திகதி காலி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சிந்து- 2 படகில் சென்றிருந்தனர். இறுதியாக ஜூன் 29ம் திகதி பிற்பகல் 5 மணிக்கே தகவல்கள் பறிமாறப்பட்டுள்ளன. அதன் பின்னர் 3 நாட்களுக்கு பின்னர் எந்த தகவலும் கிடைத்திருக்கவில்லை. இந்த படகு மாலைதீவு கடற்கரைப் பகுதியில் தரித்திருந்துள்ளது.

அமெரிக்க கடற்பாதுகாப்பு செயலணி, இந்திய பாதுகாப்பு செயலணி, மாலைதீவு பாதுகாப்பு செயலணி, மாலைதீவிலுள்ள இலங்கை தூதுவரலாயம், இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், கடற்படை, வெளிநாட்டு அமைச்சு, கடற்தொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம் ஆகியன மீனவர்களை மீட்கும் பணியில் பெரும் பங்களிப்பு செய்துள்ளன.

மேற்படி மீனவர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக கடற்றொழில் திணைக்களம் 4,40,000 ரூபாவை வெளிநாட்டு அமைச்சினூடாக மாலைதீவிலுள்ள இலங்கை தூதுவராலயத்துக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.

நேற்று இலங்கை திரும்பியுள்ள சிந்து- 2 படகில் இருந்து 7 பேரும் கடற்றொழில் மற்றும் நீரியல் துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா மற்றும் பிரதியமைச்சர் திலிப் வெதாஆராச்சி ஆகியோரை அமைச்சில் சந்தித்துள்ளனர். (ஸ)


Add new comment

Or log in with...